சிலை கடத்தல் வழக்கில் சர்வதேச குற்றவாளி சுபாஷ் சந்திர கபூர் உட்பட 6 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை
சிலை கடத்தல் வழக்கல் சர்வதேச குற்றவாளி சுபாஷ் சந்திர கபூர் உட்பட 6 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நீதிமன்றத்தில் சர்வதேச சிலை கடத்தல் குற்றவாளி சுபாஷ்சந்திரகபூருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த சுத்தமல்லி, வரதராஜபெருமாள் கோயிலில் கடந்த 2008-ம் ஆண்டு 20 சிலைகள் கொள்ளையடிக்கப்படடன. இதில் தொடர்புடைய அமெரிக்காவில் வசித்த சுபாஷ் சந்திரகபூர், அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சீவி அசோகன், மாரிச்சாமி, பாக்கியகுமார், ஸ்ரீராம் (எ) சுலோகு, பார்த்திபன், பிச்சுமணி ஆகிய 7 பேரை, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதில் பிச்சுமணி, அப்ரூவரானதால், மீதமுள்ள, சுபாஷ் சந்திரகபூர், சஞ்சிவிஅசோகன், மாரிச்சாமி, பாக்கியகுமார், ஸ்ரீராம் (எ) சுலோகு, பார்த்திபன் ஆகிய 6 பேர் மீதுள்ள வழக்கு கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.
இதற்காக சுபாஷ்சந்திரகபூரை, போலீஸார் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து நேற்று வந்தனர். மீதமுள்ள 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராயினர். நேற்று மாலை சுபாஷ்சந்திரகபூர் உட்பட 6 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். சுபாஷ்சந்திரகபூருக்கு ரூ. 4 ஆயிரமும், மீதமுள்ள 5 பேருக்கு தலா ரூ. 8 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.. பின்னர், போலீஸார் பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்தியச் சிறைக்கு 6 பேரையும் அழைத்துச் சென்று சிறையிலடைத்தனர்.
சேதுபாவாசத்திரம் அருகே நடந்த விபத்தில் காயமடைந்து, புதுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனியார் பள்ளி ஆசிரியை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிபட்டினத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளி மாணவர்களுடன், தாளாளர் சையது முகமது, ஆசிரியைகள் கார்த்திகா, சத்யா ஆகியோர் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே மனோராவை சுற்றி பார்க்க வந்தனர். கடந்த 29ஆம் தேதி வேனில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக அவர்கள் மனோராவை நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கார், வேன் மீது மோதியது.
இதில் வேனை ஓட்டி வந்த பள்ளி தாளாளர் சையது முகம்மது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சையது முகம்மது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஆசிரியைகள் கார்த்திகா, சத்யா ஆகியோர் படுகாயம் அடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த ஆசிரியை கார்த்திகா சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.