Nellai: திமுக எம்பி ஞானதிரவியம் மீது வழக்குப்பதிவு, கட்சி தலைமை நோட்டீஸ் - என்ன காரணம்.?
விளக்கத்தையும், செயல்பாடுகளையும் 7 நாட்களுக்குள் தலைமை கழகத்திற்கு நேரிலோ தபால் மூலமோ தெரிவிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
நெல்லை திருமண்டலம் சிஎஸ்ஐ கிறிஸ்தவ டயோசீசன் பிஷப்பாக பர்னபாஸ் செயல்படுகிறார். திருமண்டல நிர்வாக பணிகளை கவனிக்கும் லே செயலாளராக ஜெயசிங் என்பவர் உள்ளார். ஜெயசிங் ஆதரவில் தான் பர்னபாஸ் பிஷப் ஆனதாக தெரிகிறது. இருப்பினும் கடந்த சில நாட்களாக லே செயலாளர் ஜெயசிங் மற்றும் பிஷப் பர்னபாஸ் இடையே நிர்வாக ரீதியாக முரண்பாடுகள் ஏற்பட்டு மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நெல்லை திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம் சிஎஸ்ஐயில் முக்கிய பொறுப்பில் உள்ளார். லே செயலாளர் ஜெபசிங் ஆதரவாளர் என சொல்லப்படுகிறது. எம்பி ஞான திரவியம் திருமண்டல கல்வி நிலவரக்குழு செயலராகவும், ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி தாளாளராகவும் பதவியில் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் திருமண்டல கூட்டம் நடைபெறும் அரங்கில் பிஷப் பர்னபாஸ் சிசிடிவி கேமராக்கள் பொருத்தியுள்ளார். தன்னிடம் கேட்காமல் ஏன் சிசிடிவி கேமராக்கள் பொருத்தினீர்கள் என அப்போதே பிஷப் பர்னபாசிடம் சண்டையிட்டு உள்ளார். மேலும் பிராபர்ட்டி ரூம் எனும் திருமண்டல சொத்துக்களை பாதுகாக்கும் அறையை எம்பி ஞான திரவியம் பூட்டு போட்டு பூட்டிவிட்டார். எம்பி ஞான திரவியத்தின் தன்னிச்சையான இந்த செயல்பாடுகளுக்கு தடைபோடும் விதமாக எம்.பி.ஞான திரவியத்தை திருமண்டல கல்வி நிலவரக் குழு செயலர் மற்றும் ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி தாளாளர் பதவியில் இருந்தும் கடந்த சில தினங்களுக்கு முன் பிஷப் நீக்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நேற்று நெல்லை சிஎஸ்ஐ டயோ சீசன் அலுவலகத்திற்கு பிஷப் காட்ப்ரே நோபிள் சென்றுள்ளார். இவர் பிஷப்பின் ஆதரவாளர். இவர் ஏற்கனவே எம்பி ஞான திரவியம் மீது திமுக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதனால் திமுக எம்பி ஆதரவாளர்கள் நேற்று சிஎஸ்ஐ அலுவலகம் வந்த மத போதகர் காட்பிரே நோபிளை அடித்து தாக்கி ஓட ஓட விரட்டினர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளான மத போதகர் காட்பிரே நோபிள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் எம்.பி ஞான திரவியம் மற்றும் அவரது ஆதரவாளர்கள மீது புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து விசாரணை தொடங்கிய பாளையங்கோட்டை காவல் நிலைய அதிகாரிகள், திமுக எம்பி ஞான திரவியம் மற்றும் லேசெயலாளர் ஜெயசிங் மற்றும் சொத்து நிர்வாக அதிகாரி மூன்றடைப்பு ஜான், ஆடிட்டர் மைக்கேல் உட்பட 33 பேர் மீது 147 - சட்ட விரோதமாக கூட்டம் சேர்த்தல், 294 b - பொதுஇடத்தில் பிறருக்கு தொல்லை தரும் வகையில் செயல்படுதல், 323 - தன்னிச்சையாக காயப்படுத்தும் செயலில் ஈடுபடுவது, 109 - குற்றம் செய்ய தூண்டி விடுதல், 506 (1) - மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் விடுவது என 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து திமுக எம்பி ஞான திரவியம் கழக வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்படுவதாக தலைமை கழகத்திற்கு புகார் சென்றதை தொடர்ந்து கட்சி கட்டுப்பாட்டை மீறி அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் இதுகுறித்த விளக்கத்தையும், செயல்பாடுகளையும் 7 நாட்களுக்குள் தலைமை கழகத்திற்கு நேரிலோ தபால் மூலமோ தெரிவிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் விளக்கம் கேட்டு திமுக எம்பி ஞான திரவியத்திற்கு நோட்டீஸ் அனுப்பிள்ளார்.