வலுக்கட்டாயப்படுத்தி பெறப்பட்ட விருப்ப ஓய்வை வரும் 13ஆம் தேதிக்குள் ரத்து செய்யவில்லையெனில் பூட்டு போடுவோம் - கிருஷ்ணசாமி
"மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநிலஅரசு, மாஞ்சோலை தேயிலைத் தோட்ட விவகாரத்தில் இருந்து பின் வாங்கவில்லை என்றால் புதிய தமிழகம் கட்சியின் ஒவ்வொரு தொண்டரும் புலியாக மாறுவோம்"
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை பகுதியில் இருந்து தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுத்து வலுக்கட்டாயமாக அவர்களை வெளியேற்றுவதை கண்டித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியும், வலுக்கட்டாயப்படுத்தி தொழிலாளர்களை வெளியேற்றுவதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி, மாஞ்சோலை தேயிலை தொட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மறுமலர்ச்சிக்கு புதிய தமிழகம் கட்சியின் போராட்டம் ஒரு காரணமாக அமைந்துள்ளது. மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் விருப்பு ஓய்வு தொடர்பாக பலரும் அவர்களை சந்தித்து வரும் நிலையில் எந்த தீர்வும் கிடைக்காமல் தொழிலாளர்கள் வேதனை அடைந்து வருகின்றனர்.
வனத்துறையின் கட்டுப்பாட்டில் காப்புக்காடு பகுதியில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் அமைந்திருப்பதாக கூறி கிராமத்திற்கு செல்வதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநிலஅரசு, மாஞ்சோலை தேயிலைத் தோட்ட விவகாரத்தில் இருந்து பின் வாங்கவில்லை என்றால் புதிய தமிழகம் கட்சியின் ஒவ்வொரு தொண்டரும் புலியாக மாறுவோம் என தெரிவித்தார். மேலும் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் மாஞ்சோயிலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை தன்னிச்சையாக அவமானப்படுத்தி அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு வந்தால் எங்களது போராட்டத்தின் வடிவம் மாறும். ஒரு நிறுவனத்தை மூடினால் தொழிலாளர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்பது சட்ட விதி. மாஞ்சோலை தேயிலைத் தோட்ட நிறுவனம் மூடப்படும் நிலையில் தொழிலாளர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றால் ஒரு தொழிலாளிக்கு ரூபாய் ஐந்து முதல் பத்து கோடி வரை வழங்க வேண்டும். மாஞ்சோலையில் உள்ள தொழிலாளர்கள் நூறாண்டுகளுக்கு மேல் பல தலைமுறையாக வசித்து வருகின்றனர். அந்த மலை கிராமம் அனைத்தும் அவர்களது பூர்வீகமாக மாறிவிட்டது.
மாஞ்சோலை மலை கிராமத்தில் இருந்து வெளியேற வேண்டியது பிபிடிசி நிறுவனம் மட்டுமே தவிர தொழிலாளர்கள் கிடையாது. மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களிடம் வலுக்கட்டாயப் படுத்தி பெறப்பட்ட விருப்ப ஓய்வை வரும் 13ஆம் தேதிக்குள் ரத்து செய்யவில்லை என்றால் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்திற்கு பூட்டு போடுவோம் என தெரிவித்தார். மாஞ்சோலையில் இருந்து தொழிலாளர்களையும் பிபிடிசி நிறுவனத்தையும் வெளியேற்றிவிட்டு சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கு ஆட்சியில் இருக்கும் ஒரு குடும்பம் நினைத்து வருகிறது. மாஞ்சோலை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சொந்த ஊர் இதுதான். அப்படி இருக்கும் போது மாவட்ட ஆட்சியர் முகவரி மாற்றும் முகாமை நடத்தியுள்ளார். அதனை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் புறக்கணித்து ஐஏஎஸ் அதிகாரிக்கு தக்க பாடம் புகட்டி உள்ளனர். மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க டான் டீ நிறுவனம் அதனை எடுத்து நடத்த வேண்டும். அது முடியாத பட்சத்தில் அந்த தேயிலை தோட்டங்களை எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள் லாபகரமாக நாங்கள் அதனை நடத்தி காட்டுகிறோம்.
வாழ்க்கை இழந்தவர்களுக்கு தான் மறுவாழ்வு வழங்க வேண்டும். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது வாழ்வுரிமையை பறிக்க யாருக்கும் உரிமை கிடையாது. சொந்த நாட்டிலேயே மாஞ்சோலை மக்களின் வாழ்வுரிமையை பறித்து அவர்களை அகதிகளாக கீழே இறக்க நினைக்கிறார்கள். மாஞ்சோலை விவகாரத்தில் நடக்கும் அனைத்து செயலுமே சட்ட விரோதமானது. இந்த விவகாரத்தில் அரசும், ஆட்சித் தலைவரும் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் தென்தமிழகம் இயங்காத அளவில் மிகப்பெரிய போராட்டத்திற்கு தயாராவோம் என பேசினார்.