நெல்லை: காணாமல்போன திமுக கவுன்சிலர்களை கண்டுபிடித்து கொடுத்தால் பொங்கல் பரிசு - பாஜக கிண்டல் போஸ்டர்
காணாமல்போன திமுக கவுன்சிலர்களை கண்டுபிடித்து கொடுத்தால் பொங்கல் பரிசு - பாஜக கிண்டல் போஸ்டர்
நெல்லை மாநகராட்சி மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் 38 பேர் ஒன்றிணைந்து நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்த நிலையில் இன்று மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கான கூட்டம் நடத்தப்பட்டது. இதில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த திமுக மாமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சியை சேர்ந்த அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் என எந்த ஒரு மாநகராட்சி மன்ற உறுப்பினர்களும் பங்கேற்கவில்லை. இந்த சூழலால் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்தது. குறிப்பாக கூட்டத்தில் கோரம் இல்லை என மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
அதனால் தற்போதைய மாநகராட்சி மேயர் சரவணன் தொடர்ந்து மேயராக செயல்படுவது உறுதியானது. மேலும் ஓராண்டு காலத்திற்கு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் முற்றிலும் இல்லாத நிலையும் உருவானது. இந்த சூழலில் நெல்லை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த திமுக உறுப்பினர்கள் கூட தீர்மானம் தொடர்பான கூட்டத்தில் கலந்து கொள்ளாததை சுட்டிக்காட்டும் வகையில் பாஜக சார்பில் நெல்லை மாநகர் முழுவதும் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.
அதில் காணவில்லை ! காணவில்லை ! நெல்லை மாநகராட்சியில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த திமுக கவுன்சிலர்களை காணவில்லை தகவல் சொல்பவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என கவுன்சிலர்களை கிண்டலடித்து நெல்லை வடக்கு மாவட்ட பாஜக தச்சநல்லூர் மண்டல தலைவர் இப்போஸ்டரை ஒட்டியுள்ளார். தொடர்ச்சியாக மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில் மேயரை மாற்றக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற இருந்த நிலையில் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் என திமுக நிர்வாகிகளே ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் அனைவரையும் இன்பச் சுற்றுலா அழைத்துச் சென்ற நிலையில் இன்றைய கூட்டத்தில் பங்கேற்காததால் பாஜக சார்பில் அவர்களை கிண்டலடித்து இந்த போஸ்டர் ஒட்டப்பட்டதாகவே பார்க்கப்படுகிறது.
இந்த போஸ்டரால் நெல்லை மாநகர பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எது எப்படியோ இனியாவது தங்களுக்குள் பிரச்சனை செய்து கொள்ளாமல் மக்கள் பிரச்சினைக்காக மன்ற கூட்டத்தில் குரல் கொடுத்து அவர்களுக்கான தேவையை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என பலரும் புலம்பி செல்கின்றனர்.