தூத்துக்குடியில் 3 தினங்களுக்கு பின்னர் கடலுக்கு சென்ற விசைப்படகு மீனவர்கள்
இன்று அதிகாலை தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 176 விசைப்படகுகளில் மீனவர்கள் உற்சாகமாக கடலுக்கு சென்றனர்.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி தொழிலாளர்கள் சங்கம் பொது வேலை நிறுத்தத்தை கைவிட்டு உற்சாகமாக மூன்று தினங்களுக்கு பின்னர் கடலுக்கு சென்ற மீனவர்கள்.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 265க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விசைப்படகுகளுக்கு தேவையான ஐஸ் பார்களை ஐஸ் பார்கள் தயாரிக்கும் உரிமையாளர்கள் வழங்கி வந்தனர். இந்நிலையில், மின் கட்டணம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு கட்டண உயர்வு காரணமாக உற்பத்தி செலவு அதிகமாவதால் ஐஸ் பார் ஒன்றுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வழங்க வேண்டுமென ஐஸ்கட்டி உரிமையாளர்கள் விசைப்படகு உரிமையாளர்களிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதனை விசைப்படகு உரிமையாளர்கள் ஏற்காததை தொடர்ந்து, விசைப்படகுகளுக்கு ஐஸ் பார்கள் வழங்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து இன்று விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் 265 படகுகளும் கடலுக்குச் செல்லாமல் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் காரணமாக மீன்பிடி தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் ஐஸ் பார் விலை உயர்வு தொடர்பான பிரச்சினைகள் பேசி தீர்க்கப்பட்ட நிலையில் மீன்பிடி தொழிலாளர் சங்கத்தினர் நான்கு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பொது வேலை நிறுத்தத்தை அறிவித்து உள்ளனர்.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு தொழிலாளர் சங்கம் மற்றும் பரிசுத்த அமலோற்பவ தொழிலாளர் சங்கமும் இணைந்து எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள அனைத்து விசைப்படகுகளிலும் 6% சதவீதம் தான் வட்டம் பிடித்தம் செய்ய வேண்டும், விசைப்படகுகளுக்கு எந்த டீசல் பிடிக்கப்படுகிறதோ அதன் அடிப்படையில் தான் டீசல்விலை கணக்கிடப்பட வேண்டும், மடி செட்டப், ஆயில், ஸ்டோர், ஐஸ் மட்டும் தான் பொதுவில் பிடித்தம் செய்ய வேண்டும், விசைப்படகில் தொழில் செய்யும் விசைப்படகு ஓட்டுநரை இறக்கி விடும்போது, அந்த ஓட்டுநர் விசைப்படகில் சேரும்முன்னர் தொழிலாளர் சங்கத்தை அணுகி தான் சேர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் பொது வேலை நிறுத்தத்தை அறிவித்து இருந்தனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுக மீன்வளத் துறை அதிகாரி விஜயராகவன் தலைமையில் உரிமையாளர்கள் தரப்பு மற்றும் தொழிலாளர்கள் தரப்பு என இரு தரப்பையும் தனித்தனியாக அழைத்துப் பேசப்பட்டது. விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே உள்ள தொழில் பிரச்சனைகள் குறித்து கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாவட்ட ஆட்சியர் திரு கே. செந்தில்ராஜ், I.A.S அவர்களால் ஏற்படுத்தப்பட்ட மீன் பிடித்துறைமுக தொழில் ஒழுங்கு முறைகள் குறித்து ஆய்வறிக்கை முடிவுகள் இதுவரை அமல்படுத்தாமல் இருப்பதை காரணம் காட்டி, மேற்கண்ட ஆய்வு அறிக்கை முடிவுகளை ஒரு மாத கால அவகாசத்தில் ஆய்வு அறிக்கை அமல்படுத்தப்படும் என முடிவெடுக்கப்பட்டது.அதுவரை பழைய நடைமுறையே தொடரும் என தெரிவிக்கப்பட்டது. இருதரப்பும் ஏற்றுக்கொண்டு நேற்று ஜஸ் நிரப்பி இன்று காலை முதல் கடலுக்கு தொழிலுக்கு செல்வதாக கூறிவிட்டு கலைந்து சென்றனர். இதனை தொடர்ந்து இன்று அதிகாலை தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 176 விசைப்படகுகளில் மீனவர்கள் உற்சாகமாக கடலுக்கு சென்றனர்.