மேலும் அறிய
தடைகளை நிறைகளாக்குவோம் - தூத்துக்குடியின் தங்கமகள் ஆட்டிச நிலையாளர் முத்துமீனாளின் கதை..!
போட்டி ஒருபக்கம் என்றால், அதற்கு சென்று வரும் செலவு அதிர வைத்தது என்கிறார் முத்துமீனாளின் தாயார், 2018 நகைகளை அடகுவைத்து எடுத்துச்சென்ற பணத்தில்தான் தேசிய விருதை தனதாக்கினாள் என்றார்

முத்துமீனாள்.
தூத்துக்குடியை சேர்ந்த வெள்ளைச்சாமி, ஜெயலட்சுமி இருவரும் கூலி தொழிலாளிகள். இவர்களுக்கு இரு மகள்கள், மூத்த மகள் பிறந்தவுடன் குடும்பத்தில் மகிழ்ச்சி கரை புரண்டோடியது, ஆசையோடும் வாஞ்சையோடும் வளர்ந்த மூத்தமகள் முத்து மீனா ஆட்டிச நிலையாளர் எனத் தெரிந்தவுடன் அதிர்ந்து போயினர்.

முத்துமீனா சாதிக்க பிறந்தவளாக எண்ணி அவரது பெற்றோர் நம்பிக்கையோடு இருந்தனர். அதனால் 60 சதவீதம் ஆட்டீச நிலை கொண்ட தங்களின் மகளை சாதிக்க வைக்க துடித்தனர் பெற்றோர். ஆட்டீச நிலையாளரான முத்துமீனாள் தனது பெற்றோரின் முயற்சிக்கு ஒத்துழைக்கவில்லை, ஆனாலும் அவர்கள் முயற்சித்தனர். தட்ட தட்ட சிற்பம் என்பதையே கொண்டு தங்களது அன்பு மகளை செதுக்கினர் முத்துமீனாளின் பெற்றோர். முத்துமீனாளை அவள் விரும்பிய தளத்தில் கொண்டு வந்தனர். அதன் பலன் எட்டாக்கனியாக இருந்த விளையாட்டு ஆர்வம் முத்துமீனாளை கவர அவர்களது இல்லத்தை அலங்கரிக்க துவங்கியது முத்துமீனாளின் பதக்கங்கள். தற்போது கலை இலக்கியம் வரலாறு பிரிவில் இரண்டாமாண்டு பயின்று வரும் முத்துமீனாள் எல்லோரையும் போல் தனது தாய்க்கு உதவியாக வீட்டுப்பணிகளிலும் உதவுகிறார்
முத்துமீனாளுக்கு பிடித்த விளையாட்டு குண்டு எறிதல். கடந்தாண்டு பாட்னாவில் நடைபெற்ற குண்டு எறிதல் போட்டியில் தங்கத்தை பெற்ற அவர், வட்டு எறிதல், 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று தங்கத்தை தனதாக்கி கொண்டார் இந்த தங்கமகள். கடந்தாண்டு குண்டு எறிதல் போட்டியில் 8.5 மீட்டரை இலக்காக நிர்ணயித்தது விளையாட்டு ஆணையம். இதனை தகர்த்து எறியும் வகையில் 8.9 மீட்டர் தூரத்தை கடந்தார் முத்துமீனாள்.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று 27 தங்கம், நான்கு வெள்ளி, ஒரு வெண்கல பதக்கத்தையும் வென்று தனது வசமாக்கி கொண்டார் இந்த சாதனை பெண். தேசிய அளவில் 8 தங்கம், ஒரு வெள்ளி என தனது பதக்கப்பட்டியலை தொடர்ந்து கொண்டே இருக்கிறார். இவர் சாதனை ஒருபக்கம் என்றால் இவரை ஊக்குவிக்கும் பெற்றோரின் அர்ப்பணிப்பு அளப்பரியதாக உள்ளது. அரசு பள்ளியில் பயின்ற முத்துமீனாளுக்கு வரமென வந்தார், அவரது தலைமை ஆசிரியர் செந்தூர்கனி, முத்துமீனாளிடம்கனிவுடன் அக்கறை செலுத்தியதால், இன்று தூயமரியன்னை கல்லூரி காலத்திலும் ஆசிரிய பெருமக்கள் முத்துமீனாளை வாஞ்சையுடன் கவனித்து வருகின்றனர்.
போட்டி ஒருபக்கம் என்றால் அதற்கு சென்று வரும் செலவு அதிரவைத்தது என்கிறார் முத்துமீனாளின் தாயார், 2018 நகைகளை அடகுவைத்து எடுத்துச்சென்ற பணத்தில் தான் தேசிய விருதை தனதாக்கினாள் என சொல்லும் போது கண்கள் ஆனந்த கண்ணீர் துளிர்க்கிறது. 2019-ஆம் ஆண்டு அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியின் உதவியால் ஆட்சியர் நிதி உதவி பெற்றதை குறிப்பிடும் முத்துமீனாளின் தாயார், தொடர்ந்து மூன்றாண்டுகள் அவர் செய்த உதவியால் தங்கத்தை தனதாக்கினார் இந்த சாதனை பெண்.

முத்துமீனாள் சர்வதேச போட்டியில் பங்கேற்க வேண்டும், பாரா ஒலிம்பிக்கை தனதாக்க வேண்டும் என்ற பெற்றோரின் ஆசை , கனவு நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். ஆட்டீசம் குறைபாடல்ல, அது ஒரு நிலை மட்டுமே. முத்துமீனாள்கள் அதைப் புரியவைப்பார்கள்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















