பெருந்துறையில் சுட்டு பிடிக்கப்பட்ட கொலை குற்றவாளிகளுக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை
ரவுடிகள் அரிவாளை காட்டி போலீசாரை தாக்க முற்பட்டு தப்பித்துள்ளனர். இதனை அடுத்து துப்பாக்கிச் சூடும் நடைபெற்றுள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்தவர் சிவா என்ற சுப்ரமணியன். இவர் மீது சுமார் 25க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், கஞ்சா விற்பனை உள்ளிட்ட வழக்குகள் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், திருச்சி மாவட்டங்களில் உள்ளது. இதில் ஆறு கொலை வழக்குகளில் கடந்த ஒரு வருடமாக இவர் தேடப்பட்டு வருகிறார். இந்த நிலையில் நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மேல காடுவெட்டி பகுதியை சேர்ந்த இசக்கி பாண்டி என்பவரை கடந்த நவம்பர் 22 ஆம் தேதி இவர் கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் சுப்ரமணியனை உதவி ஆய்வாளர் ஆன்ட்ரோ பிரதீப் தலைமையிலான நெல்லை மாவட்ட தனிப் படையினர் தேடி வந்தனர். இந்த நிலையில் குற்றவாளிகள் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கொல்லம்பாளையம் என்ற இடத்தில் சிவா என்ற சுப்ரமணியன், முத்து மணிகண்டன், சூர்யா, வசந்தகுமார் மற்றும் இசக்கி பாண்டி ஆகியோர் அங்கு பதுங்கி இருப்பதாக நெல்லை மாவட்ட தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து உதவி ஆய்வாளர் ஆண்டோ பிரதீப் தலைமையில் காவல்துறையினர் நேற்று மதியம் அவர் தங்கி இருந்த வீட்டை முற்றுகையிட்டு அவரைப் பிடிக்க முற்பட்டுள்ளனர். அப்பொழுது ரவுடிகள் அரிவாளை காட்டி போலீசாரை தாக்க முற்பட்டு தப்பித்துள்ளனர். இதனை அடுத்து துப்பாக்கிச் சூடும் நடைபெற்றுள்ளது.
சம்பவம் நடந்த இடம்
துப்பாக்கி குண்டுகள் அவர்கள் மீது படாமல் சுவரில் பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது சம்பந்தமாக பெருந்துறையில் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளர் ஆண்டோ பிரதீப் புகார் கொடுத்துள்ளார். இந்த நிலையில் தனிப்படை போலீசார் தப்பி ஓடிய சுப்ரமணியன் உள்பட ஐந்து பேரை விரட்டி பிடித்து கைது செய்துள்ளனர். இதில் காவலர்கள் பிடிக்கும்போது தப்பி ஓடிய நிலையில் சிவா என்ற சுப்பிரமணியனுக்கும், முத்து மணிகண்டனுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. எனவே அவர்கள் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த கொலை வழக்கில் கைதான சூர்யா, வசந்தகுமார், இசக்கி பாண்டி ஆகியோரை களக்காடு காவல் நிலையத்தில் வைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல ரவுடி மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது