சுதந்திர தினத்தன்று சாலையில் குடியேறும் போராட்டம் - விவசாயிகள் சங்க அறிவிப்பால் தென்காசியில் பரபரப்பு
குறிப்பாக அளவுக்கு அதிகமாக கனிம வளங்கள் தோண்டி எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து வருகிறது.
தமிழக கேரள எல்லைப்பகுதியான செங்கோட்டை வழியாக கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதாக பல்வேறு தரப்பிரும் புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும் அதனை தடுக்க சோதனை சாவடி அமைத்து கண்காணிக்கும் பணி நடைபெற்று வந்தாலும் அதனையும் மீறி கனிம வளங்கள் கடத்தப்படுவதாக அவ்வப்போது புகார் எழுந்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கனிமவள கொள்ளையை தடுக்க கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நெல்லை மண்டல தலைவர் செல்லத்துரை தலைமையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது, அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் மலை வளம் அழிக்கப்பட்டு கனிம வளம் சட்டவிரோதமாக கேரளாவிற்கு ராட்சத லாரிகள் மூலம் கடத்தப்பட்டு வருகிறது.
இதனை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு, மாநில குழு கூட்டம் கடந்த மே 14, 15 தேதிகளில் குற்றாலத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தென்காசி முதல் புளியரை வரை விவசாயிகள் சாலையில் குடியேறும் போராட்டத்தை நடத்த முடிவெடுத்துள்ளோம். இது குறித்து ஏற்கனவே உரிய அரிவிப்புகளை செய்துள்ளோம். இதனை ஏற்று தமிழக முதல்வர் கனிம வளம் கடத்தப்படுவதை தடுக்க உரிய உத்தரவுகளை பிறப்பித்து அதற்கான அறிவிப்புகளை வெளியிட வேண்டும். இதனை உடனடியாக தடுத்து நிறுத்த தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் முன்வர வேண்டும், இல்லையெனில் சுதந்திர தினத்தன்று சாலையில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக அளவுக்கு அதிகமாக கனிம வளங்கள் தோண்டி எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் விவசாயம் செய்ய வழியில்லாமல் விவசாயிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே விவசாயத்தை காக்கும் பொருட்டு கனிம வளத்தை தடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நெல்லை மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் அனைவரும் ஒன்று திரண்டு இந்த போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சுதந்திர தினத்தன்று அனைத்து விவசாயிகளும் ஒன்று திரண்டு மிகப்பெரிய அளவில் சாலையில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும் என்ற அறிவிப்பால் தென்காசியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.