திருவாரூர்: 15 வருடங்களாக சாதி சான்றிதழ் கேட்டு போராடி வரும் பழங்குடியின மக்கள்
15 வருடங்களாக சாதி சான்றிதழ் கேட்டு போராடிவரும் பழங்குடியின மக்கள். சுக்கு நூறாகும் மாணவ, மாணவிகளின் கல்லூரி கனவு.
திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மலைக்குறவர் சாதியை சேர்ந்த பழங்குடியின மக்கள் சுமார் 700 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடலூர் மாவட்டம் இவர்களின் சொந்த மாவட்டமாக இருந்தாலும் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 45 வருடங்களாக இவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு அவர்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வீட்டு வரி ரசீது உள்ளிட்ட அரசின் அனைத்து ஆவணங்களும் இருப்பினும் இன்று வரை தங்களுக்கு சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை என்று புலம்பி வருகின்றனர். குறிப்பாக காட்டூர் அம்மையப்பன் செல்லூர் வடபாதிமங்கலம் மாங்குடி உள்ளிக்கோட்டை சித்தமல்லி கொல்லுமாங்குடி களப்பால் அக்கரைக்கோட்டகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கூடை, முறம் பின்னி விற்பது, பன்னி வளர்த்தல் மற்றும் வீடு வீடாகச் சென்று பீங்கான் ஜாடிகள் விற்பது போன்ற பல்வேறு தொழில்களை செய்து பிழைத்து வருகின்றனர். தாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து வரும் நிலையில் தங்கள் பிள்ளைகளாவது கெளரவமாக வாழ வேண்டும் என்பதற்காக அவர்களை சிரமப்பட்டு படிக்க வைப்பதாக கூறுகின்றனர். ஆனால் அவ்வாறு படிக்கின்ற குழந்தைகள் நல்ல மதிப்பெண்கள் எடுக்கின்ற போதும் சாதி சான்றிதழ் இல்லாத காரணத்தினால் அரசின் கல்வி உதவித் தொகை போன்ற சலுகைகளை பெற முடியாமலும், கல்லூரிகளில் சேர முடியாமலும் தவித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் வசிக்கின்ற தங்கள் உறவினர்களுக்கு இந்து மலைக்குறவன் என்கிற பழங்குடியின சாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும், தங்களுக்கு தாழ்த்தப்பட்டோர் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சாதி சான்றிதழ் வழங்குவதாக திருவாரூர் மாவட்ட நிர்வாகம் கூறுவதாகவும் அதனை ஏற்க மறுத்து தங்களுக்கு தங்கள் உறவினர்களை போன்று பழங்குடியின சாதி சான்றிதழ் வேண்டும் என்று கடந்த 15 வருடங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருவதாகவும் இன்று வரை தங்களுக்கு ஜாதி சான்றிதழ் கிடைக்கவில்லை என்றும் இவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் காட்டூர் கலைஞர் நகரில் வசிப்பவர்களில் கணவருக்கு சாதி சான்றிதழ் இல்லை என்கிற நிலை இருக்கும்போது அவரது உறவுக்கார பெண்ணான மனைவிக்கு பழங்குடியின சாதி சான்றிதழ் இருப்பது விந்தையாக உள்ளது. இந்த சாதி சான்றிதழ் இல்லாத பிரச்சினை காரணமாக 12-ம் வகுப்பு படித்த மாணவிகள் பத்தாம் வகுப்பு படித்த மாணவிகள் மேற்படிப்பை தொடர முடியாமல் பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்கப்படுகின்ற அவல நிலையும், அதேபோன்று மாணவர்கள் பன்னி மேய்ப்பது போன்ற தங்களது குடும்பத்திற்கு உதவியாக இருக்கும் வேலைகளை செய்ய வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதுகுறித்து கடந்த வாரத்தில் கூட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி சீருடையுடனும் புத்தக பையுடனும் சென்று மாணவ, மாணவிள் மனு அளித்தும் இதுவரை தங்கள் குறை தீர்வதற்கான எந்த முன்னெடுப்பும் எடுக்கப்படவில்லை என்று கூறுகின்றனர்.
எங்களைப் போன்று எங்களின் முன்னோர்களைப் போன்று எங்களது குழந்தைகள் பன்னி மேய்த்து தெருத்தெருவாக சென்று ஜாடி விற்று, கூடை முறம், பின்னி பிழைக்கக் கூடாது நன்றாக படித்து உயர் பதவிகளுக்கு செல்ல வேண்டும் என்கிற எங்களது கனவிற்கு கொல்லி வைக்கும் விதமாக சாதி சான்றிதழ் இல்லாத பிரச்சனை இருக்கிறது என்று கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக 12-ம் வகுப்பு முடித்துவிட்டு பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு இரண்டு வருடங்களாக சாதி சான்றிதழுக்காக காத்திருப்பதால் தங்களது பட்டப் படிப்பு கனவு தகர்ந்து போவதாக மாணவ, மாணவிகள் தெரிவிக்கின்றனர். விரைவில் தங்களுக்கு சாதி சான்றிதழ் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறு வழங்கப்படாத பட்சத்தில் குடும்பத்துடன் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமைத்து சாப்பிட்டு அங்கேயே இருந்து இறப்பதை தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என்று அவர்கள் வேதனை பொங்க தெரிவிக்கின்றனர். எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து பன்னி மேய்க்கின்ற தொழிலை செய்து வரும் பழங்குடியின மக்களின் பிள்ளைகளும் படித்து பட்டம் பெற்று சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருக்கின்ற வாய்ப்பினை அரசு ஏற்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.