புதுவையில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொலை - எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம்
பெண் குழந்தைகளின் பாதுகாப்பை ஒன்றிய-மாநில அரசுகள் உறுதி செய்ய வலியுறுத்தல்!
புதுச்சேரி, முத்தியால்பேட்டை சோலை நகரில் வசித்து வந்த 9 வயது சிறுமி, கொடூரமாக கை, கால்கள் கட்டப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் மட்டுமன்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டி புதுச்சேரி மக்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை மேற்கொண்டு வந்தனர். அதோடு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கண்டங்களை தெரிவித்து வருவதோடு குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தமிழ் மாநில தலைவர் நெல்லை முபாரக் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியை சேர்ந்த, 5 ஆம் வகுப்பு படிக்கும் 9 வயது பள்ளி மாணவி, கடந்த 2-ம் தேதி வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த நிலையில் காணாமல் போயுள்ளார். பல இடங்களில் சிறுமியை தேடியும் கிடைக்காத நிலையில், சோலை நகர் பகுதியில் செல்லும் கழிவுநீர் கால்வாயில் சாக்குப் மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் ரத்தக் காயங்களுடன் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும், விசாரணையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கின்றது. இந்த கொடூர சம்பவத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
பெண்களுக்கு எதிராக, பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய கொடூர சம்பவங்கள் முற்றுப் புள்ளி இல்லாமல் தொடர்வது என்பது வாடிக்கையாகி வருகின்றது. பெண்கள், பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக சட்டங்கள் இயற்றப்பட்டாலும் சட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்தாதன் விளைவாகவும், குற்றவாளிகள் சட்டத்தின் ஓட்டை வழியாக தப்பித்து விடுவதாலும், இத்தகைய கொடூரங்களை புரிபவர்கள் அச்சமின்றி குற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகவே, பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பில் ஒன்றிய, மாநில அரசுகள் போதிய கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வண்ணம் சட்டங்களை கடுமையாக்குவதோடு, அதனை நடைமுறைபடுத்துவதையும் உறுதி செய்ய வேண்டும்.
புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொலை விவகாரத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, அவர்களுக்கு விரைவாக சட்டத்தின் படி அதிகபட்ச தண்டனையை பெற்றுக் கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு புதுவை அரசு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.