கொரோனா காலத்திற்குப் பின் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகளவு குறைந்துள்ளது - மகளிர் ஆணைய தலைவர் குமரி
”பெரிய தனியார் நிறுவனங்களில் உள்ள புகார் குழு முறையாக செயல்படாமல் இருந்து வரும் நிலையில் அதனை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” - மகளிர் ஆணைய தலைவர் குமரி
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமரி தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் எடுக்கப்படும் நடவடிக்கைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சகி ஒருங்கிணைப்பு மையத்தின் செயல்பாடுகள் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை கூட்டத்தில் கேட்டறியப்பட்டது.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும் பொழுது, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் ஆணையம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தின் 22வது மாவட்டமாக நெல்லை மாவட்டத்தில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரையில் சகி ஒருங்கிணைந்த சேவை மையம் மிக சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மையம் மூலம் வரப்படும் புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு வருகிறது. குடும்ப ரீதியான பிரச்சினைகள், சட்ட ரீதியான ஆலோசனைகள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மனநல ஆலோசனை ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் அனைத்து வழக்குகளுக்கும் உரிய தீர்வு காணப்பட்டதுடன் விட்டுவிடாமல் பாதிக்கப்பட்ட நபர்களின் வீடுகளுக்கே சென்று பின்னாய்வு செய்யப்பட்டு அதற்கான தரவுகளும் சேகரிக்கப்படுகிறது. இந்த நடைமுறை தமிழகத்திலேயே நெல்லை மாவட்டத்தில் முன்னுதாரணமாக செயல்பட்டு வருகிறது.
மகளிர் ஆணையத்திடம் வரதட்சணை கொடுமை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் மற்றும் குழந்தைகள் திருமணம் தொடர்பான புகார்கள் அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறது. நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம், நாங்குநேரி, பாளையங்கோட்டை, மானூர் ஆகிய ஒன்றியங்களில் குழந்தை திருமணங்கள் தொடர்பான புகார்கள் அதிக அளவில் பெறப்பட்டுள்ளது. தற்போது அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளால் பெருமளவு குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிக அளவு குழந்தை திருமணங்கள் தர்மபுரி, கரூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றுள்ளது. அந்த பகுதிகளில் உடனடியாக மகளிர் ஆணையம் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு குழந்தை திருமணங்கள் அதிகளவு குறைக்கப்பட்டுள்ளது. 10 பெண்களுக்கு மேல் ஒரு நிறுவனத்தில் பணி செய்தால் உள்ள புகார் குழு அமைக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியதன் அடிப்படையில் பெரிய நிறுவனங்களில் இந்த குழு செயல்படுத்தப்பட்டுள்ளது. பெண்களுக்கு அதிக நேரம் வேலை கொடுக்க கூடாது என தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி பெரிய பெரிய ஜவுளி நிறுவனங்களில் காலை அரை மணி நேரம் மாலை அரை மணி நேரம் பெண்களுக்கு இடைவேளை வழங்க வேண்டும் என மகளிர் ஆணையம் மூலம் தொழிலாளர் நலத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தி அதனை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெரிய தனியார் நிறுவனங்களில் உள்ள புகார் குழு முறையாக செயல்படாமல் இருந்து வருகிறது. அதனை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவு நடைபெற்று வந்தது கடந்த இரண்டு மாதங்களாக பெரிய அளவில் குறைந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் சகி ஒருங்கிணைந்த சேவை மையம் மற்றும் தாய் கேர் திட்டம் ஆகியவை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதை முன்னுதாரணமாக எடுத்து பிற மாவட்டங்களிலும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பொதுமக்களிடம் அதிக அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதன் விளைவாக சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களை விட கிராமப்புறங்களில் இருந்து அதிகமான பொதுமக்கள் மாநில ஆணையத்தை தேடி புகார் தெரிவித்து வருகின்றனர் என தெரிவித்தார். இந்த கூட்டத்தில் நெல்லை மாவட்ட அரசு உயர் அதிகாரிகள், சமூக நலத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.