Pugar Petti: 'குடி'மகன்களால் பொதுமக்கள் அச்சம்; மது பாட்டில்களை சாலையிலேயே உடைத்துச் செல்லும் அவலம்
காலை வேளையில் இப்பகுதி வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் முகம் சுளிக்கும் வகையில் இப்பகுதி காணப்படுகிறது.
தஞ்சை அருகே வல்லம் பகுதியில் “குடி”மகன்களால், குடியிருப்பு மக்கள் அவதியடைந்து வருகின்றனர். வழிபாட்டு தலங்களுக்குச் செல்லும் பெண்கள், அச்சத்திலேயே இருக்கும் நிலை உள்ளது.
தஞ்சை அருகே வல்லம் தேர்வு நிலை பேரூராட்சி இப்பகுதியில் பள்ளிகள், கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தொழிற்பயிற்சி நிலையங்கள், நர்சிங் பயிற்சி அளிக்கும் கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன. இதனால் வல்லம் மிக முக்கியமான பகுதியாக விளங்குகிறது. இப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள், வல்லம் பேருந்து நிலையம் வந்து தஞ்சை, திருச்சி உட்பட பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
மேலும் வல்லம் பேருந்து நிலையத்தைச் சுற்றி அரசுப் பள்ளிகள், போலீஸ் நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், திருமண மண்டபங்கள், வணிக நிறுவனங்கள் நிறைந்து காணப்படுகின்றன. தினமும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், கூலித் தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் வல்லம் வந்து செல்கின்றனர். மேலும் வல்லத்தை சுற்றியுள்ள வண்ணாரப்பேட்டை, ஆலக்குடி பகுதிகளை சேர்ந்தவர்களும் வல்லம் பகுதிக்கு பல பணிகளுக்காக வந்து செல்கின்றனர்.
இதில் வல்லத்தில் இருந்து ஆலக்குடி செல்லும் சாலையில் உள்ள நெல் கொள்முதல் நிலையம் எதிரே குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இங்கு ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இதன் அருகில் ஏகெளரியம்மன் கோவில் மற்றும் பள்ளிவாசல் அமைந்துள்ளது.
இப்பகுதி தற்போது இரவு நேரத்தில் திறந்த வெளி மதுபான பார் போல் மாறி விட்டது. ஏராளமான குடிமகன்கள் இங்கு வந்து மது அருந்துகின்றனர். மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் கப், ஸ்நாக்ஸ் பாக்கெட் போன்றவற்றை அப்படியே திறந்தவெளியில் வீசி செல்கின்றனர். மேலும் பல நேரங்களில் பாட்டில்களை அப்பகுதியில் உடைத்து விட்டு செல்கின்றனர்.
சில நேரங்களில் மது அருந்திவிட்டு அவர்களுக்குள் தகராறிலும் ஈடுபட்டு வருகின்றனர். குடியிருப்பு பகுதிகளில் முன்னால் உள்ள திறந்த வெளிப் பாதை முழுவதும் குடிமகன்கள் உட்கார்ந்து கொண்டு மது அருந்தி வருவதால் குடியிருப்பு பகுதியில் உள்ள பெண்கள் கடைகளுக்கு செல்ல முடியாமல் மிகவும் இடையூறாக உள்ளனர்.
குறிப்பாக வழிபாட்டு தலங்களுக்கு மாலை நேரத்தில் வரும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. சில நேரங்களில் மாலை வேளையிலேயே இப்பகுதியில் அமர்ந்து மது அருந்துகின்றனர். உணவு வாங்கி வந்து சாப்பிட்டு விட்டு மீதியை சாலையிலேயே வீசி செல்கின்றனர். இதனால் துர்நாற்றமும் வீசுகிறது. வல்லம் வழியாக ஆலக்குடிக்கு பணி முடிந்து ஆண்கள் மற்றும் பெண்கள் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது குடிமகன்களால் அச்சத்திற்கு உள்ளாகின்றனர்.
காலை வேளையில் இப்பகுதி வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், முகம் சுளிக்கும் வகையில் இப்பகுதி காணப்படுகிறது. பள்ளிக்கு நடந்து வரும் ஒரு சில மாணவர்கள் காலில் உடைத்து போடப்பட்டுள்ள மதுபாட்டில்களின் துண்டுகள் குத்தி காயங்களும் ஏற்பட்டு உள்ளது. எனவே இதுகுறித்து உடன் நடவடிக்கை மேற்கொண்டு குடியிருப்பு மக்களின் அச்சத்தை போக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.