தூத்துக்குடி இந்திய உணவு கழகத்தில் புகுந்த வெள்ளம் - 8 ஆயிரம் டன் அரிசி, கோதுமை நாசம்
தமிழக அரசை பொருத்தவரை மத்திய அரசிடம் பெருந்தொகை எதிர்பார்ப்பது ஒருபுறம் இருந்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதில் சுணக்கம் காட்டுகிறது
தூத்துக்குடியில் இந்திய உணவுக்கழகத்துக்கு சொந்தமான குடோன் அமைந்து உள்ளது. இங்கு பொதுவினியோகத்துக்கான அரிசி, பருப்பு உள்ளிட்டவை இருப்பு வைக்கப்படுகின்றன. அதன்படி ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் அரிசி கொண்டு வரப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. இந்த குடோனில் சுமார் 24 ஆயிரம் டன் அரிசியும், 2 ஆயிரம் டன் கோதுமையும் இருப்பு வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழையால் மழை, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை வெள்ளம் மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள இந்திய உணவுக்கழக குடோனையும் சூழ்ந்தது. இந்த தண்ணீர் அங்கு இருந்த குடோன்களுக்குள் புகுந்தது. இதனால் குடோனில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த அரிசி மற்றும் கோதுமை மூட்டைகளை சூழ்ந்தது. இதனால் அரிசி மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதம் அடைந்து உள்ளன. அதே போன்று கோதுமை மூட்டைகளும் நனைந்து முளைக்க ஆரம்பித்து உள்ளன. இதில் சுமார் 8 ஆயிரம் டன் வரை சேதம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு இந்திய உணவுக்கழக ஊழியர் சங்க செயலாளர் கதிர்வேல் கூறும் போது, “தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக இந்திய உணவுக்கழக குடோனுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் குடோனில் வைக்கப்பட்டு இருந்த அரிசி மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதம் அடைந்து உள்ளன. இதில் சுமார் 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் டன் வரை சேதம் அடைந்து இருக்கலாம். இதனால் சேதம் அடைந்த அரிசி மூட்டைகளை விரைவாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தாமதம் ஆனால் சேதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதற்கு இந்திய உணவுக்கழக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இந்நிலையில் இந்திய உணவு கழகத்தில் மழை வெள்ளத்தில் நனைந்த அரிசி மூட்டைகளை பார்வையிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவர் ஜிகே. வாசன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ”தூத்துக்குடியில் உள்ள மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணம் அளித்தோம்...இன்றுடன் மழை, வெள்ளம் பாதிப்படைந்து 8வது நாள் ஆகிறது.. இன்றும் கூட சில இடங்களில் முட்டி வரை மழை நீர் வடியாமல் உள்ளது.. மக்களுக்கு உணவு சரிப்பட வழங்கவில்லை.. போர்க்கால அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு தனி கவனம் செலுத்த வேண்டும்.. குடிநீர், சுகாதாரம் காக்கப்பட வேண்டும்.. மின்சார இணைப்பு உடனடியாக வழங்கப்பட வேண்டும். நீர் பாசனம், குளம் குட்டை சரி செய்ய வேண்டும், ரயில் பாலங்கள், ஆறு, ஏரி பாலம் சரி செய்து சுமுகமாக ஏற்படுத்த வேண்டும்.. விவசாயம் வாழை, நேர் பயிர் மிக பெரிய அளவில் சேதமாகி உள்ளது.. தமிழக அரசை பொருத்தவரை மத்திய அரசிடம் பெருந்தொகை எதிர்பார்ப்பது ஒருபுறம் இருந்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதில் சுணக்கம் காட்டுகிறது.. மழை, வெள்ளம் பாதிப்பு என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது.
வானிலை ஆய்வு மையம் சரியாக அறிக்கை கூறிய பின்பும் தமிழக ஆட்சியாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. முறையாக, சரியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் பாதகம் குறைந்திருக்கும். முக்கியமாக வெள்ள பாதிப்பு வேதனையளிக்கிறது. 4 மாவட்டம் பாதிப்பு, அதில், குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் அதிக பாதிப்பு, இந்த பாதிப்பு அதிகமாக விளிம்பு நிலை மக்களுக்கு தான் பாதிப்பு, இதனால் நஷ்ட எவ்வளவு பணம் கொடுத்தாலும் தகும்” என்றார்.