பொது சிவில் சட்டம் ஒரு மதத்தை சார்ந்தவர்களுக்கு எதிரானதா..? - ஆளுநர் தமிழிசை கொடுக்கும் விளக்கம்
பொதுசிவில் சட்டத்தின் உண்மையை புரிந்துக்கொண்டு எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் கூட அதை ஆதரிக்க ஆரம்பித்து உள்ளனர்.
நெல்லை மாவட்டம் அரிகேசவநல்லூரில் உள்ள அரியநாதர் திருக்கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக நெல்லை மாவட்டம் வருகை தந்த புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலுங்கானா மாநில ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு நெல்லை மாவட்ட விருந்தினர் மாளிகையில் மாநகர காவல் துறை சார்பில் காவல் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் ஆளுநருக்கு புத்தகம் வழங்கி வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறும் பொழுது, "எல்லாரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பது தான் சமூக நீதி. ஒரு வீட்டில் நான்கு நபர்கள் இருந்தால் தனித்தனியாக அவர்களுக்கு சட்டம் இருக்க முடியாது. அதனாலேயே அனைவருக்கும் சமமான பொதுச்சிவில் சட்டம் கொண்டுவரப்படுகிறது. ஆனால் பொது சிவில் சட்டம் ஒரு மதத்தை சார்ந்தவர்களுக்கு எதிரானது என்பதை போன்று ஒரு தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. அப்படி இல்லை, அச்சட்டத்தின் உண்மையை புரிந்துக்கொண்டு எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் கூட அதை ஆதரிக்க ஆரம்பித்து உள்ளனர். உதாரணமாக டெல்லி முதலமைச்சர் ஆதரித்துள்ளார். ஏன் சரத்பவார் போன்றவர்கள் கூட இதைப்பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம் என கூறி உள்ளனர். அதனால் இந்த பொதுச்சிவில் சட்டம் இந்த கால கட்டத்திற்கு அவசியமானது என்பதை தான் பிரதமர் சொல்கிறார். நாம் அதை தவறாக புரிந்து உள்ளோம். மேலும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் உள்ள முத்தலாக் சட்டத்தை கூட சிலர் அரசியல் ஆக்கி வருகின்றனர். நேற்று நடந்த விழாவில் கூட ஆன்மீகம் உலகிற்கு வழிகாட்டுகிறது. இந்தியாவை வளர்க்கிறது என்று பிரதமர் சொல்லியிருக்கிறார். அதை நாம் பின்பற்ற வேண்டிய ஒன்று. எந்த மதமாக இருந்தாலும் சரி என்றார். மலைவாழ் மக்கள் இன்னும் முழுமையாக முன்னேறவில்லை, அவர்களுக்கான உரிமைச் சட்டம் இருக்கிறது. பொது சிவில் சட்டத்திலிருந்து மலைவாழ் மக்களுக்கு சில விலக்குகள் அளிக்கப்படலாம்.
மத்திய நதிநீர் ஆணைய கூட்டத்தில் கலந்து கொண்ட போது எந்த விதத்திலும் புதுவைக்கு கிடைக்கின்ற தண்ணீர் குறைத்து விட கூடாது என அதற்கென ஒரு அதிகாரியை நியமித்து சொல்லியிருக்கிறோம். ஒரு கட்சி ஆட்சி செய்யும் பொழுது ஒரு மாநிலத்தில் மேகதாதுவை பற்றி பேசினாலே அது தவறு என்பதை போல சூழ்நிலை இருக்கிறது. நமக்குள்ள உரிமையை பெற்று தருவதில் கூட எந்த கட்சி கர்நாடாகாவை ஆளுகிறது என்று ஒரு சூழ்நிலையை நோக்கி தான் இங்குள்ளவர்கள் ரியாக்ட் செய்கிறார்களோ என்று எனக்கு கவலையாக இருக்கிறது.
பாண்டிச்சேரியில் நான் துணைநிலை ஆளுநர், தெலுங்கானாவில் ஆளுநர். துணை நிலை ஆளுநருக்கு என்று வரையறைகள் நியமிக்கப்பட்டுள்ளது. அதனால் அதற்கு ஏற்றார் போல் நான் செயல்படுகிறேன், அங்குள்ள மக்களுக்கு என்ன நல்லதோ அதை நான் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் வைத்திலிங்கம் ஏதோ ஒரு குற்றச்சாட்டை சொல்லியிருக்கிறார். அவர்கள் குற்றச்சாட்டு சொல்லும் அளவிற்கு நான் இல்லை. தெளிவான நடைமுறையோடு அங்குள்ள மக்களுக்கான நல்ல திட்டங்களை கொண்டு வந்து கொண்டு இருக்கிறோம். அரசியலைப்பு சட்ட ரீதியாக துணை நிலை ஆளுநருக்கு என்று ஒரு அதிகாரம் உள்ளது. அதை தான் நாம் பயன்படுத்துகிறோம் என்றார். கேஸ் விலை உயர்வு தொடர்பாக பாண்டிச்சேரியில் அமைச்சர் ஒருவர் முற்றுகையிடப்படுகிறார் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், புதுச்சேரியை பொறுத்தவரை சிலிண்டருக்கு 300 ரூபாய் மானியம் பெறுகின்றனர்.. அதுமட்டுமின்றி 1000 ரூபாயும் பெறுகின்றனர்.. புதுச்சேரியில் மக்களுக்கு சலுகைகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது முற்றுகை சம்பவம் எது போன்ற சூழலில் நடந்தது என்பது எனக்கு தெரியவில்லை" என தெரிவித்தார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்