நெல்லை: நரிக்குறவர்களின் நூதன வழிபாடு..! பாவாடை, இடுப்பில் சலங்கையுடன் ஆக்ரோஷ ஆட்டம்..! 5 ஆண்டுக்குபின் நடந்த திருவிழா..!
இந்த வழிபாட்டில் திருப்தியடையும் தெய்வங்கள் எங்களை நோய் நொடியின்றி நல்ல முறையில் வைத்திருப்பதோடு நல்ல மழைவளத்தையும், செல்வத்தையும் தரும் என்ற நம்பிக்கை வழிபாடு.
நரிக்குறவ மக்கள் திருவிழா:
நெல்லையை அடுத்த பேட்டை எம்ஜிஆர் நகர் பகுதியில் நரிக்குறவர் காலனி அமைந்துள்ளது. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட நரிக்குறவ மக்கள் குடும்பத்தோடு வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் பொருளாதார தேவைக்காக தற்சமயம் மதுரை, சிவகங்கை, திருப்பத்தூர், திண்டுக்கல், அறந்தாங்கி, அருப்புக்கோட்டை, திண்டிவனம், தஞ்சாவூர் என பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். பிழைப்புக்காக பிரிந்து சென்றாலும் பேட்டையில் உள்ள அட்டகாளியம்மன் கோயில் விழாவில் ஒன்று கூடுவார்கள். இந்நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு பேட்டை அட்டகாளியம்மன் கோயில் திருவிழா துவங்கி நடந்து வருகிறது. இதை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த நரிக்குறவர்கள் கடந்த 20 நாட்களுக்கு முன்பாக பேட்டை எம் ஜி ஆர் காலனியில் குவிந்தனர்.
எருமை கடா & ஆடுகள் பலியிடுதல்:
இத்திருவிழாவில் நரிக்குறவர்கள் எருமை கடா மற்றும் ஆடுகளை பலி கொடுப்பது வழக்கம். எனவே சில நாட்களுக்கு முன்பே 47 எருமை கடாக்கள், பெரிய அளவிலான வெள்ளாடுகளை விலை கொடுத்து வாங்கி தங்கள் வீடுகளில் வளர்க்கத் துவங்கினர். விழாவின் தொடக்க நிகழ்வாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பெருமாள் சாமிக்கு ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு மண்பானையில் பொங்கலிட்டு சிறிய அளவிலான வெள்ளாடுகளை பலி கொடுத்து படையல் செய்து சாமிக்கு படைத்து உண்டு மகிழ்ந்தனர். நேற்று இரவு அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் , மாவிளக்கு பூஜை, மைதா, ரவை ,சீனி போன்றவற்றின் கலவையால் ரொட்டி சுட்டு படையல் செய்தனர்.
உடலில் இரத்தத்துடன் ஆக்ரோஷ ஆட்டம்:
தொடர்ந்து மதுரை மீனாட்சி, கருப்பசாமி தெய்வங்களுக்கு வெள்ளாடுகளையும், அட்ட காளியம்மனுக்கு எருமை கடாக்களையும் பலி கொடுத்து அதன் ரத்தத்தைக் கோவில் முன்பாக தோண்டப்பட்டிருந்த சிறிய அளவிலான குழியில் சேகரித்து அதில் சாமியின் திருவுருவத்தை அபிஷேகம் செய்து தொடர்ந்து தங்களது உடல் முழுவதும் பூசிக் கொண்டனர். அப்போது சிறுவர்கள் உள்பட பலர் இடுப்பில் சலங்கை மற்றும் பாவாடை கட்டி கொண்டு ஆக்ரோஷமுடன் சாமியாட்டம் ஆடினர் பின்னர் பலி கொடுத்த எருமைக்கடா மற்றும் வெள்ளாட்டு கடாக்களின் குருதியை குடித்து மகிழ்ந்தனர். இது அவர்களின் குலத் தொழிலான வேட்டையாடி விருந்துண்ணும் நிகழ்வை சுட்டிக் காட்டும் விதமாக அமைந்தது. முன்னதாக தங்களது குல தெய்வ வழிபாட்டில் குலத்தொழிலான வேட்டையாடும் கருவிகளை வைத்து வழிபாடு செய்தனர். நிகழ்ச்சியை காண சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். பலி கொடுத்த எருமை கடா மற்றும் வெள்ளாடுகளுக்கு தீப ஆராதனை நடத்திய பின்னர் அவற்றை அறுத்து சாமிக்கு படையல் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. சிகர நிகழ்ச்சியாக இன்று மாலை பெண்கள் கலந்துகொண்டு தாம்பூலத்தில் பலி கொடுத்த எருமை கிடா மற்றும் வெள்ளாடுகளின் ரத்த கலவையை எடுத்து அதன் மேல் அவற்றின் தலைகளை வைத்து முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி ஆடல் பாடலுடன் நடக்கிறது.
இந்த வழிபாடு ஏன்?
இது குறித்து நரிக்குறவர்கள் கூறுகையில், இந்த வழிபாட்டு முறையானது எங்களது பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக நடைபெறுகிறது. எங்களின் குலத்தொழில் வேட்டையாடுதல். நாங்கள் முற்காலத்தில் வேட்டையாடி பத்திரமாக திரும்பும் நிகழ்விற்காக எங்களது குல தெய்வங்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடுகிறோம். மேலும் இந்த வழிபாட்டில் திருப்தியடையும் தெய்வங்கள் எங்களை நோய் நொடியின்றி நல்ல முறையில் வைத்திருப்பதோடு நல்ல மழைவளத்தையும், செல்வத்தையும் தரும் என்று தெரிவித்தனர். மேலும் 5 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இத்திருவிழாவிற்கு 2 கோடி ரூபாய் வரை பணம் செலவு செய்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்