திருடியவரே திரும்ப வைத்த அதிசயம்; கோயிலுக்கு திரும்ப வந்தது அம்மனின் வெள்ளி முகக்கவசம்
சக்தி படைத்த அம்மனின் முகக்கவசத்தை திருடிச் சென்றவர் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பார்.
தஞ்சாவூர்: காலம் கலிகாலம் ஆகிடுச்சு என்று சொல்பவர்கள் கூட பட்டுக்கோட்டையில் நடந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டால் அதிசயித்துதான் போய்விடுவார்கள். திருடிய அம்மனின் வெள்ளி முகக்கவசத்தை அந்த நபரே திரும்ப வைத்து விட்டு சென்றுள்ள சம்பவம் நடந்துள்ளது.
யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல என்று கிராமங்களில் திருட்டு போன பொருட்கள் கிடைக்காது என்பார்கள். ஆனால் அம்மனின் வெள்ளி முகக்கவசத்தை திருடிய மர்ம நபர் அதை மீண்டும் திருடிய இடத்திலேயே வைத்த சம்பவம்தான் தற்போது பட்டுக்கோட்டையில் அனைவரும் வியந்து பேசும் நிகழ்வாக உள்ளது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சவுக்கண்டி தெருவில் ஆகாச மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலில் மாசி மாத திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடந்து வருகிறது.
அதேபோல் இந்தாண்டும் கடந்த 7-ந் தேதி மாசி மாத திருவிழா தொடங்கியது. அப்போது அம்மனுக்கு கரகம் வைத்து அரை கிலோ எடையிலான வெள்ளி முகக்கவசம் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது. மறுநாள் 8ம் தேதி காலை இந்த வெள்ளி முகக்கவசம் திருட்டு போய் இருந்தது. இது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கோவில் நிர்வாகி பாலசுப்பிரமணியம் என்பவர் பட்டுக்கோட்டை டவுன் போலீசில் இதுகுறித்து புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில்தான் ஒரு அதிசய சம்பவம் நடந்தது. கோவில் நிர்வாகி பாலசுப்பிரமணியனுக்கு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்மநபர் அம்மன் வெள்ளி முகக்கவசத்தை கோவில் பந்தலுக்குப் பின்புறம் வைத்துள்ளேன். எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டு தொடர்பை துண்டித்து விட்டார். உடனே பாலசுப்பிரமணியன் அந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது மஞ்சள் துணியில் சுற்றி அம்மனின் முகக் கவசம் இருந்தது. இதை கண்ட பொதுமக்கள் ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டனர். திருட்டு போன பொருள் கிடைப்பது என்பது குதிரை கொம்பு, ஆனால் அம்மனின் முகக்கவசத்தை எடுத்துச் சென்ற மர்மநபர் பயந்து போய்தான் இதை திருப்பி வைத்து இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து பாலசுப்பிரமணியன், பட்டுக்கோட்டை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கோயிலுக்கு வந்த போலீசார், பாலசுப்பிரமணியன் செல்போன் எண்ணுக்கு வந்த நம்பர் குறித்து விசாரித்த போது திருப்பூரில் இருந்து அழைப்பு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அற்புதம் செய்து தன் முகக்கவசத்தை திரும்ப தன்னிடமே வர செய்து விட்டார் ஆகாச மாரியம்மன் என்று பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தெரிவித்து வருகின்றனர்.
சக்தி படைத்த அம்மனின் முகக்கவசத்தை திருடிச் சென்றவர் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பார். அதனால்தான் திரும்ப கொண்டு வந்து வைத்துவிட்டு சென்றுள்ளார் என்றும் பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர். எது எப்படியோ திருடப்பட்ட பொருள் திரும்பவும் வந்து சேர்ந்தது அதிசயம்தானோ.