கந்தசஷ்டி விழா : புகழ்பெற்ற திருச்செந்தூர் ஆலய வளாகத்தில் விரதம் இருக்க அனுமதியில்லை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் சஷ்டி விழாவில் சுமார் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் அக்டோபர் 25ம் தேதி யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி விழா துவங்குகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தாண்டு பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் 25ம் தேதி கந்த சஷ்டி திருவிழா தொடங்குவதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலந்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்திஸ் திருச்செந்தூர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், "திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் சஷ்டி விழா அக்டோபர் 25ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறுகிறது. திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவில் சுமார் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு வரும் பக்தர்களுக்கு நாள் ஒன்றுக்கு குறைந்தது ஐந்து லட்சம் லிட்டர் வீதம் அக்டோபர் 25ம் தேதி முதல் 31ம் தேதி வரை குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க குடிநீர் வடிகால் வாரியத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் நகர் முழுவதும் சுகாதாரமான முறையில் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யவும் நகர் பகுதிகளில் சேரும் குப்பைகளை அவ்வப்போது அகற்றவும், தற்போது மழை காலமாக இருப்பதால் ஈக்கள் மற்றும் கொசுக்கள் தொல்லை இல்லாமல் இருக்க நகர் பகுதி முழுவதும் மற்றும் கோயில் வளாகங்களில் கொசு மருந்து தெளிக்கவும் 24 மணி நேரமும் தூய்மை பணியில் செய்திடவும் திருச்செந்தூர் நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோயில் வளாகங்களில் சுற்றி தெரியும் நாய்களை பிடிக்க நகராட்சியின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் கோயில் வளாகம் குரும்பூர்-குரங்கன் தட்டு நீரேற்று நிலையம், திருச்செந்தூர் தெப்பக்குளம் நீரேற்று நிலையம் ஆகியவற்றுக்கு திருவிழா நடைபெறும் ஏழு தினங்களும் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கு மின்சார வாரியம் மூலம் ஏற்பாடு செய்யப்படும் என்றார். அக்டோபர் 30ம் தேதி நடைபெறும் சூரசம்காரத்தை காண வரும் பக்தர்களுக்கு வசதியாக திருநெல்வேலி தென்காசி மதுரை உள்ளிட்ட பல்வேறு தளங்களில் இருந்து 350 அரசு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும். சூரசம்காரம் என்று தெற்கு ரயில்வே மூலம் சென்னை மற்றும் திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கடற்கரைப் பகுதியில் கடல் பாதுகாப்பு வளையம் உயிர் மீட்பு படவுடன் தீயணைப்பு துறையினரும் மீன்வளத் துறையினரும் இணைந்து பணியாற்றுவார்கள் என்ற மாவட்ட ஆட்சியர், இந்த ஆண்டு சஷ்டி திருவிழாவில் கோவில் வளாகத்தில் விரதம் இருப்பதற்கு அனுமதி இல்லை என்றார்.
திருச்செந்தூர் சஷ்டி திருவிழா முன்னிட்டு கோயில் வளாகத்தில் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் மற்றும் அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கும் வசதி உயிர் காக்கும் மருந்துகளுடன் தயார் நிலையில் இருக்க மருத்துவத்துறை நடவடிக்கை மேற்கொள்ளும் திருவிழா காலங்கள் முழுவதும் கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கும் சூரசம்ஹார தினத்தன்று சிறப்பு விருந்தினர் காண்கிரீட் மேடையில் இருந்து நிகழ்ச்சியில் காணவும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திடவும் காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.