தமிழகத்தில் நாளை 500 புதிய மருத்துவமனைகள் திறப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நாளை திறக்கவுள்ள மருத்துவமனைகளில் 22 நெல்லை மாவட்டத்தில் அமைகிறது.
நெல்லை மாவட்டம் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த போது மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை தென்காசியில் செயல்பட்டு வந்தது. மாவட்டம் பிரிக்கப்பட்ட நிலையில் நெல்லை மாவட்டத்திற்கு தலைமை அரசு மருத்துவமனை அமைக்க கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் வள்ளியூரில் மாவட்ட தலைமை மருத்துவமனை அமைக்கப்படும் என முதல்வர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்த்து மருத்துவமனை கட்ட 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இதற்கான அடிக்கல் நாட்டும் பணி வள்ளியூரில் சபாநாயகர் அப்பாவு தலைமையல் நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் முன்னிலையில் புதிய மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து 1.53 கோடி ரூபாய் மதிப்பில் களக்காடு, மூலக்கரைப்பட்டியில் முடிக்கப்பட்ட பணிகளை திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், "தமிழகம் முழுவதும் 1018 கோடி மதிப்பில் 25 மாவட்டங்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே 18 மருத்துவமனைகள்தான் இருந்து வந்தது. இந்த இரண்டு ஆண்டுகளில் 25 மருத்துவமனைகள் கட்டப்படுகிறது. மக்களைத் தேடி மருந்துத் திட்டத்தின் கீழ் 1 கோடியே 51 ஆயிரத்து 661 பேர் பயன் அடைந்துள்ளனர். இந்த திட்டம் உலகத்திற்கே முன்மாதிரியாக உள்ளது. இதுகுறித்து கனடா நாட்டில் நடக்கும் சுகாதாரத்துறை மாநாட்டில் உரையாட்ட தமிழகத்திற்கு அழைப்பு வந்துள்ளது. இன்னுயிர் காக்கும் திட்டத்தில் 1 லட்சத்து 65,365 பேர் பயன் பெற்றுள்ளதாக தெரிவித்தார் இதன் மூலம் 145 கோடியே 77 லட்சத்து 27 ஆயிரத்து 280 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது” என தெரிவித்தார். பின்னர் விழாவில் 1 கோடி ரூபாய் மதிப்பில். 500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “கேன்சருக்கு பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றால் நெல்லையில் இருந்து மதுரைக்கு தான் செல்ல வேண்டிய சூழல் இருந்தது. தற்போது நெல்லை அரசு மருத்துவமனையில் 12 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. அதனையும் திறந்து வைக்க உள்ளோம். நெல்லை மாவட்டத்தில் இன்று நடந்த விழாவின் மூலம் 30 கோடி ரூபாயில் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஒரு கோடியே 53 லட்ச ரூபாய் மதிப்பில் முடிக்கப்பட்ட பணிகள் மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பயன்பெறும் வகையில் ஒன்றிய அரசிடம் 708 நகர் நல மையம் தமிழக அரசு சார்பில் கேட்கப்பட்டது. இதில் முதல் கட்டமாக 500 மருத்துவமனைகள் கட்டப்பட்டு நாளை மாலை சென்னையில் நடக்கும் விழாவில் முதல்வர் திறந்து வைக்கிறார். இதில் 22 மருத்துவமனைகள் நெல்லை மாவட்டத்தில் அமைகிறது. முதல் கட்டமாக 10 மருத்துவமனைகள் நாளை திறக்கப்படுகிறது. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களான தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூர், உள்பட 6 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்படுகிறது. இதற்காக ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆயுஷ் அமைச்சர் ஆகியோரிடம் பல முறை கோரிக்கை வைத்துள்ளேன். முதல்வர் 2 முறை பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளார். மருத்துவக் கல்லூரிகளை விரைந்து அமைக்கும் வகையில் அடுத்த வாரம் நான், துறை செயலாளர் அடங்கிய குழு ஒன்றிய அமைச்சரை நேரில் சந்திக்க உள்ளோம். புதிய மருத்துவக் கல்லூரிகளில் 11 செவிலியர் பயிற்சி கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளது. தலா 10 கோடி மதிப்பீட்டில் அமைகிறது. தமிழகத்தில் ஒரே ஒரு பல் மருத்துவமனைதான் உள்ளது. 70 ஆண்டுகளுக்கு பின் புதுக்கோட்டையில் புதிய பல் மருத்துவமனை அமைய உள்ளது. 11 புதிய மருத்துவக்கல்லூரிகளில் 7 கல்லூரி பணிகள் முடிவடைந்துவிட்டது , மீதி 4 கல்லூரி கட்டும் பணிகள் நடந்து வருகிறது. மொத்தமாக இந்த பணிகள் முடிவடையும் நிலையில் 7 ஆயிரம் படுக்கைகள் கூடுதலாக கிடைக்கும்” என தெரிவித்தார்.