‘ஆண்களை மட்டும் குறி வைத்து விரட்டும்’ ..நெல்லையில் சமூக ஆர்வலர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு
இவர்களை கட்டுப்படுத்த பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத வார்டு உறுப்பினர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு எங்களது கோடான கோடி நன்றிகள்.
![‘ஆண்களை மட்டும் குறி வைத்து விரட்டும்’ ..நெல்லையில் சமூக ஆர்வலர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு Nellai news social activist created a stir with a funny poster to attract the attention of the Nellai Corporation TNN ‘ஆண்களை மட்டும் குறி வைத்து விரட்டும்’ ..நெல்லையில் சமூக ஆர்வலர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/23/d5c2cc79b7650448820e64ed31ccbec21700736349548571_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
செல்லப் பிராணிகள் என்பது மனிதனின் வாழ்வியலோடு ஒன்றிய உயிரினங்கள் ஆகும். நாட்டில் பெரும்பாலானோர் தங்கள் வீடுகளில் நாய், பூனை, முயல், கிளி, ஆடு, மாடு போன்றவற்றை வளர்த்து வருகின்றனர். ஆனால் அதே செல்லப் பிராணிகள் மனித உயிர்களுக்கு சில நேரங்களில் தீங்கு விளைவிப்பதாக மாறிவிடுகிறது. குறிப்பாக சாலைகளில் சுற்றி திரியும் ஆடு, மாடுகளால் ஏற்படும் விபத்துக்கள், சாலைகளில் சுற்றித்திரியும் நாய்கள் சில நேரங்களில் வெறிப்பிடித்து மனிதர்களை கொலை வெறியோடு தாக்குவது போன்ற சம்பவங்களும் நடைபெற்று தான் வருகின்றது. தெருக்களில் நடமாடும் நாய்களால் கடிபட்டு பலரும் பெரும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். எனவே சாலைகள், தெருக்களில் நாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என தொடர்ந்து மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தும் வருகின்றனர். அதன்படி மாநகராட்சியும் அவ்வப்போது வண்டிகளில் நாய்களை பிடித்து செல்கின்றனர். இருப்பினும் மீண்டும் நாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுவதால் மாநகராட்சியின் இந்த நடவடிக்கை பெயரளவிற்கு மட்டுமே இருப்பதாக குற்றச்சாட்டும் எழுந்து வருகின்றது.
குறிப்பாக நெல்லை மாநகரப் பகுதியில் நாய்கள் தொல்லை கடந்த சில மாதங்களாக அதிகரித்து காணப்படுகிறது. நெல்லை சந்திப்பு, மேலப்பாளையம், டவுண், பாளையங்கோட்டை போன்ற பகுதிகளில் நாய்கள் தொல்லையால் மக்கள் நாள்தோறும் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் வெறி நாய்கள் கடித்து பலர் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இது போன்ற சூழ்நிலையில் நெல்லை 36வது வார்டில் நாய் தொல்லையை கட்டுப்படுத்தாத மாநகராட்சியை கண்டிக்கும் வகையில் சமூக ஆர்வலர் சிராஜ் என்பவர் நகைச்சுவையாக சுவரொட்டி ஒன்றை அப்பகுதியில் ஒட்டியுள்ளார். அதில் 36 வது வார்டை கலக்கிக் கொண்டிருக்கும் அன்பு குழுவின் உறுப்பினர்கள் என்ற தலைப்பை வைத்து ஆரம்பித்துள்ளார். அதன் கீழ் வரிசையாக விதவிதமாக நாய்களின் புகைப்படங்களோடு அவற்றின் பெயர், வயது, குணம் மற்றும் அந்த நாய்களால் கடிப்பட்டவர்களின் எண்ணிக்கையை கற்பனையோடு பதிவிட்டுள்ளார். குறிப்பாக புண்ணியமூர்த்தி, கலத்தூர் தட்சிணாமூர்த்தி, வழுவக்குடி சுந்தரமூர்த்தி, கலத்தூர் காலனிதெரு சத்திய மூர்த்தி, வேலக்குடி ராமமூர்த்தி என்று நாய்களுக்கு கலக்கலான பெயர்களையும் சூட்டியுள்ளார்.
மேலும் அதன் குணங்களாக சண்டை இழுத்தல், கடித்து வைத்தல், ஆண்களை மட்டும் குறி வைத்து விரட்டுதல், சங்கத் தலைவனாக பாவித்தல், பதுங்கி இருந்து விரட்டுதல் என குறிப்பிட்டு கடிபட்டவர்கள் எண்ணிக்கையும் முன்னிலைப்படுத்தியுள்ளார். அதோடு இறுதியாக இவர்களை கட்டுப்படுத்த பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத வார்டு உறுப்பினர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு எங்களது கோடான கோடி நன்றிகள் என வஞ்சப்புகழ்ச்சி அணியில் முடித்துள்ளார். சமூக ஆர்வலர் சிராஜ் என்பவர் ஒட்டியுள்ள இத்தகைய போஸ்டர் அப்பகுதியை கடந்து செல்லும் மக்களிடம் ஒருவகை சிரிப்பலையை ஏற்படுத்தினாலும் நாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய மாநகராட்சி அதிகாரிகளுக்கு பாடம் புகட்டும் விதமான நூதன போஸ்டர் யுத்தமாகவே பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)