நெல்லை: மீன்வளத்துறை அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர் கைது
அரசு அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் சுருக்குமடி வலையை பயன்படுத்த கடந்த 2000ஆம் ஆண்டு தமிழக அரசு தடை விதித்திருந்தது. இதனை எதிர்த்து மீனவ மக்கள் ஒரு சிலர் உயர் நீதிமன்றத்தை நாடிய நிலையில் அரசின் உத்தரவை நீதிமன்றம் உறுதி செய்தது. குறிப்பாக நெல்லை மாவட்ட கடற்கரையில் 10 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த மீனவ கிராமங்களில் ஏற்கனவே நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இடையே விசைப்படகுகள் மூலம் மீன் பிடிப்பது தொடர்பாக அவ்வப்போது மோதல் சூழ்நிலை இருந்து வருகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு மாவட்ட அளவிலான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் விதமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அவ்வப்போது தீர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்ட கடற்கரை மீனவ கிராமங்களில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையில் மீன் பிடிப்பதற்கு நடப்பு காலம் வரை அனுமதிக்கப்படாமல் இருக்கிறது. எனினும் ஒரு தரப்பு மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதால் குறுகிய கால இடைவெளியில் மீன்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பது அச்சத்திற்குரியதாகும்.
இதுபோன்று சுருக்குமடி மீன் வலைகளை தடை செய்யும் நோக்கில் ராதாபுரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே ராதாபுரம் மீன்வளத்துறை ஆய்வாளர் உத்தண்டராமன், உவரி கடற்கரை பகுதிகளில் சுருக்குமடி வலையில் மீன் பிடிப்பது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொண்டார். அங்கு சில மீனவர்கள் சுருக்கும்படி வலையை பயன்படுத்தி மீன்களை பிடிப்பதை அறிந்து, அதற்கு தடை விதித்தார். இதனையடுத்து ஒரு தரப்பு மீனவர்கள் சார்பில் அந்தோணிராய் என்பவர், மீன்வளத்துறை அதிகாரியிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது காவல்துறையினர் முன்பே அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்தார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானதோடு இதுகுறித்து உவரி போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அந்தோணிராய் என்பவர் மீன்வள ஆய்வாளரை அவதூறாக பேசி மீன்களை பறிமுதல் செய்யக்கூடாது என கூறி அரசு பணியினை செய்ய விடாமல் தடுத்து மிரட்டல் விடுத்ததாக தற்போது கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். அரசு அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்