மின்கட்டண உயர்வால் மக்கள் மட்டுமல்லாமல் சிறு, குறு தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளது - ஜி.ராமகிருஷ்ணன்
மத்திய ஆளும் பாஜக அரசு பாஜக ஆளாத மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர் மூலம் போட்டி அரசை நடத்தி வருகிறது.
தூத்துக்குடி மாவட்ட மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அண்ணாநகரில் 150 கி.மீ நடைப்பயணம் நிறைவு பெற்று மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தின் பிரதான நகரான கோவில்பட்டியில் பழுதடைந்துள்ள சாலைகள், ஆற்றின் வரத்துக் கால்வாய்களை சரி செய்ய வேண்டும். கோவில்பட்டி நகர இளைஞர்களின் வேலை வாய்ப்பு கனவை நனவாக்க புதிய தொழிற்சாலை தொடங்க வேண்டும். கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க அனுமதி இல்லாமல் முறைகேடாக இறக்குமதியாகும் லைட்டர்களை தடை செய்ய வேண்டும்.
தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்ற வேண்டும். திருச்செந்தூர் அரசு மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். பாரம்பரிய மீனவர்களின் வாழ் வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம் 2019-ஐ கைவிட வேண்டும். உடன்குடி ஒன்றியத்தில் நிலத்தடி நீர் உப்பாக மாறுவதைத் தடுக்க சடை நெறி கால்வாயை சீரமைத்து குளங்களின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும். சாத்தான்குளம் ஒன்றியத்தில் நிலத்தடி நீர் உப்பாக மாறு வதை தடுக்க கண்ணடியான் கால்வாய் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும். ஆழ்வார்திருநகரி, திருவைகுண்டம், கருங்குளம் ஒன்றியங்களில் வாழை விவசாயத்தைப் பாதுகாக்கவும் வாழையின் மூலப் பொருட்களிலிருந்து மதிப்பு கூட்டும் பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும்.
மழைக்காலங்களில் தூத்துக்குடி மாநகரில் மழைநீர்-வெள்ளநீர் தேங்காமல் மக்கள் நிம்மதியாக வாழ சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தூத்துக்குடியில் இஎஸ்ஐ மருத்துவமனை கட்டுமான பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும். தூத்துக்குடியில் இருந்து இயங்கி வந்த ரயில்கள் கொரோனா பெருந்தொற்றை காரணம் காட்டி நிறுத்தப்பட்டுள்ளது, இந்த ரயில் களை உடனடியாக இயக்க வேண்டும். துறைமுகம், அனல் மின்நிலையம், என்.டி.பி.எல் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
அரசு தனியார் நிறுவனங்களில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், ஒட்டப்பிடாரம் ஒன்றியத்தில் மழைக்காலங்களில் வீணாகும் நீரை மலைப்பட்டி அருகே தடுப்பணை கட்டி ஒட்டன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள பேருந்து நிலையத்தை திறக்க வேண்டும், எட்டயபுரத்தில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும், விவசாயி களின் விலை பொருட்கள் சேமித்து வைக்க குளிர்சாதன கிடங்கு அமைக்க வேண்டும், தமிழக அரசு அறிவித்த படி கழுகு மலையில் அரசு கலை கல்லூரி அமைக்க வேண்டும்.
மழைக்காலங்களில் தாமிரபரணி ஆற்றில் இருந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க ஸ்ரீவைகுண்டம் அணையில் கீழ்ப்பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தினை நகர்ப் புற பகுதிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும், விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்புத் தொகையை பாக்கி இல்லாமல் உடனுக்குடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாவட்டத்தில் 150 கி.மீ., நடைபயணத்தை சனிக்கிழமை தொடங்கியது. மாவட்டத்தில் கோவில்பட்டி, திருச்செந்தூர், திருவைகுண்டம் ஆகிய இடங்களிலிருந்து கொட்டும் மழையில் தொடங்கிய 150 கி.மீ., நடைபயணம் தூத்துக்குடியில் நிறைவடைந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் தலைமையில் திருவைகுண்டம் பஜாரில் துவங்கிய நடைப்பயனக்குழுவினை சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன் துவக்கி வைத்தார். சிவகளை, பெருங்குளம், சாயர்புரம், கூட்டாம்புளி, புதுக்கோட்டை, சோரீஸ்புரம், 3 வதுமைல் வழியாக அண்ணாநகர் பொதுக்கூட்டம் மேடையை வந்தடைந்தது.
சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளரிடம் கூறுகையில், "தமிழகத்தில் தமிழக அரசு கொண்டுவந்துள்ள மின்கட்டண உயர்வு காரணமாக பொதுமக்கள் மட்டுமல்லாமல் சிறு, குறு தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். மின்கட்டண அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சொல்லி தமிழக அரசு பொதுமக்களை வற்புறுத்துவதன் காரணமாக பொதுமக்கள் அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே இதை கைவிட வேண்டும்.
மேலும் மத்திய ஆளும் பாஜக அரசு பாஜக ஆளாத மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது, அவ்வாறு செய்ய முடியாத மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநர் மூலம் போட்டி அரசை நடத்தி வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் மத்திய அரசு கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை அப்படி ஏற்றுக் கொள்ளாத போதும் தமிழகத்தில் ஆளுநர் தொடர்ச்சியாக பல்கலைக்கழகங்களுடைய துணைவேந்தர்கள் கூட்டத்தை நடத்தி மத்திய அரசு ஏற்கனவே கொண்டுவந்த கல்விக் கொள்கை அமல் படுத்த முயற்சிக்கிறார்.
தமிழகத்தில் ஆளுநர் மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இவ்வாறு காலம் தாழ்தியதன் காரணமாக ஆன்லைன் ரம்மி தடை மசோதா காலாவதி ஆகி உள்ளது, இதன் காரணமாக சில நாட்களிலேயே ஆன்லைன் ரம்மி தற்கொலைகள் அதிகரித்து உள்ளது. எனவே இந்த ஆன்லைன் ரம்மி மசோதா தடைச் சட்டத்திற்கு ஆளுநர் கையெழுத்திட வேண்டும், மேலும் மாநில அரசின் உரிமைகளை பறிக்கக் கூடிய விதமாக ஆளுநர் செயல்படுகிறார்" என்றார்.