நெல்லையில் உள்நாட்டு விமான நிலையம் அமைக்க முயற்சி - சட்டமன்ற ஏடுகள் குழு தலைவர் ராமகிருஷ்ணன்
நெல்லை மாவட்டத்தில் 51 நெல்கொள்முதல் நிலையம் மூலம் ஓராண்டில் 8 கோடியே 55 லட்சத்து 37 ஆயிரம் கிலோ நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 ஆயிரத்து 232 விவசாயிகள் நேரடியாக பயன்பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவை ஏடுகள் குழு தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் குழு தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் குழு உறுப்பினர்கள் அப்துல்வகாப், நல்லதம்பி வேலு, தேன்மொழி, அமலு ஆகியோர் நெல்லை வந்தனர். இங்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றுலாத்துறை, நுகர்பொருள் வாணிபக்கழகம், வழங்கல்துறை உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர். துறை ரீதியாக நடந்து வரும் பணிகள், சுற்றுலாத்துறை மேம்பாடு ஆகியவை குறித்து கேட்டறிந்து அறிந்தனர். தொடர்ந்து ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. அந்த பணிகளையும் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
முன்னதாக குழு தலைவர் ராமகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக முதல்வரின் முக்கிய நோக்கம் தரிசு நிலங்களை மேம்படுத்தி உற்பத்தியை பெருக்க வேண்டும் என்பதே. அந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் நெல்லை மாவட்டம் மானூர் பெரியகுளம் கால்வாய் தூர்வாரப்பட்டு குற்றாலத்தில் இருந்து தண்ணீர் தடையின்றி வந்ததால் 30 ஆண்டுகளாக வறண்டு கிடந்த குளம் பெருகி உள்ளது. இதன்மூலம் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன் பெற்றுள்ளது. அதுபோன்று அனுமன் நதி சீரமைப்பு மூலம் 99 குளங்கள் பெருகி பாசன வசதி பெற்றுள்ளது. நெல்லை மாவட்டத்தில் 51 நெல்கொள்முதல் நிலையம் மூலம் ஓராண்டில் 8 கோடியே 55 லட்சத்து 37 ஆயிரம் கிலோ நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் 10 ஆயிரத்து 232 விவசாயிகள் நேரடியாக பயன்பெற்றுள்ளனர். உற்பத்தி செய்யக்கூடிய அனைத்து நெல்லும் கொள்முதல் செய்யப்படுவது என்பது சிறப்பான விசயம். சுற்றுலாத்துறையை பொறுத்தவரை நெல்லையில் தமிழர்களின் பண்டைய வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் முதல்வர் பொருநை அருங்காட்சியகம் அமைக்க உத்தரவிட்டுள்ளார். அது தமிழர்களின் கலை, கலாச்சாரம், நாகரீகம், பண்பாடு 4 ஆயிரம் வருடத்திற்கு முன்பே துவங்கியது என்பதற்கு அடையாளங்களும், பொருட்களும் கிடைத்திருக்கிறது. அதனை சர்வதேச அளவில் ஈர்க்கின்ற வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும் என்பதற்கான பணிகள் முனைப்போடு நடந்து வருகிறது. கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பறவைகளின் வரவை அதிகரிக்கும் வகையில் மேம்படுத்தப்படும், மணிமுத்தாறில் எக்கோ பார்க், படகு குழாம் மூலம் பயணிகளை ஈர்க்கும் வகையில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். மேலும், சுற்றுலாத் துறையை மேம்படுத்த நெல்லையில் பயணிகள் விமான நிலையம் அமைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, சட்டப்பேரவை கூடுதல் செயலாளர் நாகராஜன், இணைச் செயலாளர் பூபாலன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்