மேலும் அறிய
திருவாரூரில் புகாருக்கு நடவடிக்கை எடுக்காததால் காவல் நிலையம் முன் இளைஞர் தீக்குளிப்பு
தீக்குளித்த சுதாகருக்கு 80% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சுதாகர்
திருவாரூர் மாவட்டம் மானந்தங்குடி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் சுதாகர் (36). தனது இருதய பாதிப்பிற்கு சிகிச்சை பெறுவதற்காக தனது மனைவி சுதாவின் அண்ணனான பிரசாந்த் என்பவரிடம் செலவுக்கு ஒரு லட்சம் பணம் கடனாக பெற்றுள்ளார். இந்த நிலையில் சுதாகர் பிரசாந்திற்கு 90 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டார். மீதம் கொடுக்க வேண்டியிருந்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுக்க வலியுறுத்தி பிரசாந்த் அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் பிரசாந்த், சுதாகர் வீட்டிற்கு சென்று மீதமுள்ள பணத்தை எப்பொழுது தருகிறாய் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். பின்னர் வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவருக்கும் இடையே கைகலப்பாக மாறியது, அதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி பிரசாந்த் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் சுதாகரின் மனைவி சுதா பேரளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் மறுநாள் காலை பிரசாந்த் என் மீது காவல் நிலையத்தில் எப்படி புகார் செய்தார் எனக் கூறி மீண்டும் சுதாகரன் மீது பிரசாந்த் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

சுதாகர் அளித்த புகாரின் மீது பேரளம் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி சுதாகர் குடும்பத்துடன் பேரளம் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது காவல்துறையினருடன் சுதாகர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். நான் கொடுத்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் என்னை வந்து மீண்டும் பிரசாந்த் தாக்கி உள்ளார். எனக் கூறிக்கொண்டே காவல்துறையினர் தனது புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு பேரளம் காவல் நிலையம் வளாகத்தில் தீக்குளித்து உள்ளார். இதனை அடுத்து அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சுதாகர் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுதாகரை பரிசோதித்த மருத்துவர்கள் 80 சதவீதம் உடலில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். பின்னர் சுதாகரின் மனைவி சுதா அளித்த புகாரின் அடிப்படையில் பேரளம் காவல்துறையினர் பிரசாந்த் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து பேரளம் காவல்துறையினரிடம் கேட்டபொழுது நேற்றைய முன்தினம் இரவு சுதா புகார் கொடுத்த சிறிது நேரத்தில் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று இரு தரப்பினரிடமும் விசாரணை செய்தனர். இந்த நிலையில் மறுநாள் காலை விசாரணை நடத்த இருந்த நிலையில் அதற்கு முன்னதாக சுதாகர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டார். தற்போது பிரசாந்தை கைது செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















