எதிர்காலத்தில் இயற்கை பேரிடர்களை எதிர்கொள்வது குறித்து பெருந்திட்டம் தயாரிக்கப்படுகிறது - நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன்
நமது மாவட்டம் ஐந்திணைகளை ஒருங்கே பெற்ற மாவட்டம். ஐந்திணைகளையும், நீர் நிலைகளையும் பாதுகாக்கும் பொறுப்பும் நமக்கு உள்ளது - ஆட்சியர் கார்த்திகேயன்
பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை சார்பில் நெல்லையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பருவநிலை மாற்றம் குறித்த ஒருநாள் பயிலரங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இந்த பயிலரங்கை தொடங்கி வைத்து ஆட்சியர் கார்த்திகேயன் பேசுகையில், "பருவநிலை மாற்றம் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் நமது நெல்லை மாவட்டமும் ஒன்று. பெருமழை வெள்ளம் ஏற்பட்டு 7 நாட்களுக்கு மேலாக பொதுமக்களின் இயல்பு வாழ்கை பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. பருவநிலை மாற்றம் காரணமாக மழை, வெள்ள பேரிடர்களும் புதிது புதிதாக மாற்றம் அடைந்து அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. உதாரணமாக நெல்லை மாவட்டத்தில் 1992- ம் ஆண்டு ஏற்பட்ட பேரிடரின் போது மலைப் பகுதியில் மட்டும் மழை பெய்தது. புயல் காற்று வீசியது, சமவெளியில் மழை இல்லை, அதேபோல 2021- ம் ஆண்டு பெரிய பாதிப்பு இல்லை, 2023- ம் ஆண்டு ஏற்பட்ட பேரிடரில் மலைப்பகுதி, சமவெளிப்பகுதி, கடல் முகத்துவாரம் ஆகிய பகுதிகளில் ஒரே நேரத்தில் மழை பெய்தது. 80 சென்டி மீட்டர் வரை மழை பெய்தது.
இதுபோன்று ஆண்டு தோறும் பேரிடர்களும் கணிக்க முடியாத அளவில் மாற்றம் பெற்று வருகிறது. நமது மாவட்டம் 90 சென்டிமீட்டர் மழை வரை சந்தித்து உள்ளது. இனி வருங்காலத்தில் இயற்கை பேரிடர்கள் எப்படி இருக்கும் அதை எதிர்கொள்வது எப்படி, கரையோரப் பகுதிகளை எப்படி பாதுகாப்பது, நமது மாவட்டம் ஐந்திணைகளை ஒருங்கே பெற்ற மாவட்டம். ஐந்திணைகளையும், நீர் நிலைகளையும் பாதுகாக்கும் பொறுப்பும் நமக்கு உள்ளது. இவை குறித்தும் எதிர்காலத்தில் இயற்கை பேரிடர்களை எதிர்கொள்வது குறித்தும் பெருந்திட்டம் தயாரிக்கப்படுகிறது" என தெரிவித்தார்.
தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுனர்கள் கலந்து கொண்டு பருவநிலை மாற்றம், இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள நம்மை தயாரிபடுத்திக்கொள்வது குறித்து பேசினர். இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் தாக்ரேசுபம் ஞானதேவராவ் மாவட்ட வன அதிகாரி முருகன், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர்கள் இளையராஜா, ராமேஸ்வரன், மற்றும் அரசுதுறையினர், சமூக ஆர்வலர்கள், மாணவ மாணவிகள், உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.