(Source: ECI/ABP News/ABP Majha)
பழமையான கோயில்களை புனரமைக்க ரூ.100 கோடி வழங்கிய பெருமை முதல்வரை சேரும் - அமைச்சர் சேகர்பாபு
திருக்கோயிலின் வருமானங்கள் அதிகரித்தால் பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தர முடியும் என்ற நோக்கோடு இது போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.
தென்தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயமான நெல்லை மாநகரில் உள்ள நெல்லையப்பர் கோயிலில் அம்மன் சன்னதி மேற்கு பிரகாரம் கட்டுமான பணி, தெப்பக் குளம் புனரமைக்கும் பணிகள் மற்றும் கோயிலின் மேல் தளத்தில் ஓடுகள் அமைக்கும் பணிகள் என மொத்தம் சுமார் 4 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் புதிய திட்ட பணிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று அடிக்கல் நாட்டி வைத்தார். டிவிஎஸ் நிறுவனத்தின் பங்களிப்போடு இந்த பணிகள் நடைபெறுகிறது.
இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இன்று அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளை ஓராண்டிற்குள் முடித்து தருவதாக டிவிஎஸ் குழுமம் உறுதி அளித்துள்ளது. மொத்த செலவையும் டிவிஎஸ் நிறுவனமே ஏற்றுக் கொண்டுள்ளது. அதேபோல் நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கோரிக்கையை ஏற்று இங்கு பக்தர்களின் காலனி பாதுகாப்பகம் மற்றும் பொருள்கள் பாதுகாப்பு அறைகள் 62 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும். நெல்லையப்பர் கோயில் தேருக்கு கண்ணாடி அமைக்க மதிப்பீடு செய்யப்பட்டு அதற்கான ஒப்புதல் விரைவில் வழங்கப்பட்டு அடுத்த மானிய கோரிக்கையில் அந்த அறிவிப்பு வெளியிடப்படும். கடந்த ஆண்டு அறிவித்ததில் இதுவரை தமிழ்நாடு முழுவதும் ஒன்பது கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 30 கோயில்கள் 32 கோடி ரூபாயில் குடமுழுக்கு செய்யப்படும் என அறிவித்திருந்தோம். இதில் மூன்று கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. ஏற்கனவே அறிவித்ததையும் சேர்த்து மீதமுள்ள 32 கோயில்களுக்கு அடுத்த ஆண்டுக்குள் குடமுழுக்கு நடத்தப்படும்.
2022 - 2023 ஆம் ஆண்டு அறிவிப்பின்படி சுமார் 1000 கோடி ரூபாய் செலவில் 1500 கோயில்கள் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதோடு சரித்திர நிகழ்வாக ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான திருக்கோயில்களை புனரமைப்பதற்கு இதுவரை எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு அரசே 100 கோடி ரூபாய் வழங்கிய பெருமை முதல்வர் ஸ்டாலினை சாரும். இதில் நெல்லை அம்பாசமுத்திரம் பிரம்மதேசம் கோயில் புனரமைப்பு பணிக்காக 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒதுக்கீடு செய்யப்பட்ட 100 கோடியில் 60 கோடி ரூபாய்க்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 40 கோடிக்கு ஒரு மாதத்திற்குள் அரசாணை வெளியிடப்படும். நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான 100 சிறிய கோயில்களை இந்தாண்டு புனரமைக்கின்றோம். தற்போதைய நிலவரப்படி 3700 கோடி அளவிற்கு கோயில் சொத்துக்களை மீட்டுள்ளோம். அதோடு மீட்கப்பட்ட அந்த இடங்களை வாடகைக்கு விடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே நிலுவையில் இருந்த வாடகை பாக்கி தொகை புதிதாக இந்த ஆட்சி வந்த பிறகு 200 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் செய்யப்பட்டுள்ளது. திருக்கோயிலின் வருமானங்கள் அதிகரித்தால் பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தர முடியும் என்ற நோக்கோடு இது போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரியில் பழமை வாய்ந்த திருக்கோயில்களை கண்டறிந்து துறை சார்பில் தொல்லியல் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அந்த திருக்கோயில்களில் மேற்கொள்ள வேண்டிய திருப்பணிகளை செய்ய அவர்கள் நமக்கு அனுமதி மறுக்கின்றனர். அனுமதி வழங்கினால் அப்பணிகளை ஏற்று துறை சார்பில் செய்வதற்கு தயாராக இருக்கிறோம். தமிழகத்தில் அப்படி திருப்பணிகள் மேற்கொள்கின்ற அத்தியாவசியமான கோயில்களை பட்டியலிட்டு தொல்லியல் துறைக்கு தகவல் அனுப்பியுள்ளோம். திருமேனி பாதுகாப்பு அறைகள் மொத்தம் 11 அறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அதற்கு காவலர்களை நியமிப்பது குறித்து அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் உள்துறை செயலாளர் வாயிலாக கோரிக்கை வைக்க சொல்லியிருந்தனர். உள்துறை செயலாளர், காவல்துறை தலைவர் ஆகியோரிடம் அது குறித்து கோரிக்கை வைக்கப்பட்ட பின் தற்போது அந்த 11 அறைகளுக்கும் காவல் காக்கின்ற காவலர்களுக்கான கட்டணத்தை இந்து சமய அற நிலையத்துறையை ஏற்றுக்கொள்ள சொல்லியிருக்கின்றனர், அதற்கான ஒப்புதலை இரண்டு நாட்களுக்கு முன் அளித்துள்ளோம் என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்