இந்தியாவிலேயே நம்பர் 1 மாநகராட்சியாக நெல்லையை ஆக்குவேன்- மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற ராமகிருஷ்ணன்
நெல்லை மேயரானார் சைக்கிளில் வலம் வரும் சாதாரண தொண்டனான ராமகிருஷ்ணன்...!
மாநகராட்சியின் புதிய மேயருக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது. ஆளுங்கட்சியான திமுக அதிக இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில் 25 வது வார்டு உறுப்பினர் ராமகிருஷ்ணன்( எ) கிட்டு நேற்று அமைச்சர்கள் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு திமுக மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் காலை 10 மணிக்கு வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில் கவுன்சிலர்கள் தேர்தலுக்கு வரத் தொடங்கினர். மொத்தம் 55 கவுன்சிலர்கள் உள்ள நிலையில், இதில் 51 கவுன்சிலர்கள் திமுக மற்றும் கூட்டணி கட்சியைச் சார்ந்தவர்களாக உள்ளனர். மீதமுள்ள நான்கு கவுன்சிலர்கள் அதிமுக கவுன்சிலர்கள் ஆவர். இந்த சூழலில் திமுக வேட்பாளர் போட்டி வேட்பாளர் இன்றி வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மற்றொரு திமுக கவுன்சிலர் 6 வது வார்டை சேர்ந்த பவுல்ராஜ் தனது வேட்புமனுவை திடீரென தாக்கல் செய்தார். இவர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட நிலையில் சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்தார். திமுக கட்சி அறிவித்த நபர் மட்டுமே மனு தாக்கல் செய்வார் எனவே தேர்தல் நடைபெறாது என எதிர்பார்த்த நிலையில் புதிதாக பவுல்ராஜ் மனு தாக்கல் செய்திருப்பதால் இருவரின் மனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேர்தல் நடைபெறுமென தேர்தல் நடத்தும் அலுவலகம் தெரிவித்தனர். அதன்படி தேர்தல் நடைபெற்ற நிலையில்
திரு. ராமகிருஷ்ணன் என்ற கிட்டு பெற்ற வாக்குகள் - 30
திரு. பவுல்ராஜ் பெற்ற வாக்குகள் :- 23
செல்லாத வாக்கு -- 1
மாமன்ற உறுப்பினர் திரு.ஜெகன்நாதன் (ADMK) வரவில்லை. மொத்தமுள்ள 55 வாக்குகளில் 30 வாக்குகள் பெற்று ராமகிருஷ்ணன் என்ற கிட்டு மேயராக வெற்றி பெற்றார். தொடர்ந்து அவர் வெற்றி பெற்றதற்கான சான்று அளிக்கப்பட்டது. அதன்பின்னர் நெல்லை மேயராக வெற்றிபெற்ற ராமகிருஷ்ணன் என்ற கிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், என்னை நேற்று மேயர் வேட்பாளாராக அறிவித்தனர். ஆனால் இன்று கால சூழல் காரணமாக தேர்தல் நடைபெற்றது. இன்று ஒரு சிலர் எனக்கு வாக்களிக்கவில்லை, ஆனால் அவர்களும் எனக்கு வாக்களித்தது போலவே கருதுகிறேன். மொத்தமுள்ள 55 பேரும் எனது சகோதர, சகோதரிகளாக நினைத்து இந்த பணியை நான் துவங்க போகிறேன். நான் ஆரம்ப காலத்தில் இருந்தே 43 வருடமாக திமுகவில் பணி செய்து வருகிறேன். இந்த இடத்தில் நான் நிற்கிறேன் என்றால் பாளை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப்பின் முழு முயற்சியே காரணம். சைக்கிள் செல்லும் சாதாரண ஒரு தொண்டனை நெல்லை மேயராக ஆக்கியிருக்கிறார். இது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. மக்களுக்கு அடிப்படை பிரச்சினையான குப்பை பிரச்சினை அதனை சரிசெய்வேன். நெல்லை மாநகராட்சியை சென்னைக்கு சரிசமமாக உயர்த்துவேன். இந்தியாவிலேயே நம்பர் 1 மாநகராட்சியாக நெல்லை மாநகராட்சியை ஆக்குவேன் என்று தெரிவித்தார்.
திமுகவின் நடந்த கோஷ்டிபூசல் காரணமாக ஏற்கனவே மேயராக இருந்த சரவணன் மீது கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அவர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் ஒருவர் மேயராக வரும் சூழலில் பிரச்சினைகள் இன்றி சுமூகமாக மாநகராட்சியின் பணிகள் நடக்க வேண்டுமென்று அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே என் நேரு ஆகியோர் கவுன்சிலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி மேயர் வேட்பாளராக ராமகிருஷ்ணனை நிறுத்தினர். அதனை தாண்டி இன்று திமுகவில் இருந்து நீக்கப்பட்ட 6 வது வார்டு கவுன்சிலர் பவுல்ராஜ் வேட்புமனு தாக்கல் செய்ததோடு 55 உறுப்பினர்களில் 23 பேரின் ஆதரவை பெற்றிருப்பது பேசுபொருளாகி வருகிறது.