சிபிஐ-னா இப்படித்தான்! அரசு துணை நிற்கும்.. துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் பேசிய கனிமொழி!
மக்கள் வேண்டாம் என்று நினைக்கும் ஒரு நிறுவனம், இங்கு உள்ள சுற்றுப்புறச்சூழலை பாதிக்கக்கூடிய, நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக மாற்றக்கூடிய நிறுவனத்துக்கு நிச்சயமாக தமிழ்நாட்டில் இடம் இல்லை.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியானவர்களுக்கு நினைவஞ்சலி மற்றும் உயிர்ச்சூழல் பாதுகாப்பு கருத்தரங்கம் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. கருத்தரங்குக்கு ஒருங்கிணைப்பாளர் குமரெட்டியாபுரம் மகேஷ்குமார் தலைமை தாங்கினார். மெரினா பிரபு வரவேற்று பேசினார். கருத்தரங்கின் நோக்கம் குறித்து ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி பேசினார்.மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் மேதா பட்கர், தி.மு.க. கனிமொழி எம்.பி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி, எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, பச்சை தமிழகம் கட்சி தலைவர் சுப.உதயகுமாரன், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
நிகழ்ச்சியில் சமூக செயல்பாட்டாளர் மேதா பட்கர் பேசும் போது, தூத்துக்குடியில் 100 நாட்கள் அமைதியான முறையில் போராடிய அப்பாவி மக்கள் மீது போலீசார் கொடூரமாக துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ தனது குற்றப்பத்திரிக்கையில் அப்பாவி மக்களை குற்றவாளிகளாக தெரிவித்து உள்ளது. சி.பி.ஐ என்பது நடுநிலையான, நேர்மையான அமைப்பு இல்லை என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. ஒரு காலத்தில் மக்கள் எந்த பிரச்சினை என்றாலும் சி.பி.ஐ விசாரணை கோரினார்கள். ஆனால் தற்போது யாருமே சி.பி.ஐ விசாரணையை கோருவதில்லை. ஆனால் தமிழக அரசு இந்த வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்து உள்ளது. சி.பி.ஐ குற்றப்பத்திரிக்கையில் துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார் மற்றும் அவர்களுக்கு உத்தரவிட்ட அதிகாரிகள் வெறுமனே சாட்சிகளாகவே சேர்க்கப்பட்டு உள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் மீது ஒரு எப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யப்படவில்லை என்பதையும் கடுமையாக கண்டிக்கிறோம்.
மேலும், இந்த வழக்கு விசாரணை மிகவும் தாமதமாக நடைபெற்று வருகிறது. தாமதமான நீதி, மறுக்கப்பட்ட நீதியாகும். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி கிடைத்து உள்ளது. ஆனால் நீதி இன்னும் கிடைக்கவில்லை. இந்த சம்பவத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட 4 பேருக்கு இன்னும் வேலை வழங்கப்படவில்லை. ஸ்டெர்லைட் நிறுவனம் மகராஷ்டிரா மற்றும் குஜராத் மக்களால் நிராகரிக்கப்பட்ட நிறுவனமாகும். தூத்துக்குடி மக்களும் அந்த நிறுவனத்தை நிராகரித்து உள்ளனர். அந்த நிறுவனம் மீண்டும் செயல்பட தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதிக்கக்கூடாது. ஸ்டெர்லைட் நிறுவனம் நிரந்தரமாக மூடப்பட்டால் தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்று கூறினார்.
கருத்தரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசும் போது, ஸ்டெர்லைட் எதிர்ப்பு களத்தில் போராடிக் கொண்டு இருப்பவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ஒரே நோக்கத்துக்காக மக்கள் நலனுக்காக, அரச பயங்கரவாதத்துக்கு எதிராக பேராடும் அமைப்புகள் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். இத்தகைய எதிர்ப்பை முன்னெடுக்கும் அமைப்புகள் சிதறிவிடக் கூடாது. துப்பாக்கி சூட்டில் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்ற ஆதங்கம் உள்ளது. சி.பி.ஐ. புலனாய்வு அறிக்கையில் பொதுமக்களே குற்றவாளிகள் என்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. ஸ்டெர்லைட் நிறுவனம் மீண்டும் ஆலையை திறந்தே தீருவோம் என்று உச்சநீதிமன்றத்தை நாடி உள்ளது. வேதாந்தா சங்பரிவாருடன் தொடர்பில் உள்ளது. ஆனால் போராட்டம் காரணமாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாத நிலைக்கு தள்ளி உள்ளோம். அரசு என்பது வேறு, ஆட்சியாளர்களின் நிலைப்பாடு என்பது வேறு. இதனை உணர்ந்து அமைப்பை உருவாக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அரச பயங்கரவாதத்தின் வெளிப்பாடு காரணமாகத்தான் அமைப்புகள் உருவாகுகின்றன. நாம் ஒன்றுபட்டு செயல்படும் போது அரச பயங்கரவாதத்தை வீழ்த்த முடியும். ஸ்டெர்லைட் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் எந்த தீர்ப்பையும் பெற முடியும். இது நம் தலைக்கு மேல் உள்ள கத்தி போன்றது. ஆகையால் போராட்டம் முற்று பெற்று விட முடியவில்லை. நாம் ஒருங்கிணைந்து போராட வேண்டிய தேவை உள்ளது என்று கூறினார்.
கருத்தரங்கில் கனிமொழி எம்.பி. பேசும் போது, ''கார்ப்பரேட் நிறுவனங்கள், பல அரசியல் அமைப்புகள் நம்மை பார்த்து வைக்கக்கூடிய முக்கியமான கேள்வி வேலைவாய்பபு வேண்டாமா?. மக்களின் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வது, இங்கு வளர்ச்சி தேவை இல்லையா என்றுதான் நம்மை நோக்கி வீசக்கூடிய கேள்விகளாக மாற்றி வைத்து உள்ளார்கள். இவர்களுக்கு நாம் சொல்லும் ஒரே பதில், நாம் உயிரோடு இருந்தால்தான் வேலை பார்க்க முடியும். வளர்ச்சி வேண்டாம் என்று யாரும் கூறவில்லை. அந்த வளர்ச்சி சுற்றுப்புறச்சூழலை, நம் எதிர்கால தலைமுறையை பாதுகாக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதே நம் கோரிக்கை. கார்ப்பரேட் நிறுவனங்கள், சமூகத்தை, அரசியலை ஆட்டுவித்துக் கொண்டு இருக்கும் நிறுவனங்கள். அவர்களை எதிர்க்க கூடாது என்பது அல்ல. எதையும் சாதிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களை மக்கள் விரட்டி உள்ளனர். ஸ்டெர்லைட் போராட்டத்தில் அரசு உங்களோடு நிற்கிறது என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். ஆட்சி பொறுப்பேற்ற உடன் விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் இடைக்கால அறிக்கையை பெற்று, அதன் மீது நடவடிக்கை எடுத்த அரசு தி.மு.க. அரசு. எப்போதும் உங்களுக்கு தந்து உள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றி தந்து உள்ளோம்.
சி.பி.ஐ. தவறு செய்யக்கூடியவர்கள்தான். அதையும் தாண்டி வெற்றி பெற முடியும் என்ற உறுதி கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த மக்களின் நியாயத்தோடு அரசு நிற்கிறது. உச்சநீதிமன்றத்தில் மக்களோடு நின்றுதான் வாதத்தை அரசு வைத்துக் கொண்டு இருக்கிறது. அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கை சரியான நேரத்தில் தரப்பட்டு உள்ளது. விரைவில் அந்த அறிக்கை மக்களோடு பகிர்ந்து கொள்ளப்படும். உங்கள் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றி தருவோம். உங்கள் போராட்டத்தில் நாங்கள் தோளோடு, தோள் நிற்போம் என்று உறுதியாக கூறிக் கொள்கிறேன்.
மக்கள் வேண்டாம் என்று நினைக்கும் ஒரு நிறுவனம், இங்கு உள்ள சுற்றுப்புறச்சூழலை பாதிக்கக்கூடிய, நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக மாற்றக்கூடிய நிறுவனத்துக்கு நிச்சயமாக தமிழ்நாட்டில் இடம் இல்லை. இதனை முதல்-அமைச்சர் பலமுறை தெரிவித்து உள்ளார். உறுதியாக தூத்துக்குடியில் அப்படிப்பட்ட யாருக்குமே இடம் இல்லை. அரசு உங்களோடு நிற்கும் என்று கூறினார்.