நெல்லை சேரன்மகாதேவியில், கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த பைக் மீது மோதும் கார் - சிசிடிவி காட்சிகள் வைரல்
தொடர்ந்து சாலை விபத்துக்கள் நடைபெற்று வருவதால் சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் எனவும் மேலும் சாலை பணி முடியும் வரை சாலையின் இருபுறமும் தடுப்புகள் வைத்து வாகனங்களை சீரமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை
நெல்லையில் இருந்து பாபநாசம் செல்லும் வழியில் உள்ளது சேரன்மகாதேவி. இங்கு கடந்த சில ஆண்டுகளாக புதிதாக நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சேரன்மகாதேவி யூனியன் அலுவலகம் அருகே கடந்த சில ஆண்டுகளாக சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியில் சாலையானது குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் இவ்வழியாக செல்லும் வாகனங்களால் சாலைகளில் புழுதி பறந்து வாகன ஓட்டிகள் கடும் சிரமமடைந்து வருகின்றனர்.
இதனால் அவ்வப்போது சில விபத்துகளும் அரங்கேறியுள்ளது. அதோடு இருசக்கர வாகனத்தில் அலுவலகத்திற்கு, பள்ளி கல்லூரிக்கு செல்வோர் அந்த சாலையை கடந்து செல்லும் போது உடல் முழுவதும் தூசியாக காட்சியளிப்பதோடு சில நேரங்களில் புழுதி பறந்து கண்களில் தூசி விழுந்து விடுவதால் எதிர்பாராத விபத்து நேரிடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். குண்டு குழிகளில் தடுமாறி கீழே விழும் சூழலும் உள்ளது. எனவே விரைந்து அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் சேரன்மகாதேவி யூனியன் அலுவலகம் அருகே குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலையால் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் கட்டுப்பாட்டை இழந்து திடீரென கீழே விழுந்தார். அப்போது எதிரே வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இருப்பினும் கார் டிரைவர் சுதாரித்து கொண்டு உடனடியாக பிரேக் பிடித்ததால் அசம்பாவித சம்பவம் தடுக்கப்பட்டது.
மேலும் இப்பகுதியில் தொடர்ந்து சாலை விபத்துக்கள் நடைபெற்று வருவதால் சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் எனவும் மேலும் சாலை பணி முடியும் வரை சாலையின் இருபுறமும் தடுப்புகள் வைத்து வாகனங்களை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கையும் வைத்துள்ளனர். பைக் மீது கார் மோதும் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. அதில் நூல் இழையில் பைக்கில் இருந்து விழுந்த நபர் மீது கார் மோதி தப்பித்த காட்சிகள் நெஞ்சை பதற செய்கிறது. உடனடியாக சுற்றியிருந்தவர்கள் அவரை மீட்ட காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளது.