கடன் தருவதாக பலரிடம் பல லட்சம் மோசடி: வங்கி மூலம் நேரடியாக கடன் பெறுவது ஒன்றே சிறந்தது -மாவட்ட கண்காணிப்பாளர்
கோபிகிருஷ்ணன் உள்ளிட்ட நால்வரும் பேசி கடனை செயலாக்கம் செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்று பெற்றுக்கொண்டு கடன் தராமல் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
கால் சென்டர் என்கிற போர்வையில் கடன் தருவதாக பலரிடம் பல லட்சம் ரூபாய் பணம் பெற்று மோசடி செய்த கும்பலை திருவாரூர் சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் ஜாம்பவானோட பகுதியைச் சேர்ந்த கேபிள் டிவி ஆபரேட்டர் உதயமூர்த்தி, காட்டூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான வெங்கடேசன், முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்த விவசாயி இலக்கியதாசன் ஆகியோர் லோன் வாங்கி தருவதாக தங்களிடமிருந்து ஒரு லட்ச ரூபாயை பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாக தனித் தனியே திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்திய திருவாரூர் சைபர் கிரைம் காவல்துறையினர் இது போன்று தமிழகம் முழுவதும் 80க்கும் மேற்பட்டவர்களிடம் கடன் பெற்று தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை கைது செய்துள்ளனர். இந்த விசாரணையில் நெசப்பாக்கம் எம்ஜிஆர் தெருவை சேர்ந்த கோபிகிருஷ்ணன் வயது 32 என்பவர் திருவொற்றியூர் பகுதியில் ஆதித்யா பிர்லா இன்சூரன்ஸ் கம்பெனி என்கிற பெயரில் போலியான கால்சென்டர் நிறுவனம் துவங்கி 50க்கும் மேற்பட்ட பெண் பணியாட்களை நியமித்து பொதுமக்களிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு லோன் பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறி அவர்களுடைய இருந்து தங்களுடைய லோன் செயலாக்கம் தொடர்பாக ஒரு குறிப்பிட்ட தொகையை நீங்கள் எங்கள் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும் எனக் கூறி பல்வேறு நபர்களிடமிருந்து பணத்தை பெற்று வந்துள்ளனர்.
இவருடன் திருவாரூர் மாவட்டம் அலிவலம் புது தெருவை சேர்ந்த ஸ்டாலின் வயது 33, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பகுதியை சேர்ந்த நடராஜன் வயது 22 வியாசர்பாடியை சேர்ந்த சுரேஷ் வயது 34 ஆகிய மூன்று பேரும் இந்த மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதில் சுரேஷ் என்பவர் வோடபோன் கம்பெனியில் சிம் கார்டு விற்பனை செய்யும் ஏஜெண்டாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கால் சென்டர் பாணியில் பெண் பணியாளர்கள் பொதுமக்களிடம் பேசிய பின்பு லோன் எடுக்க விருப்பமுள்ளவர்களிடம் கோபிகிருஷ்ணன் உள்ளிட் நால்வரும் பேசி கடனை செயலாக்கம் செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்று பெற்றுக்கொண்டு கடன் தராமல் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த பெண்களுக்கு கடன் பெற்று தருவதாக இவர்கள் பணம் வாங்கி ஏமாற்றுவது ஏதும் தெரியவில்லை என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. மேலும் திருவாரூர் சைபர் கிரைம் காவல்துறையினர் அந்த நிறுவனத்தில் நடத்திய சோதனையில் 99 ஆயிரத்து 854 ரூபாய் பணம், ஒரு கணினி ஒரு மடிக்கணினி 72 செல்போன்கள் 89 சிம் கார்டுகள் 21 ஏடிஎம் அட்டைகள் 21 காசோலை புத்தகங்கள் 8 எக்ஸ்டன்ஷன் பாக்ஸ் 40 லாவா செல் போன் சார்ஜர் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.
இந்த நிலையில், திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள கைப்பற்றப்பட்ட பொருட்களை திருச்சி மண்டல ஐஜி சந்தோஷ்குமார், தஞ்சை சரக டிஐஜி கயல்விழி, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினரை வெகுவாக பாராட்டினர். மேலும் இதுகுறித்து திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் கூறுகையில் ஆன்லைன் மூலம் ஆப் மூலம் லோன் தருவதாக வரும் தொலைபேசி அழைப்புகளை நிராகரிக்க வேண்டும். இது போன்று லோன் தருவதாக கூறும் முகம் தெரியாதவர்களிடம் பணத்தைக் கட்டி ஏமாற வேண்டாம் என்றும் வங்கி மூலம் நேரடியாக கடன் பெறுவது ஒன்றே சிறந்தது என்றும் தெரிவித்தார்.