கன்னியாகுமரி | இளைஞர்களின் திருமணத்தைத் தடுக்கும் முதியவர்; கடுப்பான இளைஞர்கள் அடித்த கலாய் போஸ்டர்..!
சம்பந்தப்பட்ட முதியவரின் புகைப்படத்துடன் அடித்த போஸ்டரில், திருமணம் விலக்குவோர் சங்கத்தலைவர் என்றும், தொழில் திருமணம் தடுத்தல் என சுய விபரக்குறிப்போடு போஸ்டர் அடித்து அப்பகுதி முழுவதும் ஒட்டியுள்ளனர்.
திருமண சம்பந்தங்களையெல்லாம் தடுத்து நிறுத்துபவரும், திருமண விலக்குவோர் சங்கத்தின் தலைவருக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள் என சம்பந்தப்பட்ட முதியவரின் புகைப்படத்தோடு கன்னியாகுமரி இளைஞர்கள் ஒட்டிய போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திருமணம் எல்லாம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். ஆனால் எங்களின் நிலை என்னவென்றெ தெரியவில்லை என்றும், இன்னும் திருமணமாகாமல் புலம்பிக்கொண்டிருக்கின்றனர் பல 90-ஸ் கிட்ஸ் இளைஞர்கள். நமக்கு இதுதான் விதி என்று நிலையில் இருந்து வரும் இவர்களுக்கு எப்பொழுதாவதுதான் திருமண வரன் கூடிவரும். ஆனால் அதனையும் ஏதோ ஒன்று சொல்லி தடுத்து நிறுத்தும் நபர்கள் ஒவ்வொரு ஊர்களிலும் இருக்கத்தான் செய்வார்கள் போலும். இப்படித்தான் கன்னியாகுமரியை சேர்ந்த மளிகைக்கடை வியாபாரி ஒருவர், அவர் வசிக்கும் பகுதியில் உள்ள இளைஞர்களின் திருமணத்தினைத் தொடர்ந்து ஏதோ ஒன்று சொல்லி தடுத்து நிறுத்தி வந்துள்ளார். இதனால் எரிச்சலான இளைஞர்கள் செய்த செயல் தற்பொழுது வைரலாகி வருகிறது.
அப்படி என்ன செய்தார்கள் தெரியுமா? பிச்சன் விளை, ஆயினி விளைப் பகுதியினைச்சேர்ந்த இளைஞர்களின் பல பேருக்கு திருமணம் நடைபெறாமல் இருந்துள்ளது. பல வரன்கள் வந்தாலும் எதுவுமே செட் ஆகவில்லை என புலம்பிக்கொண்டிருந்தப் பொழுது தான் அந்த ஊரில் பல சரக்கு வியாபாரக்கடை நடத்தி வரும் முதியவர்தான் இதற்கு ஒரு காரணம் என்று அறிந்து கொண்டனர். ஏனென்றால் திருமணம் வரன் பார்க்கும் நபர்கள் நிச்சயம் அக்கம்பக்கத்தினரிடம் இந்த பெண் எப்படி? இந்த மாப்பிள்ளை எப்படி? எனவெல்லாம் விசாரிப்பார்கள். அப்படித்தான் பிச்சன் விளை, ஆயினி விளைப்பகுதியைச்சேர்ந்த இளைஞர்கள் குறித்தும் அப்பகுதியில் பெண் வீட்டார்கள் விசாரித்து உள்ளனர்.
அந்நேரத்தில் எல்லாம் ஏதோ ஒன்று சொல்லி திருமணம் நடக்காமல் தடுத்துள்ளார். இதே வேலையினை தொடர்ச்சியாக பார்த்து வந்த நிலையில்தான் ஆத்திரமடைந்த அப்பகுதியினைச் சேர்ந்த இளைஞர்கள், திருமண சம்பந்தங்களை எல்லாம் முடக்குகின்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும் திருமணம் ஆகாத வாலிபர் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகள் என தெரிவித்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட முதியவரின் புகைப்படத்துடன் அடித்த போஸ்டரில், திருமணம் விலக்குவோர் சங்கத்தலைவர் என்றும், தொழில் திருமணம் தடுத்தல், உப தொழில் பல சரக்கு என சுய விபரக்குறிப்போடு போஸ்டர் அடித்து அப்பகுதி முழுவதும் ஒட்டியுள்ளனர். மேலும் இதுபோன்று செயல்களில் ஈடுபடும் பலரையும் எச்சரிப்பதாகவும் அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.
எந்த அளவிற்கு இளைஞர்கள் மனக்குமுறலுடன் இருந்து இருந்தால் இப்படி போஸ்டர்களை ஒட்டியிருப்பார்கள் என அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது. இதோடு வித்தியாசமான இந்த போஸ்டர்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகின்றன. இந்நிலையில்தான், இந்த போஸ்டர் விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட முதியவர் மற்றும் அவரது உறவினர்கள் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளதோடு, மான நஷ்ட வழக்குத் தொடரவுள்ளதாகவும் தெரிவித்துவருகின்றனர். ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள், “இப்படி எங்களது திருமணத்தினை தடுத்து நிறுத்துகிறீர்கள் என்றால் நாங்களே வாகன வசதி செய்து தருகிறோம்“, என்று மொட்டையாக போஸ்டர்கள் ஒட்டி இருந்தனர். ஆனால் தற்பொழுது சம்பந்தப்பட்ட நபரின் புகைப்படத்துடன் ஒட்டிய போஸ்டர்கள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.