கடைமடைக்கு வராத தண்ணீர்.. கருகும் 3 ஆயிரம் ஏக்கர் பயிர்கள்..! டெல்டா விவசாயிகளுக்கு தீர்வு கிட்டுமா?
முள்ளையாறு என்ற ஆற்றின் மூலமாக பாசன வசதியை பெற்று வரும் நிலையில், இந்த ஆற்றில் தற்பொழுது தண்ணீர் மிக குறைந்த அளவு செல்வதால் நெல் பயிர்களுக்கு தண்ணீர் வைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
தரையோடு தரையாக செல்லும் தண்ணீர்:
திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 60000 ஏக்கர் பரப்பளவில் நேரடி விதைப்பிலும் 29 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடவு பணியிலும் விவசாயிகள் குறுவை நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மேட்டூர் அணை ஜூன் மாதம் 12ஆம் தேதி திறக்கப்பட்டதை அடுத்து தண்ணீர் வந்து விடும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் குறுவை நெல்சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் கடைமடை மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் தரையோடு தரையாக தண்ணீர் சொல்வதால் நெல் பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத சூழல் உருவாகியுள்ளது.
குறிப்பாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஆதிரங்கம் சேகள் நாகளுடயான்யிருப்பு மடபுரம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் 3000 ஏக்கர் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்ட குறுவை நெல் பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வருகிறது. இவர்களுக்கு முள்ளையாறு என்ற ஆற்றின் மூலமாக பாசன வசதியை பெற்று வரும் நிலையில் இந்த ஆற்றில் தற்பொழுது தண்ணீர் மிக குறைந்த அளவு செல்வதால் நெல் பயிர்களுக்கு தண்ணீர் வைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
கருகும் பயிர்கள்:
இதன் காரணமாக நெல் பயிர்கள் முற்றிலும் கருகி வருகிறது. உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே இந்த பயிர்களை காப்பாற்ற முடியும் இல்லையென்றால் முற்றிலுமாக நெல் பயிர்கள் கருகிவிடும் நிலை உருவாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஒரு ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் செலவு செய்து தற்பொழுது பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கையை வைத்துள்ளனர்.
தூர்வாராத கால்வாய்:
காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு ஆறு மற்றும் பாசன வாய்க்காலை தூர் வாருவதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்திருந்து பல இடங்களில் ஆறு மற்றும் ஏ பி சேனல் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டன. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ளே முள்ளை ஆற்றில் இருந்து பிரியும் மங்கள வாய்க்கால் கடந்த ஏழு வருடமாக தூர்வாரப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த வாய்க்காலை நம்பி ஆதிரங்கம் சேகல் ஆகிய இரண்டு கிராமங்களில் 2000 ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் பலமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் மங்கள வாய்க்காலை தூர்வாராதன் காரணமாக இரண்டு கிராமங்களுக்கும் தண்ணீர் வராத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு 1500 ஏக்கர் குருவை சாகுபடி செய்யப்பட்டு தண்ணீர் இல்லாமல் கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு விவசாயி ஆயிரம் ரூபாய் பணம் போட்டு மங்கள வாக்காளை ஹிட்டாச்சி எந்திரம் மூலமாக தாங்களே தூர்வாரி வருகின்றனர்.
தற்பொழுது பயிரிடப்பட்ட குருவை நெல் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வரும் நிலையில் அடுத்த கட்ட சாகுபடியான சம்பா சாகுபடியாவது முழுமையாக செய்ய வேண்டும் ஆகையால் நாங்களே பணம் போட்டு எங்களுடைய சொந்த செலவில் பாசன வாய்க்காலை தூர்வாரி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் முல்லையாற்றில் முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட வேண்டும் எனவும் தண்ணீர் வந்தால் மட்டுமே தற்போது பயிரிட்டுள்ள பயிர்களை ஓரளவுக்காவது காப்பாற்ற முடியும் இல்லையென்றால் செய்த செலவு மொத்தமாக இழந்து விடுவோம் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.