டம்மு டம்முன்னு வெடிச்சத்தம் - மேலும் இரண்டு குவாரியா- ஊரில் வீடுகள் இடியும் நிலை- குவாரிக்கு எதிராக போராடும் மக்கள்
சுமார் 50 அரசின் பசுமை வீடுகள் ஊருக்கு மேற்கே கட்டப்பட்டுள்ளன. இங்கு கல்குவாரி அமைத்தால் அந்த வீடுகள் இடிந்துவிழும் நிலை ஏற்படும். இதுகுறித்து நாங்கள் பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கோவில்பட்டி அருகே செட்டிக்குறிச்சி கிராமப் பகுதியில் கல்குவாரிகள் அமைப்பதை கண்டித்து கடைகளை அடைத்து கருப்பு கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி அருகே செட்டிக்குறிச்சி கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட வீடுகளும் சுமார் 4000 மக்களும் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் பிரதானமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த கிராமத்தில் ஏற்கெனவே கடந்த சில ஆண்டுகளாக 2 கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்குவாரிகளால் நாளுக்கு நாள் பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும், கல் குவாரிகளை மூட வேண்டும் என மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் செட்டிக்குறிச்சி கிராமத்தின் குடியிருப்புகளுக்கு அருகாமையில் புதியதாக 2 கல்குவாரிகள் தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த செட்டிக்குறிச்சி கிராம மக்கள் கல்குவாரிகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று செட்டிகுறிச்சி முழுவதும் கடைகளை அடைத்து கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கிராமமே வெறிச்சோடி காணப்பட்டது. இதுகுறித்து செட்டிக்குறிச்சி கிராமத்தினர் கூறும்போது,செட்டுக்குறிச்சி பகுதியைச் சுற்றி சுமார் ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. இப்பகுதியில் மானாவாரி மற்றும் கிணற்றுப் பாசனத்தில் விவசாயம் செய்து வருகிறோம். ஏற்கெனவே இப்பகுதியில் இயங்கி வரும் கல்குவாரிகளில் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டுவிட்டது. பயிர்கள் முழுவதும் குவாரிகளில் இருந்து வெளியேறும் தூசிகள் விழுந்து, விவசாயம் பாதித்து, இப்போது நாங்கள் கட்டிட வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இரவு பகலாக கல்குவாரிகளுக்கு வரும் கனரக லாரிகளால் இங்கிருந்து கோனார் கோட்டை கிராமத்துக்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக காணப்படுகிறது. 4 பேர் வாழ்வதற்காக 4,000 மக்கள் தினமும் அவதிப்பட்டு வருகிறோம்.
இந்நிலையில், செட்டிக்குறிச்சி ஊருக்கு அருகேயே தற்போது கல்குவாரி அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. தூரமாக உள்ள கல்குவாரிகளால் ஊருக்குள் வெடிச்சத்தம் அதிகமாக கேட்கிறது. அருகே அமைத்தால் வீட்டுக்குள் உள்ள பொருட்கள் அனைத்து உருள ஆரம்பித்துவிடும். மேலும், சுமார் 50 அரசின் பசுமை வீடுகள் ஊருக்கு மேற்கே கட்டப்பட்டுள்ளன. இங்கு கல்குவாரி அமைத்தால் அந்த வீடுகள் இடிந்துவிழும் நிலை ஏற்படும். இதுகுறித்து நாங்கள் பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களது எதிர்ப்பை தெரிவிக்கும்பொருட்டு நாங்கள் இன்று கடைகளை அடைத்து, கருப்பு கொடிகளை ஏற்றி உள்ளோம் என்கின்றனர்.