வலசை பறவைகள் வரத்து குறைந்தது... ஏன் தெரியுங்களா?
ஏரிகளில் ஆகாயத்தாமரையை அகற்றி, மண் சார்ந்த தாவரங்களை வளர்ப்பது மட்டுமல்லாமல், பறவைகள் அமருவதற்கான மரங்களுடன் கூடிய சிறு திட்டுகளையும் உருவாக்க வேண்டும்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழை உள்ளிட்ட காரணங்களால் நீர் நிலைகளில் நீர் வரத்து அதிகமாகி உள்ளது. இதனால் நடப்பாண்டு வலசை பறவைகளின் வருகை குறைந்துள்ளது என்று தெரிய வந்துள்ளது.
ஆண்டுதோறும் அக்டோபரிலிருந்து பிப்ரவரி மாதம் வரை வட மாநிலங்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட வட திசை நாடுகளிலிருந்து டெல்டா மாவட்டங்களுக்கு பறவைகள் வருவது வழக்கம். வட மாநிலங்களிலும், வட திசை நாடுகளிலும் இந்தக் காலகட்டத்தில் கடும் குளிர் நிலவுவதால், இனப்பெருக்கம் செய்ய முடியாது. இதனால், அப்பறவைகள் இங்கு வந்து இரை தேடி, கூடு கட்டி, இனப்பெருக்கம் செய்கின்றன. அப்பறவைகளுக்கு ஏற்ற தட்ப வெப்பநிலை இங்கு இருப்பதே இதற்குக் காரணம். குஞ்சுகள் வளர்ந்து பறக்கும் நிலையை எட்டும்போது, தங்களது பகுதிக்கு அழைத்துச் செல்கின்றன. இவை வலசை பறவைகள் என அழைக்கப்படுகின்றன.

இதுபோல, வட திசையிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்துக்கு நத்தைக் கொத்தி நாரை, சாம்பல் நாரை, நடுத்தர கொக்கு, பெரிய கொக்கு, சிறகி, ஆற்று ஆலா, மீசை ஆலா, அரிவாள் மூக்கன், வாத்து இனங்கள் போன்றவை அக்டோபர் - பிப்ரவரி காலகட்டத்தில் அதிக அளவில் வருவது வழக்கம். இந்தக் காலகட்டத்தில் இங்கு தேவையான இரைகள் கிடைப்பதால், வலசை பறவைகள் அதிக அளவில் வருவதற்கு காரணமாக இருக்கிறது. ஆனால், நடப்பு வடகிழக்குப் பருவ மழையின்போது இயல்பை விட அதிகமாக மழை பெய்தது. தொடர் மழை காரணமாக டெல்டா மாவட்டங்களிலுள்ள ஏரிகளில் தண்ணீர் வரத்து அதிகமாகி, நீர்மட்டமும் உயர்ந்து காணப்படுகிறது.
நீர்ப்பறவைகளைப் பொருத்தவரை நீரில் மூழ்கி இரை தேடுவது வழக்கம். அதற்கேற்ப நீர்மட்டம் குறைவாக இருந்தால்தான், அப்பறவைகளால் தண்ணீரில் மூழ்கி இரை தேட முடியும். ஆனால் நடப்பாண்டு ஏரிகளில் நீர்மட்டம் அதிகமாக இருப்பதால், அவற்றால் மூழ்கி இரை தேட முடியாத நிலை நிலவுகிறது. மேலும், பகலில் வெயிலும், இரவில் பனியும் அதிகமாக இருப்பதும், தஞ்சாவூரிலிருந்து அப்பறவைகள் வேறொரு பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றிருக்கலாம் என்ற கருத்தும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் நிலவுகிறது.
மன்னார்குடி அருகேயுள்ள வடுவூர் ஏரியில் தண்ணீர் அளவு அதிகமாக இருப்பதால், ஒரத்தநாடு அருகேயுள்ள உளூர் ஏரிக்கு வலசை பறவைகள் கணிசமான அளவுக்கு வந்து தங்கியுள்ளன. தஞ்சாவூர் அருகேயுள்ள சமுத்திரம் ஏரியில் வெங்காயத்தாமரை பரவலாக படர்ந்திருப்பதால், அருகில் குளிச்சப்பட்டு கிராமத்திலுள்ள பொன்னன் ஏரியில் தஞ்சமாகிவிட்டன. இதனால், உளூர் ஏரி மற்றும் குளிச்சப்பட்டு பொன்னன் ஏரியில் வழக்கத்தை விட வலசை பறவைகளின் வருகை அதிகமாக உள்ளது. என்றாலும், கடந்த ஆண்டை விட நடப்பாண்டு வலசை பறவைகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. இதனால், வழக்கமாக வலசை பறவைகளைக் காணும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறுகையில், தஞ்சாவூர் அருகேயுள்ள சமுத்திரம் ஏரி, கள்ளப்பெரம்பூர் ஏரி, குளிச்சப்பட்டு பொன்னன் ஏரி ஆகியவற்றில் பறவைகள் கணக்கெடுப்பு செய்யப்பட்டது. இந்த ஏரிகளில் கடந்த ஜனவரி மாதத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில், பிப்ரவரி மாதம் பறவைகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. கள்ளப்பெரம்பூர் ஏரியில் ஜனவரி மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 1,128 பறவைகளைப் பார்த்தோம். பிப்ரவரி தொடக்கத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 79 வகைகளில் ஏறத்தாழ 700 பறவைகளையே பார்க்க முடிந்தது. இதேபோல, சமுத்திரம் ஏரியில் பிப்ரவரி 2 ஆம் தேதி எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 48 வகைகளில் 418 பறவைகளை மட்டுமே காண முடிந்தது. இது, கடந்த ஆண்டை விட குறைவு. இதனால், வழக்கமாக வரக்கூடிய பறவைகளில் கிட்டத்தட்ட 30 சதவீதம் குறைந்துள்ளது.
வலசை பறவைகள் அதிகமாக வரக்கூடிய கள்ளப்பெரம்பூர் ஏரி, சமுத்திரம் ஏரி உள்ளிட்ட ஏரிகளில் மண் சார்ந்த தாவரங்களை விட ஆகாயத்தாமரை போன்ற வெளிநாட்டு ஆக்கிரமிப்பு செடிகள்தான் அதிகமாக இருக்கின்றன. இதனால், பறவைகளுக்குத் தேவையான இரைகளான பூச்சிகள் கிடைப்பதில்லை. இதுவும் பறவைகள் வருகை குறைவதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
எனவே, ஏரிகளில் ஆகாயத்தாமரையை அகற்றி, மண் சார்ந்த தாவரங்களை வளர்ப்பது மட்டுமல்லாமல், பறவைகள் அமருவதற்கான மரங்களுடன் கூடிய சிறு திட்டுகளையும் உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தரப்பில் தெரிவித்தனர்.





















