’’எங்களுக்கு விடியல் வேண்டும்’’- தஞ்சாவூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
’’வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அரசின் போனஸ் அறிவிப்பு உள்ளது. கடந்த ஆட்சியின் போது வைத்த கோரிக்கைகள் தீராத நிலையில், ஆட்சி மாற்றத்திற்குப் பின் புதிய பாதிப்புகளும் உருவாகியுள்ளது’’
தஞ்சாவூர் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்க சிஐடியு சார்பில் போக்குவரத்து தொழிலாளருக்கு விடியல் காண உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போக்குவரத்து கழகங்களில் பற்றாக்குறையை ஈடுகட்ட வரவுக்கும் செலவுக்கும் ஆன வித்தியாச தொகையை அரசு பட்ஜெட்டில் நிதி உதவி வழங்க வேண்டும், புதிய பேச்சுவார்த்தை உடனே தொடங்க வேண்டும். ஒய்வுபெற்றோர் பணப்பலன், அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீடு அமல்படுத்த வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும், அதிகாரிகளின் அடாவடிக்கு முடிவு கட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு பனிமலை தலைவர் செங்குட்டுவன் தலைமை வகித்தார். பொருளாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் ஜெயபால் கலந்து கொண்டு பேசுகையில், போக்குவரத்து தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7 ஆண்டுகளில், 4 வேலை நிறுத்தங்கள், காத்திருப்பு போராட்டம், கோட்டை முற்றுகை மட்டுமின்றி எண்ணற்ற ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்களை நடத்தினோம். அதிமுக அரசு நமது கோரிக்கையை அலட்சியப்படுத்தியது. இதனால் ஒட்டுமொத்த தொழிலாளர்களும் வெறுப்புக்கு உள்ளாகியது. இதனால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண கிடைக்கும் என தொழிலாளர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் ஆறு மாத காலம் இந்த பிரச்சனை தீர்வு கிடைக்கவில்லை. இறுதியாக வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அரசின் போனஸ் அறிவிப்பு உள்ளது. கடந்த ஆட்சியின் போது வைத்த கோரிக்கைகள் தீராத நிலையில், ஆட்சி மாற்றத்திற்குப் பின் புதிய பாதிப்புகளும் உருவாகியுள்ளது. பணியின் போது ஏற்படும் உணவு, டீசல் செலவை ஈடுகட்ட பேட்டா வழங்கப்பட்டு வருகிறது. பெண்கள் இலவச பயணம் என்ற அறிவிப்பால், அரைகுறை பேட்டாவையும் பறித்து விட்டது. இது அவசர பிரச்சனை உடனே தீர்க்க வேண்டும் என அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கு பல முறை மனு மேல் மனு கொடுத்தும் அலட்சியப்படுத்தும் கொடுமை அரங்கேறி வருகிறது. இன்சென்டிவ் உயர்த்த வேண்டும் என்பது கோரிக்கை பேச்சுவார்த்தைக்கான கோரிக்கைகளில் ஒன்று. ஆனால் இருக்கும் இன்சென்ட்டிவை பறிப்பதற்கான மோசடியான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆறு வருடம் என்ற பேருந்துகளின் ஆயுட்காலத்தை 9 வருடமாக அரசாணை பிறப்பித்து விட்டு, உதிரிபாகம் இல்லாமல் வாகனம் ஓட்ட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
டயர், பேட்டரி, பிரேக் லைனிங் போன்ற அடிப்படை உபகரணம் கூட இல்லாமல் போக்குவரத்து கழகங்கள் அதள பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. சாதாரணமாக ஒருவர் இடமாற்றம் வேண்டும் என்றால், அமைச்சர் சொல்ல வேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனர். இடமாற்றம் கேட்கும் தொழிலாளர்கள் அனைவரும் கோட்டைக்குச் சென்று அமைச்சரை பார்க்க முடியாமா என்பது வேதனையான விஷயமாகும். மேலும், வாரத்தில் ஒருநாள் சட்டப்படி வழங்க வேண்டிய வாரம் ஓய்வும் பறிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்துவிட்டது ஆனால் தொழிலாளர்களின் அவலநிலை மாறவில்லை. கடந்தாட்சி போலவே உள்ளது. அதிகாரிகளின் அடாவடித்தனமும் குறையவில்லை. அடுத்த ஒப்பந்தமும் பத்து மாதத்தில் வந்துவிடும். இனியும் தமிழக அரசு தாமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது, எனவே தமிழக அரசு உடனடியாக மேற்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்றார்.