பரிசீலனை செய்ய வேண்டும்... போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் எதற்காக?
ஓட்டுனர், நடத்துனர் பணிகளுக்கு இரண்டு உரிமங்கள் வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தமிழ்நாடு அரசு கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

தஞ்சாவூர்: ஓட்டுநர், நடத்துனர் பணிகளில் இரண்டு உரிமம் வேண்டும் என்ற நிபந்தனையை கைவிடப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தஞ்சையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் சங்கம் ஏஐடியுசி சார்பில் ஓட்டுனர், நடத்துனர் பணிகளுக்கு இரண்டு உரிமங்கள் வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தமிழ்நாடு அரசு கைவிட வலியுறுத்தி தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் நகர கிளை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க பொதுச் செயலாளர் எஸ்.தாமரைச்செல்வன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துனர் பணிக்கு ஆன்லைன் மூலம் கடந்த மார்ச் 21 மதியம் 1மணி முதல் ஏப்ரல் 21 மதியம் 1மணி வரை வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் ஓட்டுநர், நடத்துனர் பணிக்கு இரண்டு உரிமங்களும் வைத்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர், நடத்துனர் பணிக்கு தனித்தனியாக உரிமம் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர் பணிக்கு எட்டாவது வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி என்பது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என நம்பி பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் அரசின் அறிவிப்பானது வேலைக்காக காத்திருப்போரின் வாழ்வுரிமையை பறிப்பதாக அமைந்துள்ளது.
தமிழ்நாடு அரசின் சார்பில் அந்தந்த போக்குவரத்து கழக தலைமை அலுவலகங்களில் மற்றும் சென்னை கும்மிடிப்பூண்டியில் தலைமையிடமாக செயல்படும் சாலை போக்குவரத்து நிறுவனத்தால் பயிற்சி அளிக்கப்பட்டு வருபவர்களுக்கும் ஓட்டுநர் உரிமம் மட்டுமே வழங்கப்படுகிறது. முன்பிருந்தது போன்று நடத்துனர் உரிமம் சேர்த்து வழங்குவது இல்லை. சாலை போக்குவரத்து நிறுவனத்தால் லட்ச ரூபாய் பணம் கட்டி பயிற்சி முடித்து வருபவர்களும் இந்த வேலை வாய்ப்பு இல்லாது பாதிக்கப்படுவார்கள்.
எனவே தமிழ்நாடு அரசு இதுகுறித்து பரிசீலனை செய்து ஏற்கனவே பின்பற்றிய நடைமுறையில், ஓட்டுநர், நடத்துனர் பணிகளில் உள்ள விதிமுறைகள் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் துரை.மதிவாணன், மத்திய சங்கத் தலைவர் என்.சேகர், பொருளாளர் சி.ராஜ மன்னன், சிஐடியூ மத்திய சங்க பொருளாளர் எஸ்.ராமசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். சங்கத்தின் துணைச் செயலாளர் எம்.தமிழ்.மன்னன் நன்றி கூறினார்.





















