தூத்துக்குடி உப்பு உற்பத்தி: 75% அதிகரிப்பு! விலை வீழ்ச்சி ஏன்? | உப்பு உற்பத்தியாளர்கள் கவலை
ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6 மாதங்கள் தான் உப்பு உற்பத்திக்கான உச்சகட்ட காலங்கள். அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் உப்பு சீசன் முடியும்.
நடப்பாண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் 19 லட்சம் டன் அளவுக்கு உப்பு உற்பத்தி நடந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. இவற்றில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் உள்ளது. இங்கு ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்கும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6 மாதங்கள் தான் உப்பு உற்பத்திக்கான உச்சகட்ட காலங்கள். அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் உப்பு சீசன் முடியும்.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதம் கடைசி வாரம் வரை நீடித்துள்ளது. இதன் காரணமாக உப்பு உற்பத்திக்கான பணிகள் தாமதமாகவே தொடங்கின. இந்த ஆண்டு மே 15-ம் தேதி வரை மழை குறுகிட்டதால் உப்பு உற்பத்தி சரியாக நடைபெறவில்லை. ஆனால், மே 15-ம் தேதிக்கு பிறகு உப்பு உற்பத்திக்கு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பிறகு அக்டோபர் 15 வரை உப்பு உற்பத்தி அமோகமாக நடைபெற்றது. கடந்த ஆண்டு 50 சதவீதம் மட்டுமே உப்பு உற்பத்தியாகி இருந்த நிலையில், இந்த ஆண்டு உப்பு உற்பத்தி 75 சதவீதத்தை கடந்துள்ளது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16-ல் தொடங்கியதை தொடர்ந்து நடப்பு உப்பு உற்பத்தி சீசன் முடிவுக்கு வந்துள்ளது.
இதையடுத்து உற்பத்தி செய்யப்பட்ட உப்பை மழையில் இருந்து பாதுகாக்கும் வகையில், உப்பளங்களில் உள்ள உப்பு குவியல்களை பிளாஸ்டிக் ஷீட் போட்டு மூடி வைத்துள்ளனர். வடகிழக்கு பருவமழை முழுமையாக முடிவடைந்த பிறகே அடுத்த சீசனுக்கான பணிகள் தொடங்கும். இது குறித்து விசாரிக்கையில், வடகிழக்குப் பருவ மழைக் காலம் தொடங்கி யதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி முடிவுக்கு வந்துள்ளது. மாவட்டத்தில் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி தாமதமாக தொடங்கினாலும், கடைசி 4 மாதங்கள் நன்றாக இருந்தது. இதனால் இந்த ஆண்டு 75 சதவீதத்துக்கு மேல், அதாவது 19 லட்சம் டன் உப்பு உற்பத்தியாகியுள்ளது.அதேநேரத்தில் இந்த ஆண்டு இதுவரை சுமார் 7 லட்சம் டன் உப்பு மட்டுமே விற்பனையாகியுள்ளது. 12 லட்சம் டன் உப்பு, உப்பளங்களில் இருப்பில் உள்ளது.
குஜராத் உப்பு குறைந்த விலைக்கு கிடைத்ததால், தூத்துக்குடி உப்பு அதிகளவில் தேங்கியுள்ளது. அடுத்த ஆண்டு சீசன் தாமதமாக மார்ச் மாதம் தொடங்கினால், கையிருப்பில் இருக்கும் உப்பு காலியாக வாய்ப்பு உள்ளது. விலையை பொறுத்தவரை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஒரு டன் உப்பு ரூ.3,000 முதல் ரூ.3,500 வரை விற்பனையான நிலையில், தற்போது தரத்தை பொறுத்து ரூ.2,000 முதல் ரூ.2,500 வரையே விலை போகிறது. இந்த விலை அடுத்த மாதம் சற்று உயருவதற்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு கூறப்படுகிறது.





















