தீக்குளிக்க முயன்ற 80 வயது விவசாயி - அதிகாரிகளின் அலட்சியத்தால் பயிர்கள் நீரில் மூழ்கியதால் வேதனை
”வீரவநல்லூர் அருகே மறுகால் உயர்த்தப்பட்டதால் 25 ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி கடும் சேதம்”
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே வீரவநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா (80). இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் விவசாயம் பார்த்து வருகிறார். இந்தாண்டு பருவ பெய்த மழையின் காரணமாக அனைத்து குளங்கள் மற்றும் அணைகள் நிரம்பின. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்ததோடு விவசாயிகள் தற்போது விவசாய பணியை தீவிரமாக தொடங்கி வருகின்றனர். இந்த சூழலில் தெற்கு வீரவநல்லூர் அருகே மாடன் குளத்தில் இரண்டரை ஏக்கர் விவசாய நிலத்தில் சுப்பையா நெல் பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். இவரது விவசாய நிலத்திற்கு அருகே உள்ள கூத்தாடி குளம் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. கூத்தாடி குளத்தின் மறுகால் பகுதி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பொதுப்பணித்துறை அதிகாரிகளால் 2 அடி உயர்த்தி கட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக கூத்தாடி குளத்தில் உள்ள நீர் குளத்தின் அருகே உள்ள 25 ஏக்கர் விவசாய நிலம் தண்ணீரில் மூழ்கி உள்ளது, இதனால் அப்பகுதி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இதனால் விவசாயிகள் மிகுந்த மன உளைச்சலுக்கும் பொருள் நஷ்டத்திற்கும் உள்ளாகி உள்ளனர். மேலும் விவசாயிகள் ஏக்கருக்கு 20,000 வரை செலவு செய்துதாக தெரிகிறது, மொத்தமாக 5 இலட்சம் வரை செலவு செய்துள்ள நிலையில் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி உள்ளது, இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சரின் தனிப்பிரிவு மாவட்ட ஆட்சியர் குறைதீர் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் புகார் மனு அளித்து உள்ளனர்.
மேலும் அப்பகுதியை சேர்ந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நெற்பயிரை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்குமாறும் தொடர்ச்சியாக முதியவர் சுப்பையாவின் மகன் ஐயப்பன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். ஆனால் அதிகாரிகள் அலட்சியம் செய்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டம் நடை பெற்ற அரங்கின் முன் சுப்பையா மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். இதனை கண்ட அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த தீயணைப்பு போலீசார் மற்றும் காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி அவர் கையிலிருந்த மண்ணெண்ணெய் கேனை பிடுங்கினர். அதற்குள் அவர் கொண்டு வந்த 5 லிட்டர் மண்ணெண்ணெய் முழுவதும் உடலில் ஊற்றி விட்டு தீக்குளிக்க முயற்சித்தார். உடனடியாக அவர் மீது தண்ணீர் ஊற்றப்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாளை சந்திக்க அழைத்துச் சென்றனர். இதனை தொடர்ந்து விவசாயி சுப்பையாவிடம் நடந்த சம்பவம் குறித்து அவர் கேட்டறிந்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பொதுப்பணித்துறை செயற்பொறியாளரிடம் நேரில் விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டதில் மனு அளிக்க வந்த செங்கோட்டையை சேர்ந்த நபர் குடும்பத்துடன் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எப்போதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அலுவலகத்திற்கு வரும் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவர். இந்த நிலையில் நேற்று குறைதீர் கூட்ட அரங்கு முன்பு விவசாயி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெய்பயிரை காப்பாற்ற மடையை திறந்து விட்டு விவசாய நிலத்திற்குள் புகுந்த நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறும், ஜேசிபி இயந்திரம் மூலமாக தண்ணீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் சுப்பையாவின் மகன் ஐயப்பன் அதிகாரிகளிடம் தொடர்ச்சியாக செல்போனில் பேசி உள்ளார், அவர் பேசிய ஆடியோவை செய்தியாளர்களிடம் கொடுத்த அவர் தவறு நடக்கும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் குற்றம் சாட்டினார்.