விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டத்தில் பாராட்டு பத்திரமா?- வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக, அதிமுக, நாதக
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதாக இல்லை. நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம், வாழை பயிருக்கு ரூ.70 ஆயிரம் வழங்க வேண்டும்.
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமை தாங்கினார். மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சாந்தி ராணி, பொதுப்பணித்துறை தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன், கோரம்பள்ளம் வடிநில கோட்ட செயற்பொறியாளர் வசந்தி, மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் செயற்பொறியாளர் மாரியப்பன் பேசும் போது, மழை வெள்ளத்தால் தாமிரபரணி பாசன பகுதிகளில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து விளக்கினார். அப்போது, மழை வெள்ளத்தால் தாமிரபரணி ஆற்றின் கரைகள், குளங்கள், கால்வாய்களில் 297 இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. இந்த உடைப்புகள் ரூ.67 கோடி செலவில் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து குளங்களை நிரப்ப தற்போது கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த சேதங்களை நிரந்தரமாக சீரமைக்க ரூ.242 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என்றார்.
பின்னர் கூட்டத்தை தொடங்கி வைத்து, மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி பேசும் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 17, 18 தேதிகளில் பெய்த அதீத கனமழை காரணமாக விவசாய நிலங்கள், நீர் நிலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக சேதமடைந்த பகுதிகள் உடனடியாக தற்காலிகமாக சீரமைக்கப்பட்டன. மழை வெள்ளத்தால் மாவட்டத்தில் 1.07 லட்சம் எக்டேர் வேளாண் பயிர்களும், 41 ஆயிரம் எக்டேர் தோட்டக்கலை பயிர்களும் சேதமடைந்து உள்ளன. மொத்தம் 23 ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். வெள்ளப்பெருக்கால் சுமார் 1000 எக்டேர் விளைநிலங்களில் மணல் திட்டுக்கள் படிந்து உள்ளன. அதனை அகற்றும் பணி நடந்து வருகிறது என தெரிவித்தார்.
தொடர்ந்து விவசாயிகள் பேசும் போது, ஆத்தூர், முக்காணி பகுதியில் மழை வெள்ளத்தால் வெற்றிலை கொடிக்கால் முழுமையாக சேதமடைந்துவிட்டன. இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து உள்ளனர். எனவே, வெற்றிலை விவசாயிகளை பாதுகாக்க அவர்களுக்கு உடனடியாக உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், வெற்றிலை கொடிக்கால் விதை, அகத்தி விதை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் . மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதாக இல்லை. நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம், வாழை பயிருக்கு ரூ.70 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாயிகள் கூட்டத்துக்காக அதிக அளவில் போலீசாரை நிறுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது என்றனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயி மகா பால்துரை மழை வெள்ளம் பாதித்த போது மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு உயிரிழப்புகளில் இருந்து மக்களை பாதுகாத்ததாக தெரிவித்தார். இதற்கு நாம் தமிழர் கட்சி நிர்வாகி ராஜசேகர், இது பாராட்டு கூட்டம் அல்ல. மழை வெள்ளத்தில் பலர் உயிரிழந்து உள்ளனர். இங்கு விவசாய பிரச்சினைகள் பற்றி மட்டும் பேசுங்கள் என்று கூறினார். இதனால் அவர்களுக்கு இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அ.தி.மு.க.வை சேர்ந்த சந்தானம் பேசும் போதும், மாவட்ட நிர்வாகத்தின் மீது சில குறைகளை தெரிவித்தார். அப்போது தி.மு.க விவசாய அணியை சேர்ந்த வி.பி.ஆர்.சுரேஷ் உள்ளிட்ட சிலர் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தார். விவசாயிகள் கூட்டத்தை அரசியல் ஆக்காதீர்கள். விவசாயிகளின் மனுக்களை வாசித்து, அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தெரிவிக்க வேண்டும் என்று கூறினர். இதன் காரணமாக அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து மனுக்கள் வாசிக்கப்படாமல் ஆட்சியர் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து மனுக்களை வாங்கினார். விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டத்துக்காக மொத்தம் 106 மனுக்கள் அளிக்கப்பட்டு இருந்தன. அதில் 49 மனுக்கள் விவசாயம் சார்ந்தவை. இதில் அதிகாரிகளின் உரிய விளக்கங்களை அறிவதற்காக 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேரில் வந்திருந்தனர். ஆனால், பதில்கள் வாசிக்கப்படாததால் அந்த விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.