சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் திமுக - முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகர அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைப்புச் கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அதிமுக நகர கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளரும், பூம்புகார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கழக அமைப்புச் செயலாளர், நாகை மாவட்ட அதிமுக செயலாளரும், தமிழக முன்னாள் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சரும், தற்போதைய வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், 99.5 சதவீதம் அதிமுகவினர் எடப்பாடியாரை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தனர். தற்போது கழகத்தினர் எழுச்சியுடன் நடை போட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால், பொய் வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்த திமுகவினர் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் திருச்சி அருகே ஒரு திமுக கவுன்சிலரின் கணவன் அரிவாளை எடுத்துக் கொண்டு கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதற்காக மூன்று பேரை சாலையில் ஓட ஓட விட்டு விரட்டியதை சமூக வலைதளங்களில் கண்டோம்.
அதுமட்டுமன்றி கஞ்சா விற்பனை அதிகரித்து சிறுவர்கள் சீரழிந்து வருகிறார்கள் என்றார். நிகழ்ச்சியில் முன்னாள் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், சீர்காழி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட கழக மகளிர் அணி செயலாளர் மா.சக்தி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற மற்றொரு நிகழ்வு
இந்து முன்னணி கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு மாநில தலைவர் கனல் கண்ணன் கைதை கண்டித்து மயிலாடுதுறையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.
இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சாரப் பயணம் என்ற நிகழ்ச்சியில் மதுரவாயலில் நடைபெற்ற கூட்டத்தில் கனல் கண்ணன் பெரியார் சிலை தொடர்பாகச் சர்ச்சை கருத்துகளைக் கூறி இருந்தார். ஸ்ரீரங்கம் கோவிலுக்கு முன்பாக பெரியார் சிலை இருக்கக் கூடாது. கடவுள் இல்லை என்று சொன்னவன் சிலை எதற்குக் கோவிலுக்கு முன் இருக்க வேண்டும். அவரின் சிலையை இடிக்க வேண்டும். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தரிசனம் செய்பவர்கள் இவரின் சிலையைப் பார்ப்பது சரியாக இருக்காது. அவரின் சிலையை உடைத்தால் அதுதான் உண்மையான எழுச்சி என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். இந்தச் சம்பவம் இணையதளங்களில் வைரலானது. கனல் கண்ணனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகரித்தது.
இந்நிலையில், கனல் கண்ணனைக் கைது செய்ய வேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பிலும் சென்னை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அவரது முன்ஜாமீன் மனுவும் ரத்து செய்யப்பட்ட நிலையில், அவர் சுதந்திர தினத்தன்று புதுச்சேரியில் வைத்து கைது செய்யப்பட்டு, எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஆகஸ்ட் 26 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்து முன்னணி கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு மாநில தலைவர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அவரை உடனடியாக விடுதலை செய்ய கோரி மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் சாமிநாதன் தலைமையில் நாகை மாவட்ட தலைவர் காரைக்கால் கணேஷ் , மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்ட 21 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை மயிலாடுதுறை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் தலைமையில் காவல்துறையினர் கைது செய்து வேனில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்