(Source: ECI/ABP News/ABP Majha)
நெல்லையில் தியாகி இம்மானுவேல் சேகரனார் உருவப் படம் - கிராம மக்கள் போராட்டம்
நெல்லையில் சுதந்திர போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனார் உருவபடத்தை எரித்து பெட்ரோல் குண்டு வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் மானூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ளது உக்கிரன்கோட்டை கிராமம். இங்குள்ள பிரதான சாலையில் சுதந்திர போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனாரின் உருவப்படம் இருந்து வந்தது. குறிப்பாக ஏற்கனவே அப்பகுதியில் இரு வெவ்வேறு சமுதாயத்தினருக்கிடையே அவ்வப்போது கருத்து வேறுபாடுகளும், மோதல்களும் தொடர்ந்து வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது, இந்நிலையில் நேற்று நள்ளிரவில் உக்கிரன் கோட்டையில் உள்ள இமானுவேல் சேகரன் உருவப்படத்தின் மேல் மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தி உள்ளனர். மேலும் அங்கு பெட்ரோல் குண்டுகளையும் வீசி சென்று உள்ளனர்.
அதனை காலை அங்குள்ள மக்கள் பார்த்துள்ளனர். அதன்பின்னர் அந்த ஊர் கிராம மக்கள் அனைவரும் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இம்மானுவேல் சேகரனாரின் உருவப்படத்திற்கு தீ வைத்து பெட்ரோல் குண்டை எரிந்து சென்றது குறித்து விளக்கம் தர கோரியும், இந்த செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தகவலறிந்த மானூர் போலீசார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டதோடு சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அசம்பாவித சம்பங்கள் நடைபெறாதவாறு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
அதோடு அங்கு எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாமல் இருப்பதற்காக நெல்லை மாநகர பகுதியில் இருந்து கூடுதல் போலீசாரும் மானூர் பகுதிக்கு வரவழைக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பின்னர் போலீசாரின் உதவியோடு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து விரைவில் குற்றவாளிகளை கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்ததன் பேரில் தற்காலிகமாக கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் மர்மநபர் ஒருவர் அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்லும் நபரை வழிமறித்து அதில் ஏறி செல்கிறார். இதனை வைத்து காவல்துறை விசாரணை நடத்திய நிலையில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசி எரித்த அந்த நபரை கைது செய்தனர். கைது செய்த நபர் அதே பகுதியை சேர்ந்த ராம்நாத் வயது 25 என தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் சூழலில் ராம்நாத் மீது ஐ. பி.சி 153,438,504 , கழகம் செய்ய தூண்டுதல் மற்றும் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். நெல்லையில் சுதந்திர போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனார் உருவபடத்தை எரித்து பெட்ரோல் குண்டு வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்த நிலையில் கிராம மக்கள் இணைந்து மீண்டும் அப்பகுதியில் அவரது உருவப்படத்தை வைத்து அதற்கு மலர் தூவி தங்களது மரியாதையை செலுத்தினர்..