PUBG Online Addiction : ஃபோன் இல்லாமல் விளையாடுவதைப்போல சைகை... பப்ஜியால் விபரீதம்.. பெற்றோர் கண்ணீர்
ஆன்லைன் கேம்களில் அடிமையான 17 வயது மாணவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் ஆன்லைன் கேம்களுக்கு பல குழந்தைகள் அடிமையாகி வருகின்றனர். அதிலும் கொரோனா காலங்களில் வீட்டிற்குள் முடங்கி இருந்த சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் அதிகளவில் ஆன்லைன் கேம்களுக்கு அடிமையாகிவிட்டனர். அப்படி நீண்ட நாட்களாக கேம் விளையாடி மாணவர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த 17 வயது மாணவர் ஒருவர் நீண்ட நாட்களாக ஆன்லைன் கேம்களை விளையாடி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு திடீரென அவரை மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு வந்த அந்த மாணவர் பாதி மயகத்தில் இருந்துள்ளார். அப்போதும் அவர் கேம் விளையாடுவது போல் தன்னுடைய கைகளால் சைகையை செய்து வந்துள்ளார். அவரின் இந்த நிலையை பார்த்து மருத்துவர்கள் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து அந்த மாணவரை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். நள்ளிரவில் மருத்துவமனையில் சேர்ந்த இந்த மாணவர் அதிகாலை வேளையில் யாருக்கும் தெரியாமல் மருத்துவமனையில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. இவர் தொடர்பாக விசாரித்து வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலங்களில் மாணவர்களிடம் ஆன்லைன் வகுப்பு காரணமாக செல்போன் பயன்பாடு அதிகரித்தது. அப்படி அதிகரித்த செல்போன் பயன்பாடு அவர்களை படிப்பு தவிர இதுபோன்ற விளையாட்டிற்குள் அழைத்து சென்றதாக சில வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தங்களுடைய குழந்தைகளுக்கு செல்போனை கொடுக்கும் பெற்றோர்கள் அவர்கள் படிப்பிற்காக பயன்படுத்திகின்றனரா? அல்லது இதுபோன்று விளையாட்டிற்காக பயன்படுத்து கின்றனரா என்பதை கவனிக்க வேண்டும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்தை பார்த்தாவது ஆன்லைன் விளையாட்டுகளில் குழந்தைகள் அதிக நேரம் செலவிடுவதை இனிமேலாவது தடுக்க வேண்டும் என்று சில வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்