பூம்புகாரில் மீண்டும் இந்திரவிழா நடத்த நடவடிக்கை - சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் உறுதி
’’கடலில் மூழ்கியதாக கருதப்படும் காவிரி பூம்பட்டினம் குறித்த ஆய்வை பூம்புகாரில் மேற்கொள்வது குறித்து தொல்லியல் துறையுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்’’
சங்க இலக்கிய சிலப்பதிகார நாயகன், நாயகியான கோவலன் - கண்ணகி வாழ்ந்த இடம்தான் பூம்புகார். காவிரி நீர் கடலுடன் சங்கமிக்கும் புகழ்பெற்ற இடம். இதன் சிறப்புகளை அனைவருக்கும் எடுத்துரைக்கும் விதமாக, பூம்புகார் நகரம் சுற்றுலாத் தலமாக உருவாக்கப்பட்டது. மேலும், சிலப்பதிகார வரலாற்றை நினைவுகூறும் வகையில் கலைக்கூடம், பாவை மன்றம், நெடுங்கால் மன்றம், சிறுவர் பூங்கா ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அமைந்துள்ள பூம்புகார் சுற்றுலாதலத்தை தமிழக சுற்றுலாதுறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள கலைக்கூடம், பாவை மன்றம், நிலா முற்றம், பளிங்கு மண்டபம், சங்கு மற்றும் சிப்பி விடுதி, காவிரி சங்கமம் உள்ளிட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சுற்றுலாதுறை அமைச்சர் மதிவேந்தன் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டை ஆண்ட அதிமுக அரசு வரலாற்று சிறப்புமிக்க தமிழர்களின் பண்பாட்டை வெளிப்படுத்தும் பூம்புகாரில் எந்த சீரமைப்பு பணிகளும் செய்யாமல் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்துள்ளது என குற்றம்சாட்டினர்.
மேலும் தொடர்ந்து பேசிய அமைச்சர் தற்போது பூம்புகார் சுற்றுலா மையத்தை புதுப்பித்து மெருகேற்றும் வகையில் நடந்த சட்டமன்ற மானிய கோரிக்கையில் பூம்புகார் குறித்து விவாதிக்கப்பட்டு பிரமாண்ட திட்டம் செயல்படுத்தபட உள்ளது. அதன் மூலம் இந்த வரலாற்று சிறப்புமிக்க நகரை வருங்காலத்தில் மேலும் இதன் கலைகளையும் அழகையும் மேம்படுத்த பல வசதிகளை செய்ய உள்ளது என்றார். தொடர்ந்து சங்ககால முதல் நடைபெற்று வந்து, பின்னர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்டது சுற்றுலாத்துறை சார்பில் அரசு விழாவாக நடைபெற்று வந்த பூம்புகார் சித்திரா பௌர்ணமி இந்திரவிழா கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறாத நிலையில் தற்போது திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு மீண்டும் இந்திரவிழாவை நடத்துமா? என்ற செய்தியாளரிடம் கேள்விக்கு கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை பெறுத்து முதல்வரின் ஆலோசனை பெற்று நடைபெற வழிவகை செய்யப்படும் என தெரிவித்தார்.
கண்ணகி கோவலன் வரலாற்று கால காவிய நகரமாம் பூம்புகார் கடல் உள்ளே இருப்பதாக சொல்லப்படும் நிலையில் அதன் வரலாற்றை மீட்டெடுக்க தொல்லியல் துறையினர் உடன் ஆலோசித்து வரலாற்றை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் சுற்றுலா தளங்கள் மது பிரியர்களின் கூடாரமாக திகழ்ந்து அவர்கள் சுற்றுலா தளத்தில் உள்ள உடமைகளை சேதப்படுத்துவதை தடுப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். அமைச்சரின் இந்த ஆய்வின் போது சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.