Nellai Mayor Election: பரபரப்பிற்கு பஞ்சமில்லாத நெல்லை மேயர் தேர்தல்..! நடந்தது என்ன??
” நெல்லை மாநகராட்சியில் புதிய மேயர் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் காலை முதலே பரபரப்பிற்கு பஞ்சமில்லாத பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது”
நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய மேயர் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது. ஆளுங்கட்சியான திமுக அதிக இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில் 25 வது வார்டு உறுப்பினர் ராமகிருஷ்ணன்( எ) கிட்டு திமுகவின் மேயர் வேட்பாளராக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளார். காலை 10 மணிக்கு வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில் கவுன்சிலர்கள் தேர்தலுக்கு வரத்தொடங்கினர். மொத்தம் 55 கவுன்சிலர்கள் உள்ள நிலையில் இதில் 51 கவுன்சிலர்கள் திமுக மற்றும் கூட்டணி கட்சியைச் சார்ந்தவர்களாக உள்ளனர். மீதமுள்ள நான்கு கவுன்சிலர்கள் அதிமுக கவுன்சிலர்கள் ஆவர். எனவே திமுக வேட்பாளர் போட்டி வேட்பாளர் இன்றி வெற்றி பெறுவார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் மற்றொரு திமுக கவுன்சிலரான 6 வது வார்டை சேர்ந்த பவுல்ராஜ் திடீரென வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.
இவர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட நிலையில் சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்துள்ளார். திமுக கட்சி அறிவித்த நபர் மட்டுமே மனு தாக்கல் செய்வார். எனவே தேர்தல் நடைபெறாது என எதிர்பார்த்த நிலையில் புதிதாக பவுல்ராஜ் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இருவரின் மனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேர்தல் நடைபெறுமென தேர்தல் நடத்தும் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனால் நெல்லை மாநகராட்சி தேர்தல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தேர்தல் வேலைகள் மும்மரமாக நடந்து கொண்டிருக்கும் சூழலில் அடுத்த பரபரப்பு முன்னாள் மேயர் சரவணன் மிகவும் தாமதமாக தேர்தலில் கலந்து கொள்வதற்காக வருகை தந்தார். மாநகராட்சி அலுவலகத்தின் நுழைவு வாசலில் காரில் செல்ல சரவணனுக்கு முதலில் போலீசார் அனுமதி மறுத்தனர். பின்னர் அனுமதி அளித்த பிறகு மின்னல் வேகத்தில் காரில் வந்திறங்கிய சரவணன் வேக வேகமாக தேர்தல் நடைபெறும் அரங்கிற்குள் செல்ல முயன்றார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார் நேரம் முடிந்து விட்டது. எனவே அதிகாரிகளிடம் கேட்டு சொல்கிறோம், கொஞ்சம் காத்திருங்கள் என தெரிவித்தனர். இதனால் சுமார் ஐந்து நிமிடம் சரவணன் அங்கையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார்.
பின்னர் அருகில் மண்டல தலைவர் மகேஸ்வரி அறையில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் இருப்பதை அறிந்து சரவணன் அவரை அந்த அறைக்குள் சென்று சந்தித்தார். பின்னர் சட்டமன்ற உறுப்பினர் தரப்பிலும் சரவணனை உள்ளே விடும்படி காவலர்களிடம் கேட்டபோது நேரம் முடிந்து விட்டதால் அனுமதி கிடையாது என அதிகாரிகள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து தேர்தலில் கலந்து கொள்ள முடியாமல் சரவணன் மண்டல தலைவர் அறையில் காத்திருந்தார். ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப் அணிக்கும், தற்போதைய திமுக மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான் அணிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் போக்கால் தான் சரவணனின் மேயர் பதவி பறிபோனது. சரவணன் மைதீன்கான் அணியில் இருந்தார். இது போன்ற நிலையில் பதவி பறிபோன பிறகு சரவணன் தற்போது அப்துல்வகாப்பை தனி அறையில் சந்தித்து பேசி இருப்பது திமுக வட்டாரத்தில் திருப்பத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையில் கால தாமதமாக வந்ததற்கான காரணத்தை சரவணன் எழுத்துப்பூர்வமாக தேர்தல் அதிகாரிகளிடம் வழங்கியதை தொடர்ந்து சுமார் 15 நிமிடத்திற்கு பிறகு அவர் தேர்தலில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டார்.. இந்த சூழலில் தற்போது அனைவரும் வாக்களித்த நிலையில் புதிய மேயரை தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் வாக்கெடுப்பு முடிவடைந்து தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடந்து வருகிறது.