Pongal Gift 2025: தமிழகமே ஹாப்பி..! பொங்கல் பரிசு தொகுப்பு, முதலமைச்சர் தொடங்கி வைத்தார்..
Pongal Gift 2025: தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
Pongal Gift 2025: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு:
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை சைதாப்பேட்டை 169வது வார்டில் உள்ள ரேஷன் கடையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோக திட்டத்தை தொடங்கி வைத்தார். முதலமைச்சர் ஸ்டாலினின் உருவப்படம் பொறிக்கப்பட்ட கைப்பையில் வழங்கப்பட்ட இந்த தொகுப்பில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதைதொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் நடைபெற உள்ளது. இதற்காக ஏற்கனவே பயனாளர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு உள்ளன. அதன்படி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பிற்காக தமிழக அரசுக்கு 249.76 கோடி ரூபாய் செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
யார் யாருக்கு பொங்கல் பரிசு:
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 14ஆம் தேதி முதல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வாழும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கலையொட்டி இலவச வேட்டி சேலையும் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் கடந்த ஜனவரி 3ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. வீடு வீடாக சென்று டோக்கன் கொடுக்கும் பணிகளும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள், நேரப்படி பயணர்கள் பொங்கல் பரிசு தொகுப்பை ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம்.
பொதுமக்கள் அதிருப்தி:
இதனிடையே பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட்டு வந்த ரூ.1000 அறிவிப்பில் வெளியாகவில்லை. முன்னதாக 1,000 ரூபாயில் தொடங்கி 2,500 ரூபாய் வரை பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த ஆண்டு நிதி நெருக்கடி காரணத்தால் பொங்கல் பரிசு தொகுப்புடன் பணம் வழங்கப்படவில்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி முந்திரி, பாசி பருப்பு, உலர் திராட்சை உள்ளிட்ட பொருட்களும் பரிசு தொகுப்பில் இடம்பெறவில்லை. பொங்கல் பரிசு தொகுப்புடன் பணம் வழங்கப்படாததற்கு எதிர்க்கட்சிகள், திமுக கூட்டணி கட்சிகள் அதிருப்தி தெரிவித்தனர். பொதுமக்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000 இடம்பெறாதது ஏமாற்றமாகவே அமைந்துள்ளது.