கூடங்குளத்தில் பாறை இடுக்கில் சிக்கிய மிதவை கப்பல்..... 10 நாட்களாக மீட்பு பணியில் பின்னடைவு
மும்பை துறைமுகம் பகுதியில் இருந்து வந்துள்ள ஸ்கூபா டைவர்கள் மிதவை படகு சுற்றியுள்ள கடல் பகுதிகளில் உள்ள பாறைகளை ஆழ்கடல் கேமராக்கள் மூலம் படம் எடுத்து சேதாரங்களை புகைப்படம் எடுத்து ஆராய்ந்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு நிதி உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடந்து வருகிறது. மேலும் நான்கு அணு உலைகள் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. 5 மற்றும் ஆறாவது அணு உலைகள் கட்டுமான பணிகள் சுமார் 49 ஆயிரத்து 621 கோடி ரூபாயில் நடைபெற்று வருகிறது. வருகிற 2027 ஆம் ஆண்டுக்குள் இதன் கட்டுமான பணிகள் முடிந்து மின் உற்பத்திகள் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த சூழலில் இந்த அணு உலைகளுக்கான சுமார் 26 ஆயிரம் கோடி ரூபாய்க்கான முக்கிய உதிரி பாகங்கள் ரஷ்யாவில் இருந்து கடல் மார்க்கமாக தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்து அங்கிருந்து கூடங்குளம் அணுமின் நிலைய வளாகப் பகுதிகளுக்குள் உள்ள சிறிய துறைமுகத்திற்கு மிதவை கப்பல் மூலமாக எடுத்து வரப்பட்டு வருகிறது. ஏற்கனவே உக்ரைன்- ரஷ்ய போரின் காரணமாக இந்த அணு உலைகளுக்கு வரவேண்டிய உதிரி பாகங்கள் வருவதில் மிகுந்த கால தாமதம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. இதனால் இதன் திட்ட காலம் மேலும் சில ஆண்டுகள் ஆகும் எனவும் 2030ல் தான் மின் உற்பத்தி தொடங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த சூழ்நிலையில் கடந்த மாதம் முதல் முக்கிய உதவிப் பாகங்கள் ரஷ்யாவில் இருந்து அதிக அளவில் வரத்துவங்கியுள்ளன. இவை தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்கி வைக்கப்பட்டு அங்கிருந்து கடலின் தட்ப வெப்ப நிலைகள், கடல் சீற்றம், கடலின் நீரோட்டம் வானிலை மாற்றம் ஆகியவற்றை ஆராய்ந்து அதன் பின் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கூடங்குளத்திற்கு எடுத்துவரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இழுவை கப்பல் மூலமாக ஐந்து மற்றும் ஆறாம் அணு உலைகளுக்கான தலா 310 டன் எடை கொண்ட ஸ்டீம் ஜெனரேட்டர்கள் இரண்டு மிதவை கப்பலில் வைத்து கடல் மார்க்கமாக கடந்த 8 ஆம் தேதி எடுத்து வரப்பட்டன.
கடந்த எட்டாம் தேதி மாலை கூடங்குளம் அணுமின் நிலைய சிறிய துறைமுக நுழைவுப் பகுதியில் வரும் பொழுது இழுவை படகின் பின்னால் இழுத்து வரப்பட்ட பார்ஜி எனப்படும் மிதவை கப்பல் பாறை இடுக்கில் சிக்கியதினால் இழுவை கப்பலில் உள்ள உலோகத்திலான கயிறு அறுந்து விட்டது. அப்போது அடித்த கடல் அலையின் காரணமாக மிதவை படகின் ஒரு பகுதியானது அருகில் இருந்த பாறையின் ஒரு பகுதியில் அமர்ந்து சரிந்த நிலையில் காணப்பட்டது. இதனை மீட்கும் பணிகள் கடந்த 10 தினங்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னை மற்றும் மும்பை துறைமுகங்களிலிருந்து தொழில் நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு மிதவை கப்பலில் ஏற்பட்ட சேதாரம் சரி செய்யப்பட்டு சாய்ந்த நிலையில் இருந்த மிதவைக்கப்பல் ஒருபுறத்தில் நீர் ஏற்றி அதனை சமன்படுத்தினர். பாறை இடுக்கில் சிக்கி இருந்த மிதவை கப்பலின் மேலே உள்ள ஸ்டீம் ஜெனரேட்டர்களில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? ஸ்டீம் ஜெனரேட்டர்களுக்கும் மிதவை கப்பலுக்கும் இடையிலான வெல்டிங் பகுதிகளில் ஏதாவது விரிசல் ஏற்பட்டுள்ளதா என்பது பற்றி ஆய்வுகள் செய்யப்பட்டு அதன் ஆய்வு அறிக்கைகளை தொழில் நுட்ப வல்லுநர்கள் இந்திய அனுமின் உற்பத்திக் கழகத்திற்கு சமர்பித்தனர். இந்த உபகரணங்கள் அனைத்தும் முழுவதும் காப்பீடு செய்யப்பட்டுள்ளதினால் காப்பீட்டுக் கழகத்தின் உயர் அதிகாரிகளும் கூடங்குளத்திற்கு விரைந்து வந்து இதன் மீட்பு பணிகளை கண்காணித்தனர்.
மிதவை படகை இழுப்பதற்கான 30 டன் இழுவை திறன் கொண்ட இழுவை கப்பல் கிடைக்காததினால் மேலும் 15 டன் விசைத்திறன் கொண்ட அதிநவீன இழுவை படகானது இலங்கை கொழும்பு துறைமுகத்திலிருந்து கொண்டுவரப்பட்டது. ஆனால் அந்த முயற்சியும் தோல்வி அடைந்தது. இதனை அடுத்து இலங்கையில் இருந்து வந்த அதிநவீன இழுவை படகின் மாலுமிகள் மேலும் ஒரு இழுவை படகு இருந்தால்தான் பாறையில் சிக்கியுள்ள மிதவை படகை மீட்க முடியும் என தெரிவித்தார். இதனை அடுத்து மேலும் ஒரு அதிநவீன இழுவை படகானது இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகத்தில் இருந்து கூடங்குளம் சிறிய துறைமுகத்திற்கு வர திட்டமிட்டனர். இதற்கிடையில் பாறையில் சிக்கியுள்ள அணு உலைக்கான ஸ்டீம் ஜெனரேட்டரை ஏற்றி வந்த மிதவைப் படகை மீட்பதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடல் சீற்றத்தில் பாதிக்கப்பட்டு மிதவை படகில் பல இடங்களில் சேதம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாறையின் மேல் சரிந்த நிலையில் இருந்த மிதவை படகில் சமன்படுத்தி நிறுத்தி வைத்த சில மணி நேரங்களிலே மிதவை படகின் ஒரு புறத்தில் கடல் நீர் உட்பகுந்ததால் மீண்டும் சரிந்தது. இதனால் சுமார் 600 கோடி ரூபாய் மதிப்பிலான நீராவி உற்பத்தி கலன் சேதமடைய வாய்ப்புள்ளதாகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே இலங்கையில் இருந்து கூடுதலாக வர இருந்த அதிநவீன இழுவை படகு வருவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மும்பை துறைமுகம் பகுதியில் இருந்து வந்துள்ள ஸ்கூபா டைவர்கள் மிதவை படகு சுற்றியுள்ள கடல் பகுதிகளில் உள்ள பாறைகளை ஆழ்கடல் கேமராக்கள் மூலம் படம் எடுத்தும் மிதவைப் படகுகளில் ஏற்பட்டுள்ள சேதாரங்களையும் புகைப்படம் எடுத்து ஆராய்ந்து வருகின்றனர். இழுவை கப்பல் மூலம் பாறை இடுக்கில் சிக்கிய மிதவை கப்பலை மீட்பதற்கு பதிலாக கடற்கரையில் இருந்து சுமார் 300 அடி தொலைவில் தண்ணீருக்குள் பாறை இடுக்கில் சிக்கி உள்ள மிதவைக்கப்பல் வரை கல், மண் நிரப்பி சாலை அமைத்து நீராவி ஜெனரேட்டரை கிரேன் மூலம் மீட்கலாம் என தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒன்பது நாட்கள் தாண்டியும் பாறையில் சிக்கிய மிதவை கப்பலில் இருந்து நீராவி ஜெனரேட்டரை மீட்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.