குற்றாலத்தில் அதிக அளவில் ரசாயனப்பொடி கலந்த சுமார் 2 ஆயிரம் கிலோ மஸ்கோத் அல்வா, சிப்ஸ் பறிமுதல்
சுற்றுலா பயணிகளை குறிவைத்து தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் சுற்றுலா பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்பொழுது இரண்டாம் கட்ட சீசன் காலம் என்பதால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிக்கு வந்து புனித நீராடி சென்று வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் வருகையை எதிர்பார்த்து அருவிக் கரையோரம் வியாபாரிகள் பழங்கள், இனிப்பு பொருட்கள், பலகாரங்கள் என விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் காலாவதியான கெட்டுப்போன பேரீச்சம் பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறைக்கு வந்த தகவலையடுத்து அதனை ஆய்வு செய்த அதிகாரி 1060 கிலோ கெட்டுப்போன காலாவதியான பேரீச்சம் பழத்தை பறிமுதல் செய்து அழித்தனர். தொடர்ந்து எச்சரிக்கையும் விடுத்து சென்றனர். இந்த நிலையில் மஸ்கோத் அல்வா, சிப்ஸ் உள்ளிட்டவைகளும் ஒரு சில பகுதிகளில் தரம் குறைவான ரசாயன பொடிகள் பயன்படுத்தப்பட்டு தயார் செய்யப்படுவதாக தென்காசி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நாக சுப்பிரமணியனுக்கு புகார்கள் சென்றது. அப்புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட கடைகள் மற்றும் தயாரிக்கும் இடங்களில் குறிப்பாக குற்றாலம் சித்ராபுரம் பகுதியில் திடீர் ஆய்வை மேற்கொண்டார்.
அப்பொழுது தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான ஏராளமான குடோன்கள் அந்த பகுதியில் செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. மேலும் அந்த குடோன்களில் ரசாயனம் கலக்கும் பிளாஸ்டிக் கேன்களில் மஸ்கோத் அல்வா தயார் செய்வதற்காக மைதா மாவுகள் பேரல் பேரலாக கலக்கி வைத்திருந்ததும், மஸ்கோத் அல்வா கலர் சாயம் பொடிகள் கலக்கப்பட்டு தயார் செய்வதும் கண்டறியப்பட்டது. அதனை ஆய்வு செய்த அதிகாரி இந்த இராசயன பொடிகள் குடலில் சென்றால் எவ்வளவு பாதிப்புகளை உண்டாக்கும் என்பது தெரியுமா? ஏன் இது போன்று தரம் குறைந்த மற்றும் ரசாயன பொருட்கள் அதிகம் உள்ள பொருட்களை பயன்படுத்துகிறீர்கள் என எச்சரிக்கை செய்ததோடு அந்த குடோனில் ரசாயன பொடிகள் கலந்த 2 ஆயிரம் கிலோக்கு மேலான மஸ்கோத் அல்வாவும், முறையான பேக்கிங் இல்லாத காலாவதியான தயாரிப்பு தேதிகள் இல்லாத ஆயிரக்கணக்கான கிலோ சிப்ஸ் உள்ளிட்டவைகளும் கண்டறிந்து அதனை பறிமுதல் செய்தார்.
தொடர்ச்சியாக குற்றாலம் பகுதியில் சுகாதாரமற்ற, தரம் குறைந்த, காலாவதியான, கெட்டுப்போன பொருட்கள் உள்ளிட்டவைகள் விற்பனைக்கு வைக்கப்படும் நிலையில் அதனை உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஆய்வு செய்து பறிமுதல் செய்து அழிப்பதோடு எச்சரிக்கையும் விடுத்து வருகிறார். சுற்றுலா பயணிகளை குறிவைத்து தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் சுற்றுலா பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.