இதுதான் அந்த அறிவிப்பு; உலகுக்கே இரும்பை அறிமுகம் செய்த தமிழ்நாடு; ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
சுமார் 5300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நிலப்பரப்பில் இரும்பு அறிமுகம் ஆகியுள்ளது. கி.மு. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் நிலப்பரப்பில்தான் இரும்பின் காலம் தொடங்கியது என்ற ஆய்வுப் பிரகடனத்தை அறிவிப்பதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் அறிவித்துள்ளார்.
இந்தியத் துணைக் கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும் 'இரும்பின் தொன்மை' எனும் நூலை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டார். தொடர்ந்து கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். மற்றும் கீழடி இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.
கீழடி இணையதளம் தொடக்கம்
இணையவழி மூலமாக கீழடி அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்க்கும் வகையில் மெய்நிகர் சுற்றுலா உருவாக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:
’’தமிழ் நிலப்பரப்பில்தான் இரும்பின் காலம் தொடங்கியது என்ற ஆய்வுப் பிரகடனத்தை அறிவிக்கிறேன். சுமார் 5300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நிலப்பரப்பில் இரும்பு அறிமுகம் ஆகியுள்ளது. கி.மு. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதை ஆய்வு முடிவுகளாகவே அறிவிக்கிறேன். தமிழக தொல்லியல் துறையின் அகழாய்வு மாதிரிகள், உலகின் தலைசிறந்த ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. புனே, அகமதாபாத், ஃப்ளோரிடா பகுதிகளில் உள்ள புகழ்பெற்ற ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், பகுப்பாய்வு முடிவுகள் ஆய்வாளர்களுக்கு புது உத்வேகத்தை அளித்துள்ளது.
உலக அளவில் இரும்புத் தாதுவில் இருந்து இரும்பைப் பிரித்து எடுக்கும் தொழில்நுட்பம் தமிழ்நாட்டில்தான் தொடங்கியது. இது தமிழும் தமிழ் இனத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் கிடைத்த பெருமை’’ என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

