தமிழகத்தின் சிறப்பான கல்வி கட்டமைப்பை சீர்குலைக்கும் நோக்கோடு மத்திய அரசு செயல்படுகிறது - சபாநாயகர் அப்பாவு
மருத்துவ பட்ட மேற்படிப்பில் ஒன்றிய அரசிற்கு தமிழக முதல்வர் கொடுத்த அழுத்தம் காரணமாக 27 சதவீதம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு இடம் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு அதில் இருந்த மீண்ட பெண்களுக்கான வெற்றி விழா நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவக்கல்லூரி முதல்வர் ரேவதிபாலன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கலந்து கொண்டு புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் மையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து விழாவில் புற்றுநோயில் இருந்து மீண்ட பெண்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். முன்னதாக மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
தொடர்ந்து விழாவில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேசுகையில், தமிழக அரசு பெண்களுக்கு செய்துள்ள நலத்திட்டங்களை பட்டியலிட்டார். குறிப்பாக தமிழ்நாடு கல்வி வளர்ச்சியில் சிறந்து விளங்குவதாகவும், பெண்களும் கல்வியில் சிறந்து விளங்குவதுடன் உயர்கல்வித்துறையிலும் சிறந்து விளங்குவதாக தெரிவித்தார். மருத்துவத்துறையிலும் இன்று பெண்கள் அதிக அளவில் வெற்றி காண்பதாக குறிப்பிட்ட அவர் தமிழ்நாட்டின் சுகாதார கட்டமைப்பு மிகவும் வலுவானதாக இருக்கிறது என்று தெரிவித்தார். தமிழகத்தில் சமச்சீர் கல்வி, மெட்ரிக் கல்வி என்று சிறப்பான கல்வி கொள்கையை கொண்டிருக்கிறது. மத்திய தேசிய மருத்துவர் கவுன்சில் பல்வேறு கொள்கை முடிவுகளை எடுத்திருக்கிறது. தமிழகத்தின் மிகச் சிறப்பான கல்வி கட்டமைப்பை சீர்குலைப்பதற்காகவே மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை நீட் தேர்வை கொண்டு வந்துள்ளதாகவும் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு குற்றம் சாட்டினார். மேலும் மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம் ஆகியவை மக்களுக்கு பயனளிக்கும் சிறப்பான திட்டம் என்றும் கூறினார்.
பின்னர் விழாவின் நிறைவில் சபாநாயகர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறுகையில், ”இனி ஒரு காலத்தில் ஒரு மாநிலத்தில் இத்தனை விஞ்ஞானிகள் தான் வர வேண்டும் என சொன்னால் எப்படி விஞ்ஞான வளர்ச்சியை தடை செய்ய நினைக்கின்றார்களோ அதே போல தான் மருத்துவத்துறையில் மக்கள் தொகை அடிப்படையில் தான் ஒரு மாநிலத்தில் படிக்க வேண்டும் என்பது ஏற்புடையது அல்ல. அதை தான் முதல்வர் கடுமையாக எதிர்க்கிறார். 10 ஆயிரம் மக்களுக்கு ஒரு மருத்துவ இடம் என்ற அடிப்படையில் மக்கள் தொகைக்கு ஏற்றார் போல் மருத்துவ கல்லூரிக்கு அனுமதி என முடிவெடுத்து உள்ள நிலையில் இனிமேல் தமிழகத்திற்கு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கிடையாது என்று ஒன்றிய அரசு குறுகிய மனப்பான்மையோடு செயல்படுகிறது. நீட் தேர்வில் மக்கள் பல லட்சம் ரூபாயை செலவு செய்து இது போன்ற மருத்துவ படிப்பிற்கு வர வேண்டிய நிலை இருக்கிறது. தமிழகத்தில் சமச்சீர் கல்வி, மெட்ரிக் கல்வி என சிறப்பான கல்வி கட்டமைப்பு உள்ளது. அதை சீர்குலைப்பதற்காகவே மத்திய அரசு நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை ஆகியவற்றை கொண்டு வந்துள்ளது. இது வளர்ந்து வரும் மாநிலத்திற்கு எதிரான திட்டம். தமிழகத்தில் சுகாதார துறையின் கட்டமைப்பு மிகவும் வலுவானதாக இருக்கிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ”மத்திய அரசின் மத்திய பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் குடிமை பணி தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த முறைகேடுகள் களையப்பட்டால் தமிழ்நாட்டில் இருந்து அதிகமானோர் முதலிடத்துடன் தேர்ச்சி பெறுவார்கள்” என்றார். மேலும், “மருத்துவ பட்ட மேற்படிப்பில் ஒன்றிய அரசிற்கு தமிழக முதல்வர் கொடுத்த அழுத்தம் காரணமாக 27 சதவீதம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு இடம் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் இந்த முயற்சியால் தமிழகம் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் பயன்பெறும் நிலை ஏற்பட்டுள்ளது” என தெரிவித்தார்.