கூட்டுறவு வங்கியில் பேட்டரி வெடித்து மேலாளர் உயிரிழப்பு - ஸ்ரீவைகுண்டத்தில் அதிர்ச்சி
பேட்டரி வெடித்ததில் தீ மள மளவென பரவி வங்கி முழுவதும் தீப்பற்றிக் கொண்டது. உடனே அவர் தனது மனைவிக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவைகுண்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் கம்ப்யூட்டர் பேட்டரி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் மேலாளர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு அனைத்து பணியாளர் சிக்கன நாணய சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புதுகுடியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஸ்ரீதரன் வயது 52 செயலாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஒரு மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். இவருக்கு உதவியாக தற்காலிக பணியாளராக பெண் ஒருவர் வேலை செய்து வருகிறார்,
இந்த வங்கியுடன் இ-சேவை மையமும் செயல்பட்டு வருகிறது. இந்த இ சேவை மையத்தில் ஒரு பெண் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று மதியம் இ-சேவை மையத்தில் உள்ள பெண்ணும் ஸ்ரீதரனின் உதவியாளரும் மதிய உணவிற்காக வெளியில் சென்றுள்ளனர். ஸ்ரீதரன் மட்டும் தனியாக வங்கியில் இருந்துள்ளார். அந்த நேரத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் கம்ப்யூட்டரில் உள்ள பேட்டரி வெடித்துள்ளது. பேட்டரி வெடித்ததில் தீ மள மளவென பரவி வங்கி முழுவதும் தீப்பற்றிக் கொண்டது. உடனே அவர் தனது மனைவிக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார். அதற்குள் தீ முழுமையாக பரவியுள்ளது. இதற்கிடையில் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது புகைமூட்டமாக இருந்துள்ளது, அருகில் இருந்தவர்கள் கண்ணாடி கதவுகளை உடைத்து உள்ளே சென்று தீயில் சிக்கிய ஸ்ரீதரை மீட்டனர். ஆனால் அவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்து உள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கூட்டுறவு வங்கியின் ஸ்ரீதரின் அறையில் இருந்து பெட்ரோல் கேன் மற்றும் தீப்பெட்டி கிடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீதரன் பேட்டரி வெடித்து உயிர் இழந்தாரா இல்லை தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.