யுனெஸ்கோ அங்கீகரித்த தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் மழை நீரில் மிதக்கும் அவலம்
’’2019 ஆம் ஆண்டு தாராசுரம் கோயிலில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற 50 லட்சம் செலவில் நிரந்தர வடிகால் திட்டம் செயல்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்’’
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரத்தில் இரண்டாம் ராஜராஜசோழனால், 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். 1987ஆம் ஆண்டில் பெருவுடையார் கோயில், யுனெஸ்கோ அமைப்பால் உலகப்பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. பின்னர், 2004ஆம் ஆண்டில் கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோயிலும் மற்றும் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலும் உலக பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டன. இக்கோயில், சோழ மன்னர்களில் இரண்டாம் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட அழகிய கலைக்கூடமாகும். இக்கோயிலைச் சுற்றிலும் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. தூண்களில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும், சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள வடிவங்களும், நாட்டிய முத்திரைகளை காட்டி நிற்கும் சிற்பங்களும், தேர் போன்று வடிவிலமைந்த மண்டபமும் என பல அரிய சிற்பக் கலைப் படைப்புக்களை இக்கோயில் கொண்டுள்ளது. இக்கோயில் அடிக்கு 1008 சிற்பங்கள் என்றும் கூறுவார்கள்.
வழக்கமான சைவத்தலங்களின் அமைப்பிலிருந்து சற்றே வேறுபட்டுள்ளது. இறைவிக்கென்று தனியே ஒரு கோயில் வலதுபுறம் அமைந்துள்ளது. ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பெண் தெய்வத்துக்கும் சமமாய் ஒரு தனி கோயில் அமைத்திருப்பது இதன் சிறப்பாகும். இக்கோயில் கருவறை விமானம் ஐந்து நிலை மாடங்களுடன் 80 அடி உயரம் உள்ளது. கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த இரண்டாம் இராஜராஜன் அங்கிருந்து தனது தலைநகரைத் தாராசுரத்திற்கு மாற்றி, அங்கு கட்டிய கோயிலே ஐராவதேசுவரர் கோயிலாகும். முதலில் தக்கயாகப்பரணி இந்தக் கோயிலின் மண்டபத்தில் தான் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இந்தக் கோயிலில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டில் இராஜராஜசோழனுக்கும் அவரது 5 மனைவியருக்கும் பள்ளிப்படை அமையப்பெற்றுள்ளது.
வாயிலில் நந்தியினருகே அமையப்பெற்றிருக்கும் பலி பீடத்தின் அருகிலுள்ள படிகளில், தட்டும்போது சரிகமபதநீ என்ற இசை ஒலி கேட்கும். மகா மண்டபம் யானைகளாலும் குதிரைகளாலும் இழுத்துச் செல்லப்படுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்திற்கு ஏறிச் செல்லும் படியில் யானைகள் ஒரு பக்கத்திலும் குதிரைகள் மற்றொரு பக்கத்திலும் தேரை இழுத்துச் செல்வதுபோல் உள்ள சிற்பத்தின் சக்கரம் கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. தூண்களில் நர்த்தன கணபதியின் உள்ளங்கை அகல சிற்பம் உள்ளது. நாட்டியத்தின் முத்திரைகள் காட்டும் பெண்களின் சிற்பங்களும், வாத்தியக்காரர்களின் குழுக்களும், புராணக் கதைகளும் சில சென்டி மீட்டர் அளவிலேயே மிகவும் தெளிவாகச் செதுக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் இராஜராஜனின் காலத்தில் இராஜராஜேச்சுரம் என்று பெயரிடப்பட்டு, இன்று தராசுரம் என மருவி வழங்கப்படுகிறது. ஐராவதேஸ்வரரின் துணைவி தெய்வநாயகி. இந்திரனின் வாகனமான ஐராவதம் என்கிற யானை துருவாச முனிவரின் சாபத்தால் அதன் வெள்ளை உருவம் மாறி கருமை நிறம் அடைந்தது. தன் நிறம் மாறியதால் வருத்தமுற்ற ஐராவதம் இத்தலத்திற்கு வந்து இங்கு எழுந்தருளிய சிவபெருமானை வணங்கி சாபத்திலிருந்து விடுதலை பெற்றதாகவும், அதனால்தான் இங்குள்ள இறைவனின் பெயர் ஐராவதேசுவரர் என்று வழங்கலாயிற்று. எமதர்மன் சாபம் பெற்றதால் கொண்ட உடல் எரிச்சல் தீர இங்குள்ள குளத்தில் நீராடி விமோசனம் பெற்றதால், அக்குளம் எமதீர்த்தம் என அழைக்கப்படுகிறது. இக்கோயில் தற்போது இந்தியதொல்லியியல் துறை கட்டப்பாட்டில் இருந்து வருகிறது.
இத்தகைய சிறப்பு பெற்ற கோயிலில் வருடந்தோறும் மழை காலங்களில் மழை நீர் வெளியேறாமல், கோயிலுக்குள்ளேயே தேங்கி விடுகிறது. கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பெய்து வரும் மழையினால், சிவன் சன்னதி, அம்மன் சன்னதி, நந்தி மண்டபம் உள்ளிட்ட அனைத்து கோயில் வளாகம் முழுவதும் மழை நீர் நிரம்புயுள்ளது. பக்தர்கள் தரிசனத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, வெளியூர் வெளி மாவட்டத்திலிருந்து வரும் பகதர்கள், வெளியிலேயே நின்று சாமி தரிசனம் செய்து விட்டு சென்று விடுகிறார்கள். கடந்த காலங்களில் பிரான்ஸ், அமெரிக்கா, ரஷ்யா போன்ற வெளி நாடுகளில் உள்ள கட்டிட கலைஞர்கள், கோயிலுக்குள் வந்து, கோயிலுள்ள கட்டிடங்கள், நுணுக்கங்கள், சிலைகள், கர்ப்பிணி பெண், நடனமாடும் சிலைகளை பார்வையிட்டு, சில நாட்கள் தங்கி செல்வார்கள். இதே போல் இந்தியா முழுவதுமுள்ள கட்டிட கலைஞர்கள், வந்து பார்வையிட்டு வந்தனர். ஆனால் கொரோனா தொற்று பாதிப்பால், 75 சதவீதம் பேர் வருகை குறைந்து விட்டது குறிப்பிடத்தக்கது.
மழை காலம் வந்தால், வருடந்தோறும் இது போன்ற நிலை இருப்பதையறிந்து, தொல்லியல் துறை முதுநிலை பராமரிப்பு அலுவலர் சங்கர் தலைமையிலான குழுவினர், கடந்த 2019 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் ஆம் ந்தேதி, தாராசுரம் கோவிலுக்கு நேரில் வந்து மழைநீர் பாதிப்பு குறித்து ஆய்வு செய்தனர். பின்னர் கோவிலில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற 50 லட்சம் செலவில் நிரந்தர வடிகால் திட்டம் செயல்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் தெரிவித்து, 2 ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை எந்தவிதமான பணிகள் நடைபெறவில்லை. மழை காலங்களில் தண்ணீர் வடிவதற்கும் வழியில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம், பொது மக்கள் மற்றும் பக்தர்களின் நிலையறிந்து, தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் மழை நீர் தேங்காதவாறு, நிரந்தரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.